தேசிய மக்கள் சக்தியின் அண்மைக்கால எழுச்சி, நாட்டின் பெரும்பான்மையின மக்களின் அரசியல் போக்கைப் பலவீனப்படுத்திவிட்டதுபோல், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒருவித தடுமாற்ற நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது!
ஸஜித் மற்றும் ரணில் அணிகளுடன் இணைந்து செயல்பட்டுவரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்தடுமாற்ற நிலையிலிருந்து மீண்டுவர இறுதிக் கட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
முன்னைய காலத்துத் தேர்தல்களுடன் ஒப்பிடும் பொழுது, 2024 தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், முக்கியமானதொரு வேறு பாட்டைக் கொண்டு வந்துள்ளது என்பதைத்தான் இப்போக்கு கோடிட்டுக் காட்டுகின்றது.
ராஜபக்ஷாக்களால் போஷிக்கப்பட்டுவந்த இனவாதம், கோத்தாபய-ஞானசாரக் கூட்டினால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டி, பேரினத்தை அணி திரட்டிய அரசியல் நாடகம், இப்போது ஆடமுடியாத நிலைக்கு வந்துள்ளதால், இனிமேல் அந்தத் தேர்தல் வியூகம் சாத்தியப்படாது என்ற உண்மை, தேசிய மக்கள் சக்தியின் எதிரணியினர் அனைவரையுமே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை முஸ்லிம் சமூகத்தின் 'பொது எதிரியாக' கட்டமைப்பதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்த முயற்சிகள் வாக்களர்களிடம் எடுபடவில்லை என்பதை அநுரகுமார சிம்மாசனம் ஏறியதும் நன்கு புரிந்து கொண்டார்கள்!
இந்நிலையில், இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எந்த சுலோகத்தை முன்வைத்து வாக்குக் கேட்பது என்ற தடுமாற்றம்தான் அவர்களை அறுகம்பே நிகழ்வு, முஸ்லிம் விவாக- விவாகரத்தச் சட்டம், முட்டை, தேங்காய், அரிசி விலைக்கட்டுப்பாடு போன்றவற்றை பேசு பொருளாக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
யூதஸியோனிசவாதிகளை நாட்டுக்குள் கூடாரமிட வைத்தமைக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கில் சிலர், யூதர்கள் எமது பொக்குள்கொடி உறவுகள் என்ற வரலாற்று உண்மைகளை மேடைகளில் பேச ஆரம்பித்துள்ளமை ஆச்சரியத்தைத் தருகின்றது!
ஒரு வருடத்துக்குள் 43,000 பச்சிளம் குழந்தைகளையும், அப்பாவிப் பெண்கள், வயோதிபர்களையும் கொன்று குவித்தது மட்டுமல்லாது, 85,000 தொன்கள் கொண்ட குண்டுகளை எறிந்து, இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவிகளைக் காயப்படுத்தி, தினமும் சாகடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொலைகார இஸ்ரேலியர்கள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதை நியாயப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவல்ல!
இம்முறை தமக்கு வாக்களிக்காவிட்டால், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவடையலாம் என்றும், அது முஸ்லிம்களின் நலன்களை மிக மோசமாக பாதிக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டுவரும் அவர்கள், பிரசார மேடைகளில் இதனைத்தான் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது பேசுபொருளாக்கி வருகின்றனர்.
கடந்த காலத்தில் பாராளுமன்றத்தை அலங்கரித்த உறுப்பினர்களின் யோக்கியதை என்ன என்பதை வாக்காளர்கள் நன்கு அறிந்து, தெரிந்து, புரிந்து வைத்துள்ளார்கள்.
தான் பாராளுமன்றத்திற்கு தெரிவானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் கூட்டணியில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அரபு நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குத் தன்னால் அநுர அரசுக்கு உதவ முடியும் என்ற பொருள்பட சில முஸ்லிம் தலைமைகள் நாசூக்காகப் பேசி முஸ்லிம்களின் வாக்குகளை அள்ளிக்கொள்ள முயற்சிக்கின்றன.
அதாவது, சில மாதங்களுக்கு முன்னர் 'முஸ்லிம்களின் விரோதி' என முத்திரை குத்தப்பட்ட அநுர குமார திசாநாயக்கவுடன் இணைந்து கொள்வதில் அவர்களுக்கு இப்பொழுது எந்தப் பிரச்சினையும் இல்லையாம்! இது முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து அந்நியப்படுத்தக் கூடிய ஆபத்தான ஒரு நிலைப்பாடாகும்!
அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம் என்ற விதத்தில் தெரிவிக்கப்படும் அச்சப்பாடுகளை இரட்டை வேட நாடகங்களின் பின்புலமாகவே நோக்க வேண்டியுள்ளது.
மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு திசைகாட்டியைத் தவிர, ஏனைய சின்னங்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் தொனிப் பொருளாக இருப்பதை உணர முடிகின்றது!
முஸ்லிம்கள் ஒற்றுமையாய், விழிப்புணர்வுடன் சமுதாயத்தின் நலன்கருதி, நல்லவர்களை - சமுதாயத்துக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்களை- நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தமது பொன்னான வாக்குகளைப் பிரயோகிப்பது காலத்தின் தேவை!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments