தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறி, இளைஞர் ஒருவர் கொலை செய்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. 26 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமாரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மதன்குமார் பத்தாம் வகுப்பு படித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பிய நிலையில், தற்போது மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்துப் பெண் கேட்டுள்ளனர். அப்போது ரமணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளனர். ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்கவழக்கம் சரியில்லை என ரமணியின் பெற்றோரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரமணியிடம், மதன்குமார் நேற்று முன் தினம் மாலை திருமணம் தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது ரமணி, மதன்குமாரைத் திட்டி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் நேற்று காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறித் தகராறு செய்துள்ளார்.
அப்போது மதன்குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தி விட்டுத் தப்பியோட முயன்றார். அவரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.
இதற்கிடையே ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த பள்ளியில் டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால் யாரையும் கேட்காமல் நேராக ஓய்வறைக்குச் சென்ற மதன், ஆசிரியையைக் கொன்றதாக ஜியாவுல் ஹக் தெரிவித்தார். மதன் பள்ளிக்கு வந்தபோது காவலாளி இல்லை எனவும் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments