Ticker

6/recent/ticker-posts

Ad Code



50 வருட சர்வாதிகார ஆட்சியை முடித்து, சிரியாவைக் கைப்பற்றிய ஜோலானி?


சிரியா என்பது மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்தியதரைக் கடற்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு.  இது மேற்கில் மத்திய தரைக்கடல், வடக்கே துருக்கி, கிழக்கு மற்றும் தென்கிழக்கே ஈராக், தெற்கே ஜோர்டான், தென்மேற்குப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் லெபனானை எல்லைகளாகக் கொண்ட நாடாகும். 

இது 14 மாநிலங்களை உள்ளடக்கிய குடியரசாகும்.  டமாஸ்கஸ்  இதன் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும். 185,180 சதுர கிலோமீற்றர்  பரப்பளவில் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர்; இந்த நாடுதான் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!

அரசுப் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சி படையினர், டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும், அதிபர் ஆஸாத் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.

சிரியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஸார் அல்- ஆஸாத் - ரஷ்யா, ஈரான் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால், அவரது அரசை ஒழிக்க, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிரமாகச் செயற்பட்டு வந்தன. இதற்கென இந்நாடுகள் கிளர்ச்சிக் குழுக்களைத் தூண்டிவிட்டும், ஆயுதங்களை கொடுத்தும் நாட்டிற்குள் கலவரங்கள் வெடிப்பதற்கும் ஏற்பாடு செய்து வந்தன.

யாரிந்த பஸார் அல்-அஸாத்?

1965 செப்தம்பர் 11ம் திகதி பிறந்துள்ள பஸார் அல்-அஸாத், அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும், மருத்துவருமாவார். 1971 முதல் 2000 வரை சிரிய அரசுத்தலைவராக இருந்த ஹபீஸ் அல்-அஸாத்தின் மகனான இவர்,  1994ல், தனது மூத்த சகோதரர் பாஸில் அல்-அஸாத் வாகன விபத்தொன்றில் இறந்ததையடுத்து, முடிக்குரிய வாரிசானார்.  இவர் 1998ல் லெபனான் மீதான சிரிய ஆக்கிரமிப்பை வழிநடாத்தியவராவார். 2000 ஜூன் 10ல் தந்தை இறந்ததையடுத்து, 2000 ஜூலை 17ல் அரசுத்தலைவரான இவர், தற்போது பதவி கவிழ்க்கப்படும் வரை சிரியாவின் 19வது அரசுத்தலைவராகப் பணியாற்றியுள்ளார். 

2011ல் சிரியாவின் அஸாத் மற்றும் அவரது அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலை துாக்கியது. இதுவே சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலி, உலகில் அமைதியற்ற நாடுகளுள் ஒன்றாகச் சிரியாவை மாற்றிவிட்டது.

2011ம் ஆண்டு இந்நாட்டின் அதிபர் ஆஸாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் காரணமாக அந்த நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்றெல்லா இடங்களிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருவதுடன், உட்கட்டமைப்புகள் 97 சதவீதம் அழிந்து போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சிரியாவில் 2015ல் நடந்த போர், அதிபர் ஆஸாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டபோதிலும், சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கி, ரஷ்யாவின் முப்படைகளும் சிரிய கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கியதால், அதனைச் சமாளிக்க முடியாமல், கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தமையினால் அதிபரை ஆட்சியிலிருந்து அகற்றும் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சி தோல்வியுற்றது.

தற்போது,  உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளமையும்,  இஸ்ரேலுடனான மோதலில் ஈரான் தனது படைகளை அனுப்ப முடியாத சூழலில் உள்ளதாலும், சிரியா அதிபருக்கு ஆதரவாகப் போரிட்டு வந்த ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் தாக்குதலினால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாலும், அதிபர் ஆசாத்துக்கு எதிராகப் புதிதாக உருவான கிளர்ச்சிப்படை, துருக்கி ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கி அஸாதை நாட்டைவிட்டும் துரத்திவிட்டது.

சிரியாவின் முக்கிய நகரங்களான அலப்பே, ஹோம்ஸ் என்பன அடுத்தடுத்த நாட்களில் கிளர்ச்சிப்படை வசமாகிவிட்டன; கிளர்ச்சிப் படைகளின் ஒரு பிரிவு டமஸ்கஸைக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்நகரங்களைப் பாதுகாத்து வந்த சிரியா அரசுப் படையினர், ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும், பலர் கிளர்ச்சிப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடக்கூடாது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் கிளர்ச்சிப்படைத் தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் பஸார் அல்-அஸாத்தின் ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டாடி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளிக் குழுவே முக்கிய காரணமாகும்.  அல் கொய்தாவின் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி உருவாக்கியதே HTS என்ற அமைப்பாகும்.

அபு முகமது அல்-ஜோலானி இளம் தலைவரென்றாலும், அவருக்கு ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அறிவு நிறையவே உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

யாரிந்த ஜோலானி?


1982ம் ஆண்டு சவூதி அரேபியா - ரியாதில் பிறந்துள்ள அபு முஹமது அல்-ஜோலானி ஒரு சாதாரண குடும்பப் பின்புலத்தை கொண்டவர்.  அவரது தந்தை பெற்றோலியம் பொறியாளராகப்  பணியாற்றியவர். இவர்களது குடும்பம் 1989ல் சிரியாவுக்குச் சென்று டமாஸ்கஸ்ஸுக்கு அருகேயுள்ள கிராமமொன்றில் குடியேறியுள்ளது.

2003ல்  ஜோலானி ஈராக் சென்றுள்ளார்.  இக்காலப்பகுதியில்தான் அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்தது. அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக அல்-கொய்தாவில் அபு முஹமது அல்-ஜோலானி சேர்ந்துள்ளார்.

2006ல் ஈராக்கில் வைத்து அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, ஐந்து வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்-ஜோலானி, பின்னர் சிரியாவில் அல்-கொய்தாவின் கிளை ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார், ஆரம்ப காலத்தில் அவர் அல்-கொய்தாவின் "இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக்" தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதியுடன் பணியாற்றி வந்துள்ளார்,

ஏப்ரல் 2013ல், அல்-பாக்தாதி அல்-கொய்தாவுடனான உறவுகளைத் துண்டித்து, சிரியாவில் தனியாக வளரப்போகிறோம் என்று அறிவித்தபோதிலும்,  அபு முகமது அல்-ஜோலானி தொடர்ந்து அல் கொய்தாவுடன் நட்புடன் இருக்கவே விரும்பினார்.

2016ல் ISIS அமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்  2017ல் HTS அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பை உருவாக்கி ஏழு வருடங்களில் சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.  அபு முகமது அல்-ஜோலானியுடன் தற்போது 10க்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் கைகோர்த்துள்ளன.

சிரியாவிலிருந்து விமானத்தில் ரகசியமாகத் தப்பியோடிய அதிபர் பஸார் அல் ஆஸாத் , தற்போது ரஷ்யாவினுள் தஞ்சம் புகுந்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஆஸாத்தின் வீழ்ச்சி காரணமாக  இன்று அந்த உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. சிரியா அதிபர் ஆஸாதின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை கைப்பற்றியுள்ள  ஜோலானி, அங்கெல்லாம் புதிய இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

2014ல் ஜஸீரா தொலைக்காட்சியுடனான தனது முதலாவது நேர்காணலின்போது பேசுகையில், நான் ஆட்சிக்கு வந்தால் "இஸ்லாமிய சட்டம்" கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிபர் ஆஸாத் தலைமறைவாகிவிட்ட நிலையில், அபு முகமது அல்-ஜோலானி சிரிய நாட்டின் தலைவராகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.
ஆனால், மாஸ்கோவின் கூட்டாளியான அதிபர் பஸார் அல்-அஸாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடந்து வரும் அரசியல் மாற்றத்துக்குள் அமெரிக்கா தலையிடக்கூடாது என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தப்பியோடிய சிரிய அதிபர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் எனவும்,  பெரும்பான்மையான பொதுமக்கள் சுன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதுவும், அதிகாரத்தை கைப்பற்றியிருப்பவர்களும் சுன்னிப் பிரிவினராக இருப்பதாலும், பொதுவாக  உலக நாடுகள் அனைத்திலுமே யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான்  ஆள்கிறார்கள் என்பதாலும் சிரியாவின் ஆட்சி மாற்றம் நிலைத்திருக்கலாம் என்று நம்பப் படுகின்றது!

இருந்தபோதிலும், தொடர்ந்தும் கலவரங்கள், அமைதியின்மை ஏற்படுமானால், சிரிய மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகலாம். அம்மக்களுக்கு மன உறுதியை அளிக்க எல்லாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments