Ticker

6/recent/ticker-posts

Ad Code



“இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும்!” : எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!


ஃபெஞ்சல் புயல், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அடுத்து இரு நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி (டிசம்பர் 9) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தில், முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்து விடையளித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா முன்மொழியப்பட்ட போது தி.மு.க அதை எதிர்க்கவில்லை என பேசினார். இதற்கு தி.மு.க அரசு தரப்பில் அவையிலேயே பதிலடி தரப்பட்டது.

இதனையடுத்து கனிமவள மசோதாவை எதிர்க்காதது தி.மு.க இல்லை, அ.தி.மு.க தான் என அம்பலப்பட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X வலைதளப் பக்கத்தில்,“மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments