ஆவா என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் தலைவன் என நம்பப்படும் பிரசன்னா நல்லலிங்கம் என்ற இலங்கையர் ஒருவர் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நல்லலிங்கம் இலங்கை மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் இந்த வருட தொடக்கத்தில் கனடாவின் டொரன்டோவில் கைது செய்யப்பட்டார்.
அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரைப் பயன்படுத்தும் நல்லலிங்கம், 2022 செப்டம்பர் இல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னியூவில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்குழுவின் எதிரிக் குழுவான எல்.சி. பாய்ஸ் (LC Boys) என்ற குழுவைச் சேர்ந்த கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அபிராமன் பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
கத்திகள் மற்றும் ஆயுதம் ஏந்தியவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதுடன் நல்லலிங்கம் தான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
சம்பவத்தின் போது, நல்லலிங்கம் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு சிவகுமாரன் ஜீவரத்னாவை கொலை செய்ததற்காக இலங்கையில் தேடப்பட்டு வந்தார்.
அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால், இன்டர்போல் ஒரு சர்வதேச பிடியாணையைப் பிறப்பிக்க வழி செய்தது.
2021 இல் பரிஸ் உணவகம் ஒன்றில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலில் பங்கு வகித்ததற்காக மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் நல்லலிங்கம் பிரான்சிலும் குற்றஞ்சாட்டப்பட்ட வரலாற்றையும் கொண்டிருந்தார்.
கியூபெக்கில் உள்ள எல்லைக் கடவையில் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி நல்லலிங்கம் 2022 டிசம்பரில் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் எனக் கூறப்படுகிறது.
அகதிகள் அனுமதி விசாரணைக்காக அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக கனடாவில் தங்கியிருந்தார். விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அதிகாரிகள் அவரை 2024 மே மாதம் கைது செய்தனர்.
அவரது கைரேகைகள் இன்டர்போலின் கோப்பில் உள்ள பதிவுகளுடன் பொருந்தியமையானது, அவரை அடையாளம் காண வழிவகுத்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் முந்தைய குற்றவியல் வரலாறு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மேற்கோள் காட்டி, பிரெஞ்சு அதிகாரிகள் அவரை ஒப்படைக்குமாறு உத்தியோகபூர்வமாக கோரியுள்ளனர்.
நல்லலிங்கம் தற்போது கனடாவில் பொலிஸ் காவலில் உள்ளார், அவரை நாடுகடத்துவதற்கான விசாரணை மே 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
tamilmirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments