
வனத்தில் வேறுபட்ட இனங்களாகப் பல்லாயிரம் பழங்குடியினர் வாழ்கின்றனர். ஒவ்வோர் இனமும் வெவ்வேறு மொழிகள் பேசுவதால், ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வதில்லையா அல்லது தாம் நேசிக்கும் வனத்தைப் புனித பூமியாகக் கருதிவரும் அவர்கள், அதன் புனிதத்தன்மையைப் பேணுவதற்காக அமைதிகாக்கின்றனரா?
பதில் காண முடியாத கேள்விகள் சிலதை தனக்குள் சுமந்தவனாக அவன் தொடர்ந்தும் நடக்கலானான்.
சிறிது தூரம் நடந்த அவனுக்கு மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
சில மனிதர்கள் மரங்களின் அடிவாரங்களில் வில்களை ஏந்தியவர்களாக குந்தியிருந்து, எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்கள் மிருகங்களை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டான் இர்வின்! அவர்களுட் சிலர் பிறந்த மேனியாகவும், இன்னும் சிலர் அரை நிர்வாணமாகவும் காணப்பட்டனர்.
இதனைப் பார்க்கின்றபோது, வில் - அம்புகள் உபயோகித்து யுத்தம் புரிந்த பழங்காலத்து யுத்தகளம் அவன் நினைவில் வந்துபோனது.
வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்றாகும். இது அம்புகளை எய்வதற்குப் பயன்படுகின்றது. அம்பு எய்வதற்கான ஆற்றலைப் பெறுவது, வில்லின் மீள்தகவுத் தன்மையில் தங்கியுள்ளது. வனவாசிகள் நெடுங்காலமாக வில்-அம்புகளையே தமது பாதுகாப்புத் தடமாகவும், ஜீவனாம்சம் தேடும் கருவியாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இர்வின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அவனுக்குச் சமீபமாகவிருந்த மரத்தடியில் குந்தியிருந்து வில்லினால் குறிபார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் அம்பு தூரத்திலிருந்த ‘மான்’ ஒன்றின் கழுத்துப் பாகத்தைத் துளைத்தபோது, அது துடிதுடித்து உயிர் விட்டுக் கொண்டிருந்தது. தன் கையிலிருந்த வில்லை அப்படியே நிலத்தில் போட்டுவிட்டு இறந்து கிடந்த மானைத்தூக்கித் தோளில் போட்டுக் கொண்டவனாக வில் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்து, அதனை எடுத்துக் கொண்டவனாக அவனது இன்றைய உழைப்பை நிறைவு செய்துகொண்டு, ‘பெரியகல்’ பக்கமாக நடக்கலானான்!
இர்வினுக்கு இப்பொழுது புரிந்துவிட்டது; வேட்டையாடும் நோக்கில்தான் மரங்களுக்கு மறைந்து மனிதர்கள் குந்தியிருகின்றார்கள் என்பது!
தன் கையிலிருந்த ஊன்றுகோலை நிலத்தில் ஊன்றியபடி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவன், தனது நடைபாதையில் இப்பொழுது பெரும் குழிகளை எதிர்கொள்ளலானான்!
கல்லூரிக்காலத்தில் இல்லங்களுக் கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் போது, கம்பூன்றித் தூரப்பாய்ந்து முதலிடம் பெற்று ‘மெடல்’ வாங்கியுள்ள அவன், அதே நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் கையிலிருந்த ஊன்றுகோலைக் கொண்டு குழிகளைத் தாண்டித் தூரப்பாய்ந்தவனாக தொடர்ந்து முன் செல்லலானான்! அப்பொழுதுதான் அவனை நோக்கி அந்தக் கொடூர மிருகம் விரைந்து வரலானது!
அது வந்துகொண்டிருந்த வேகத்தையும், அதன் முகத்திலிருந்த கொடூரத்தன்மையும் கண்ட அவன், இனிமேல் தனது உயிருக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை மட்டும் உணர்ந்தான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments