
ரெங்க்மாவின் தந்தை மிருகத்தின் கழுத்துப்பகுதியில் சொறுவப்பட்டிருந்த . “க்யூரே” தடவப்பட்ட அம்பை மெதுவாக இழுத்தெடுத்துவிட்டு, தனது இடையில் சொருவியிருந்த கூராயுதத்தால் பழுதுபட்டிருந்த பகுதி முழுவதையும் சுரண்டி எடுத்தார்.
தனது சிறு பிராயத்தில் வேட்டையின் மரபுகளையும், நுட்பங்களையும் ஒவ்வொன்றாக செரோக்கிக்கு சொல்லிக்கொடுத்த அவர், “க்யுரே” கொடியையும் அதன் இலைகளையும் வேகவைத்து அம்புகளுக்குத் தடவும் விஷத்தை எப்படித் தயார் படுத்துவது, அதனை அம்புகளின் நுனியில் எவ்வாறு தடவுவது என்பன போன்றவற்றை செரோக்கி அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டான்.
இப்போதைய அவரது நடவடிக்கை செரோக்கிக்குப் புதிதாகவிருந்ததால், அதனை உன்னிப்பாகக் கவனிக்கலானான்.
அவர் தன்னருகில் நின்றிருந்த திடகாத்திர மான ஓர் இளைஞனிடத்தில், எங்காவது நீர் நிலை இருக்கிக்கின்றதா என்று பார்த்து வரச்சொன்னார். இளைஞன் தீப்பந்தம் ஏந்திக்கொண்டிருந்த நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு சென்று, சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன், சற்றுத்தூரத்தில் நீர்நிலையொன்று இருகின்ற செய்தியை அவரிடத்தில் கூறினான்.
விழுந்து கிடந்த மிருகத்தைத் தனது தோளில் சுமந்து
கொண்ட ரெங்க்மாவின் தந்தை, சுற்றி நின்றிருந்தவர்களை விழித்து அவரைத் தொடர்ந்து வரும்படி கூறிவிட்டு, இளைஞனின் வழிகாட்டுதலில் நீர்நிலை நோக்கி நடக்கலானார்!
தான் வேட்டையாடிய மிருகத்தைச் சுமந்துகொண்டு, நீர் நிலை நோக்கி அவர் ஏன் செல்கின்றார் என்பது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் புதிராக இருந்தபோதிலும் அவர்கள் ரெங்க்மாவின் தந்தையின் கட்டளையை மதித்து, அவரைத் தொடர்ந்து நடக்கலாயினர்! அணியின் இறுதியில் ரெங்க்மாவை இடைகோர்த்து செரோக்கி நடந்து கொண்டிருக்க, இர்வினும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்!
சில கணங்களில் அவர்கள் அமேசன் வனத்துக்குள் இருக்கும் குளக்கரை ஒன்றை அடைந்தனர். அந்தக் குளத்தைச் சுற்றிவர வானுயர வளர்ந்திருந்த மரங்களை ஊடறுத்து வெகு தூரத்திலிருந்து மிளிர்ந்துவந்த நிலவொளி குளத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருந்த கொடிகளில் தங்கியிருந்த வண்ண மலர்களில் பட்டுத்துத் தெறித்து மலர்களுக்கு மெருகு ஊட்டியது. பச்சைப்பசேலென்ற இலைகள் குளத்துநீரை வெளிக்குத் தென்படாநிலையில் மறைத்து வைத்திருந்தன.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments