
"அநீதி இழைக்கப்படும்போது மௌனம் காப்பது, அநீதியாளனுக்குத் துணை நிற்பதற்குச் சமம்" என்று 'அமெரிக்க மக்கள் வரலாறு' என்ற நூலை எழுதிய 'ஹோவர்ட் சின்' குறிப்பிடுகின்ற விடயம் இன்றைய இக்கட்டான சூழலுக்கு மிகப் பொருத்தமான ஒரு வெளிப்பாடாகும்!
எண்ணெய் வளங்களைக் கொள்ளையிடும் நோக்கோடு, 'வெனிசூலா' என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது, இதற்கு முன்னர் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளிலும் கூட அமெரிக்கா தலையிடுவதற்குச் சொல்லும் "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" போன்ற காரணங்கள் வெறும் கண்துடைப்பு என்பதை எப்போதோ மிக நாசூக்காக தனது நூலின் மூலம் வெளிப்படுத்தியவர் 'சின்' என்ற இந்த அமெரிக்கர்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட பக்கங்களையும், அதிகார வர்க்கத்தின் முகமூடிகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இந்நூல் வெளியிடப்பட்டு நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட அமெரிக்காவின் அராஜகப் போக்கை அது புடம் போட்டுக் காட்டுவது அதன் சிறப்பம்சமாகும்.
நூலை எழுதிய ஹோவர்ட் சின், 1922 ஆகஸ்ட் 24ம் திகதி நியூயார்க் நகரில், யூதப்பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தவர். வரலாற்றாசிரியர், பேராசிரியர், நூலாசிரியர் மட்டுமன்றி, அரசியல் செயற்பாட்டாளராகவும், மனித உரிமைப் போராளியாகவும், அக்காலை போருக்கு எதிரான கருத்துக்களைத் துணிந்து எழுதிய ஒருவராகவும் வரலாற்றில் இவர் மதிக்கப்படுகின்றார்.
தனது 18வது வயதில் கப்பல் தளமொன்றில் பணிசெய்த பின்னர், விமானப் படையில் சேர்ந்த இவர், நியூயார்க் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று, 1956ம் ஆண்டு முதல் அடலாண்டாவில் ஸ்பெல்மன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தன்னை ஒரு ஜனநாயக சோஷலிசவாதி என்று
இனங்காட்டிக் கொண்ட இவரது திறமை கண்டு, அக்காலை வாழ்ந்த 'ஆவ்ரம் நோம் சோம்சுக்கி' என்ற புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் கூட இவரின் துணிச்சலான சிந்தனைகளைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இவர் எழுதிய 12 நூல்களில் 'அமெரிக்க மக்கள் வரலாறு' இலட்சக் கணக்கான பிரதிகள் விற்பனையாகிப் புகழ் பெற்றது.
பொதுவாக வரலாற்று நூல்கள் வெற்றிக் கதைகளைக் கூறுவன; ஆனால் ஹோவர்ட் சின் அந்த வெற்றிக்கதைகளின் பின்னணியில் தோய்ந்துள்ள இரத்தக் கறைகளையும், துரோகங்களையும் வெளிப்படுத்தியுள்ளமையால், அதிகாரச் சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்களின் பார்வையிலிருந்து வரலாற்றை அணுகாத, ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரோடும் போராட்டத்தோடும் அணுகி எழுதப்பட்ட நூலாக இது மதிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் அதிகாரப்பிடியிலும், அக்கிரமத்தின் நிழலிலும் புதைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றிப் பேசும் இந்நூலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தொடுக்கப்பட்ட ஓர் அறிவுபூர்வமான தாக்குதல் என்றுதான் பலரும் விமர்சித்துள்ளனர்.
கொலம்பஸின் வருகையைப் பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பாக உலகம் கொண்டாடியபோது, அதனை 'பழங்குடியினர்' மீது நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூர ஆக்கிரமிப்பாக வெளிப்படுத்திய நூலாசிரியர், தன்னை ஒரு ஜனநாயக நாடாக இனங்காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, ஏகாதிபத்தியத்தின் நிஜமான முகத்தை 'ஜனநாயகம்' என்ற முகமூடியால் மறைத்துச் செயல்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
வரலாறு ஒருபோதும் நடுநிலையானதல்ல; 'ஓடும் இரயிலில் நடுநிலையாக எவராலும் நிற்க முடியாது' என்பது அவரது வாதமாகும்.
காஸாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, மனிதப் படுகொலைகளைச் செய்ய ஆதரவு வழங்கிய அமெரிக்கா, ஈரானில் மனித உரிமை மீறப்படுவதாகக் குரல் எழுப்பி, இஸ்ரேலுடன் இணைந்து அந்த நாட்டைத் தாக்க முற்பட்டதன் பலன், இப்போது மத்திய கிழக்கில் பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது.
1953 காலகட்டத்தில் ஈரானின் பிரதமராயிருந்த முஹம்மது மொசாதிக், ஈரானிலிருந்த வெளிநாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கிய காரணத்தால், அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் அரங்கேற்றிய 'ஒபரேஷன் அஜாக்ஸ்' (Operation Ajax) மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்து அவரைப் பதவியிறக்கி 'ஷா பஹ்லவி' என்ற அடிவருடி மன்னராக்கப்பட்டார்!
அதன் பின்னர், 25 வருடங்களுக்குப் பிறகு, 1979ல் ஈரானிய மக்கள் புரட்சியின் மூலம் 'மன்னர் ஷா'வைத் துரத்தியடித்தனர்.

ஷா துரத்தியடிக்கப் பட்டதால், கடந்த ஐந்து தசாப்தங்களாகப் பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரான் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் சிதைத்து வந்தன.
'ஜனநாயகம்' என்ற போர்வையில் ஒரு நாட்டை விடுவிப்பதாகக் கூறி, அந்நாட்டுக்குள் பிரவேசிப்பதை தனது இராஜதந்திரமாக்கி, அங்குள்ள வளங்களைச் சூறையாடிக் கொண்டே தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவுவதைத் தனது அரசியல் தந்திரமாகக் கொண்டுள்ள அமெரிக்கா, இப்போது மீண்டும் ஈரானில் அரசியல் மாற்றம் வேண்டி அந்த நாட்டை போருக்கு இழுத்துள்ளது.
அதுமட்டுமன்றி, உலகில் எங்காவது போர் நடந்தால் மட்டுமே அமெரிக்காவின் ஆயுத நிறுவனங்கள் இலாபமீட்ட முடியும்; ஒரு போர் முடியும்போது, மற்றொன்றைத் தொடங்குவதன் மூலம் தனது போர் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, இதனை நீண்டகாலமாக புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலாக மத்திய கிழக்கில் நிகழ்த்தி வருகின்றது.
இஸ்ரேலை ஆதரிக்கும் அரபு நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாகப் பாசாங்கு காட்டும் அமெரிக்கா, எதிர்க்கும் நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்க்க முற்படுகின்றது.
இப்போது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தொடங்கி வைத்துள்ள ஈரானுக்கெதிரான யுத்தமும் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்ட ஒன்றுதான்!
வரலாறு நமக்கு பல சூழ்ச்சிகளைப் பாடங்களாகப் பயிற்றுவித்திருந்தபோதிலும், நிகழ்காலத்தின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் (Geopolitical Agendas), தந்திரங்களையும் புரிந்துகொள்ள இயலாதவாறு பல்வேறு 'சிந்தனைப் போக்குக்குள்' நாம் சிறைப்பட்டுக் கிடக்கிறோம்.
மத்திய கிழக்கின் எண்ணெய் வளம், அந்த மண்ணிற்கு வரமாக அமைவதற்குப் பதிலாக தீராத காயங்களையும், வலிகளையும் பரிசாகத் கொடுத்திருக்கின்றது.
தனக்கு எதிரான தாக்குதலுக்கு எந்தெந்த நாடுகள் தங்கள் மண்ணையோ அல்லது வான்வெளியையோ அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கின்றனவோ அந்த நாடுகளிலுள்ள அமெரிக்க அல்லது பிற நாடுகளின் இராணுவத் தளங்கள் தனது ஏவுகணை இலக்குகளாக மாறும் என்பதை ஈரான் ஏற்கெனவே கடிதம் ஒன்றின் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்து விட்டது.

சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போரில் ஈரானில் இதுவரை 176 குழந்தைகள் உட்பட 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உயிரிழந்தோர் தொகை 8000த்தைத் தாண்டியிருக்கலாம் என சில ஊடகங்கள் ஊகிக்கின்றன.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகரக் காவல் படை உலக நாடுகளை அதிரவைக்கும் வகையிலான ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் விடுத்த எச்சரிக்கைகளையும், சமாதானம் தொடர்பான சமிக்ஞைகளையும் ஈரான் முற்றாக நிராகரித்துவிட்டு, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளதை அறிய முடிகின்றது.
ஈரானிய அதியுயர் தலைவர் மற்றும் 48 முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
"எதிரிகளின் மகிழ்ச்சியான நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன; அமெரிக்கர்கள் இனி உலகத்தில் எந்த இடத்திலும் பாதுகாப்பாக இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கில் ருத்ரத்தாண்டவமாடி வருகின்றது!
தமது தலைவர்கள் பலியான ஆத்திரத்திலுள்ள ஈரான், பேச்சுவார்த்தைகளை விட இராணுவ ரீதியான பதிலடிகளுக்கே முன்னுரிமையளிக்க முற்பட்டுள்ளது; அதன் தொடர் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பிடியை பலவீனப்படுத்தி வருகின்றது.
அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மூலம் தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனத் தப்புக் கணக்குப் போட்ட ட்ரம்ப், தனது நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் தலைவர்களின் ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் துச்சமாக மதித்து ஈரானுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்ததன் மூலம் நிலை குலைந்துவிட்டார்!
அவரது தான்தோன்றித்தனதுக்கும், தவறான கணிப்பிற்கும் ஈரான் தனது பதில் தாக்குதல்களால் பாடம் கற்பித்யுக் கொண்டிருக்கின்றது.
இந்த மோதல் உலகளாவிய ரீதியில் எரிசக்தி விநியோகத்தை அதிகமாகப் பாதித்துள்ளது. தினமும் சுமார் இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்யுடன் கடந்து செல்லும் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் எடுத்துள்ள நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

இஸ்ரேலின் சூழ்ச்சியால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் முக்கிய பாத்தினமேற்று நடித்துவரும் அமெரிக்கா, உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் முன் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்பதையும், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் தொடர்ந்தும் எரியூட்டப்பட்டுவருவதால், 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்ற நிலையில் மத்திய கிழக்கை விட்டும் இலவச அநுசரணை பெற்றுவந்த அமெரிக்கர், ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை சமூக ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.
'ஈரான் என்பது தொன்மையான வரலாறு, பல ஆயிரம் ஆண்டுகளான நாகரிக மரபு மற்றும் உறுதியான தேசிய அடையாளம் கொண்ட நாடு. இதனை வரலாறும் நாகரிகமும் இல்லாத நாடுகளுடன் ஒப்பிடக் கூடாது' என்று இராணுவ பிரிகேடியர் ஜெனரல் ரசூல் சனாயி-ராத் தெரிவித்துள்ள கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது மத்திய கிழக்கில் ஈரான் ருத்ரவத் தாண்டவமாடி வருகின்றது.
எரிகின்ற நெருப்பில் எண்ணெயூற்றும் நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, மத்திய கிழக்கில் அமைதியும், சமாதானமும் ஏற்பட சர்தேசம் வகைசெய்வது காலத்தின் தேவையாகும்
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments