Ticker

6/recent/ticker-posts

ஈரானுடன் ரகசிய டீல்? டிரம்ப் கூறும் டாப் பெர்சன்.. யார் இந்த முகமது பாகெர் காலிபாப்?


ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க டிரம்ப் விதித்த 48 மணிநேர கெடுவை 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். ஈரானின் 'முக்கிய நபர்' ஒருவருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அதில் பெரும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார்.

ஈரானுடன் ரகசிய டீல்? டிரம்ப் கூறும் டாப் பெர்சன்.. யார் இந்த முகமது பாகெர் காலிபாப்?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு தகவல் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடன் "மிகவும் ஆக்கபூர்வமான" பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி பங்கேற்கவில்லை என்றும், ஒரு 'முக்கிய நபர்' இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். யார் அந்த 'முக்கிய நபர்' என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. முகமது பாகெர் காலிபாப் (Mohammad-Bagher Ghalibaf) தான் டிரம்ப் குறிப்பிட்ட அந்த நபர் என மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. யார் இந்த முகமது பாகெர் காலிபாப்?, டிரம்ப் கூறியது  என்ன?, ஈரானின் பதில் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை: டிரம்ப் சொல்வது என்ன?

டிரம்ப் தனது பேட்டியில், "நாங்கள் ஈரானுடன் மிக வலுவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் இது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஈரான் தரப்பில் ஒரு 'டாப் பெர்சன்' (Top Person) எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தொழிலதிபர் விட்கோஃப் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் பாகிஸ்தானில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் முன்னிலையில் ஈரான் அதிகாரிகளுடன் சந்திப்பு நடக்கலாம் என்றும் செய்திகள் கசிகின்றன.

டிரம்ப் ஆடும் பொய் ஆட்டம் -ஈரான் தாக்கு

ஆனால் டிரம்பின் இந்த வாதத்தை ஈரான் அடியோடு மறுக்கிறது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் (Mohammad-Bagher Ghalibaf) இது குறித்துக் கூறுகையில், "அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், முதலீட்டாளர்களை ஏமாற்றவும் டிரம்ப் ஆடும் பொய் ஆட்டம்" என்று சாடியுள்ளார்.

மேலும் டிரம்ப் பேட்டியைக் குறித்து பேசிய ஈரானின் முன்னாள் அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் சயீத் ஜலீலி, "அமெரிக்கா இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது. ஈரானின் வலிமை தான் டிரம்பை இறங்கி வர வைத்திருக்கிறது என்றும், இதனை ஒரு வெற்றியாகப் பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார்.

யார் இந்த முகமது பாகெர் காலிபாப்?

ஈரானிய அரசியலில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க ஒருவராகக் கருதப்படுபவர் முகமது பாகெர் காலிபாப் (Mohammad-Bagher Ghalibaf). வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இவருக்கு நீண்ட அனுபவம் உண்டு. 1961-ல் பிறந்த இவர், ஈரான்-ஈராக் போரில் மிக இளம் வயதிலேயே (சுமார் 21 வயதில்) ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றவர்.

ஒரு பயிற்சி பெற்ற ராணுவ விமானி ஆன இவர், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) விமானப்படை பிரிவுக்குத் தலைமை தாங்கியவர். ஈரானின் தேசிய காவல்துறைத் தலைவராகவும், நாட்டின் தலைநகரான தெஹ்ரானின் மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

48 மணிநேர கெடு... பின்னணியில் நடப்பது என்ன?

உலகமே உற்று நோக்கிய அந்த 48 மணிநேர கெடு முடிவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு ஒட்டுமொத்தப் போக்கையும் மாற்றியிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் மறுத்தால் போர் உறுதி என்ற நிலையில், இப்போது அந்த கெடுவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளார் டிரம்ப்.

இதற்கான காரணம் என்ன? என்பதைக் குறித்து சொன்ன அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானுடன் மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டம் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், டிரம்ப் ஒரு "பிரம்மாண்ட ஒப்பந்தம்" தயாராகிவிட்டதாகச் சொல்கிறார். ஈரான் அது "பச்சை பொய்" என்கிறது. வரும் 5 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதி திரும்புமா அல்லது போர் வெடிக்குமா என்பது தெரிந்துவிடும்.

ஈரானுடன் ரகசியப் பேச்சுவார்த்தை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஏன் இவ்வளவு முக்கியமானது?

உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்களில் சுமார் 20% முதல் 30% வரை இந்த கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதனை ஈரான் மூடினால், உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.

2. முகமது பாகெர் காலிபாப்பை ஏன் அமெரிக்கா ஒரு 'முக்கிய நபர்' எனக் கருதுகிறது?

காலிபாப் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராக இருப்பதுடன், அந்நாட்டின் ராணுவ அமைப்பான IRGC-யில் நீண்ட அனுபவம் கொண்டவர். உச்ச தலைவர் கமேனிக்கு நெருக்கமானவர் என்பதால், இவருடன் பேசினால் ஒரு சுமுகமான முடிவுக்கு வரலாம் என அமெரிக்கா நம்புகிறது.

3. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது யார்?

ஜாரெட் குஷ்னர் டிரம்பின் மருமகன் மற்றும் முன்னாள் ஆலோசகர். முந்தைய டிரம்ப் ஆட்சியில் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 'ஆபிரகாம் உடன்படிக்கை' (Abraham Accords) ஏற்பட இவர் முக்கியப் பங்காற்றினார். இதனால், கடினமான பேச்சுவார்த்தைகளை முடிக்க டிரம்ப் இவர்களைப் பயன்படுத்துகிறார்.

4. ஏன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறுத்து வருகிறது ஈரான்?

தங்கள் நாட்டு மக்கள் மற்றும் ராணுவத்தின் மத்தியில் 'அமெரிக்காவிடம் மண்டியிடவில்லை' என்பதைக் காட்ட ஈரான் விரும்புகிறது. மேலும், டிரம்ப் தனது தேர்தல் லாபத்திற்காகவும், சந்தையை மாற்றவும் இப்படிப் பேசுகிறார் என்பது ஈரானின் வாதம்.

5. 5 நாள் கெடு நீட்டிப்பால் போர் அபாயம் நீங்கிவிட்டதா?

முழுமையாக நீங்கவில்லை. இது ஒரு தற்காலிகமான அவகாசம் மட்டுமே. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் அல்லது ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

zeenews

 


Post a Comment

0 Comments