Ticker

6/recent/ticker-posts

கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முப்பெரும் நிகழ்வு


1) திருக்குறள் திருப்பணிகள் நிறைவு நிகழ்வு
2) நூல்கள் வெளியீடு மற்றும் 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் 04-04-2026 அன்று காலை பத்து மணிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முப்பெரும் நிகழ்வு சீரோடும் சிறப்புப்போடும் இனிதே நடைபெற்றது.

நிகழ்வுக்கு கோவை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி முனைவர் இரா.அன்பரசி அவர்கள் தலைமை தாங்கினார்.

முன்னதாக காலை பத்து மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன், முதல் அமர்வாகத் திருக்குறள் நுண் பயிற்சி தொடர் வகுப்பின் 30 ஆவது நிறைவு வகுப்பைப் பயிற்றுநர் குறளாசான் தமிழ்ச்செம்மல் முனைவர் அன்வர் பாட்சா அவர்கள் நடத்தினார் .
அதைத் தொடர்ந்து 11-00 மணிக்கு உதவியாளர் திருமதி சு.சுகந்தி வரவேற்புரை ஆற்ற,இரண்டாவது அமர்வாக, திருக்குறள் வினாடி வினா போட்டி மற்றும் திரைப்படப் பாடல்களில் திருக்குறள் கருத்தைக் கண்டறிதல் போட்டி நடைபெற்றது.
ரூபி பதின்மப் பள்ளி மாணவர்கள் திருவள்ளுவர் வேடமிட்ட ஒரு மாணவரோடு, தங்கள் பயிற்சி ஆசிரியர்களுடன் போட்டியில் கலந்து கொண்டனர். சான்றோர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு,12 மணிக்கு மூன்றாம் அமர்வாக திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பில் கற்றதும் பெற்றதும் நூல் மற்றும் நிற்க அதற்குத் தக நூல் 
ஆகிய இரண்டு நூல்கள் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் விஜயராகவன் ஐயா அவர்கள் வெளியிட, ரூபி பதின்மப் பள்ளியின் தாளாளர் கவிஞர் முனைவர் ரா.சுகுமார் ஐயா அவர்கள் பெற்றுக்கொள்ள நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இனிதே நடைபெற்றது.

கணபதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ந.நித்தியானந்த பாரதி, பாண்டிச்சேரி செ.வெ.ரெக்கார்டு ஹோல்டர் ஃபோரம் அமைப்பின் தலைவர் உலகச் சாதனையாளர் செ.வெங்கடேஷன்,மற்றும் வாகை துரைசாமி, ஆய்வாளர் மனோகரன்,திருமதி இராஜராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து, நூலாசிரியர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புச் செய்யப் பெற்றது.

திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர் களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி முனைவர் இரா.அன்பரசி அவர்கள் சான்றிதழ்கள் வழங்கியதுடன் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்து வாழ்த்துரைத்தார்.

அனைவரின் வாழ்த்துரையுடன் நிறைவாகத் 
தட்டச்சர் செல்வி பொ.விசாலாட்சி நன்றி நவிலலுடன்,அனைவருக்கும் விருந்துணவு வழங்கப் பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 


Post a Comment

0 Comments