Ticker

6/recent/ticker-posts

அமீரகம், ஈரானின் தாக்குதலுக்கு இரையாவதேன்?


ஐக்கிய அமீரகம் உலகின் அதி நவீன நாடாகும். 1971 டிசம்பரில் பிரித்தானியாவிடமிருந்து   விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபியைத் தலைநகரமாகக் கொண்டு  செயல்படுகிறது.

இது அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு பிராந்தியங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும்.

உலகின் பெரும் பணக்காரர்கள் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்து உச்ச வசதிகள் கொண்ட உயர்ந்த கட்டிடங்களை உருவாக்கிக் கொண்ட உல்லாசபுரி  ஐக்கிய அரபு அமீரகமாகும்.

இந்த அமீரகம், அமெரிக்க - இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் யுத்தம் காரணமாக  தனது உச்ச பொருளாதார பலத்தை இழந்து வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் நீண்ட கட்டுரைகளை எழுதி வருகின்றன.

தற்போது அங்குள்ள நட்சத்திர ஹோட்டல்கள்  வெறிச்சோடிப்போயுள்ளதாகவும், அதன் பரபரப்பான விமானநிலையம் நிலை குலைந்துள்ளதாகவும்,  வானுயர் கட்டடங்களில் மக்கள் வாழ அச்சப்படுவதாகவும், பெரும் பணக்காரர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதாகவும், அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் தொழில் வாய்ப்பு  கேள்விக் குறியாகியுள்ளதாகவும் இப்படியான அதிர்ச்சயூட்டும் செய்திகளை இவ்வாறான ஊடகங்கள் பரபரப்பாகப் பதிவிட்டு வருகின்றன. 

உல்லாச நகரங்களை வடிவமைத்து உல்லாசப் பயணிகளின் கனவுலகமாகத் திகழ்ந்த அமீரகம்,  இன்று ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நிலைதடுமாறி நிற்பதையும்,  இனி வரும் காலங்களில் இந்நாடு எந்த நிலையை அடையப் போகின்றதோ  என்றவாறான  சில பதிவுகளையும் சமூக ஊடகங்கள் பதிவிட்டுவரும் நிலையில், அங்கிருக்கும் யூடீபர்கள் சிலர் நல்ல பல செய்திகளையும் பதிவிட்டு வருவது மகிழ்ச்சி தரும் விடயமாகும். 

2020ல் 'கொரோனா' காலத்தில்  பொருளாதார ரீதியாக மீண்டு வேகமான வளர்ச்சியை பதிவு செய்து உலகளவில் முதலாவது மீண்ட அமீரகம், ஒவ்வொரு சூழலையும் படிக்கட்டாக பயன்படுத்தி இன்றைய நிலையை அடைந்தது!

போருக்கு முன்புவரை அமீரகத்தின் துபாய், அபுதாபி ஆகிய பிரதேசங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த நிலையில், இன்று இந்நாடு ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதால், பயணிகள் வருகையில் ஒரு ஸ்தம்பிதம் நிகழ்ந்தள்ளது.

ஏன் இந்த நாட்டை மட்டும் ஈரான் அதிக அதிகமாகக் குறிவைக்கிறது? அதன் பின்னணிக் காரணம் எதுவாக இருக்கும்?
இதுவரை அணுவாயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலினால் நிலைகுலைந்துள்ள நிலையில், அமெரிக்காவை நேரடியாக எதிர்த்து சண்டையிட்டு ஜெயிக்க முடியாது; அமெரிக்காவை போரில் நீண்ட காலத்திற்கு ஈடுபட வைத்து, அதன் மூலம் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி, போரில் வெற்றி பெற ஈரான் திட்டமிட்டிருப்பதனால், அமெரிக்காவின் பொருளாதார மையங்களைத் தாக்கி வருகின்றது!

அந்நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா கொமேனியின் மரணத்திற்குப் பதிலடி கொடுப்பதாக சவால்விட்ட ஈரான், வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்  ஈரான் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், போர் தொடங்கிய நாள் முதலே மத்திய கிழக்கு நாடுகளுள் ஐக்கிய அரபு அமீரகத்தையே ஈரான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்கி வருகின்றமைக்கு பல காரணங்கள் இருந்தபோதிலும், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் குறிவைக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம், அந்நாட்டில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமாகும்.

இவ்விமானப் படைத்தளம், முக்கியமாக அமெரிக்காவின் இராணுவ வசதிகளைக் கொண்டிருக்கிறது; அமெரிக்காவை நேரடியாகத் தாக்க முடியாத நிலையில், அதன் நலன் சார்ந்த நாடுகளிலுள்ள தளங்களை  ஈரான் குறிவைக்கின்றது!

ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கத் இராணுவத் தளத்தை  கொண்பிருப்பது 
மட்டுமல்லாது,அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்புப் பங்காளியாகவும் விளங்குவதை ஈரான் அறிந்து வைத்துள்ளது.

அந்தவகையில், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூட்டுப் பயிற்சிகள், ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கூட கடந்த 2024ல் கைச்சாத்தானது.

ஈரானின் தொடர் தாக்குதல்களால், அங்குள்ள அமெரிக்கத் தளங்கள் மட்டுமின்றி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொருளாதார மையங்கள், எண்ணெய்க் கிடங்குகள் என அனைத்தும் நிலைகுழைந்து போயின.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் பிரிவுகள், போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஏவிய 
398 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 
15 குரூஸ் ஏவுகணைகளையும், 
1872 ஆளில்லா ட்ரோன் விமானங்களையும்  அழித்துள்ளன.

இந்த எண்ணிக்கைகள் கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற அதன் அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைவிடவும் பன்மடங்கு அதிகமானதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் தொடர்ந்து குறிவைப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கின்றது.
அமீரகம் மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்குமிடையே ஓர் இணைப்புப்பாலமாக விளங்கி வருவதே அந்த முக்கிய காரணமாகும்.

நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் ஓர் உலகளாவிய மையமாகத் திகழ்கின்ற அமீரகத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வருவதை ஈரான் நீண்டகாலமாகவே உண்ணிப்பாகக் கவனித்து வருவதோடு, அதற்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்து வந்துள்ளது.

இறுதியாக 2026 மார்ச் 28ம் திகதி அதிகாலை கிடைத்த செய்திகளின்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய இரும்பு மற்றும் எஃகு  ஆலைகள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களால்,  ஈரானின் எஃகு ஏற்றுமதித் திறன் மற்றும் உள்நாட்டு உற்பத்தி கணிசமாகப் பாதிக்கப்படும் என்பதால், இதற்குப் பதிலடியாக துபாயிலுள்ள ஜெபல் அலி மின் நிலையம் எம் மின் நிலையம், முகமது பின் ரஷித் அல் மக்தூம் சூரிய சக்தி பூங்கா மற்றும் அபூதாவூத் அல் தவீலா மின் நிலையம், பராகா அணுமின் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது.

அமெரிக்க வரை தூரம் செல்லக் கூடிய மிசைல்  ஈரானிடம் இருப்பதாக அறியப்படும் நிலையில், நேரடியாக எதிரி நாட்டைத் தாக்காமல், அமீரகத்தைக் குறி வைப்பதன் இரகசியம் என்னென்றுதான் புரியவில்லை.

மத்திய கிழக்கு  நாடுகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களை ஈரான் நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் உட்பட பல மனிதநேய இயக்கங்கள் மற்றும் மத அறிஞர்கள் குழுக்களும் கேட்டுக் கொண்டபோதிலும், ஈரான் அவற்றுக்கு செவிசாய்க்காமை வருந்துதற்குரிய ஒரு விடயமாகும்.

சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் பயந்து வாழும் நிலையை மனிதநேயம் கொண்ட ஒரு நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஈரான், ஏற்படுத்தி வருவது கவலை தரும் ஒரு விடயமே! 

அமெரிக்கா தனது ஐரோப்பியக் கூட்டு நாடுகளை இணைத்துக் கொண்டு, ஈரானைத் தாக்குகின்றது. ஆனால் அமெரிக்க ஐரோப்பிய மக்கள் தமது நாடுகளில் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றனர். மத்திய கிழக்கில் கனிசமான அளவில் வாழ்கின்ற ஆசிய நாட்டுத் தொழிலாளர்கள், துறைசார் நிபுணர்கள்  ஈரானின் பதிலடி நடவடிக்கையால் பயந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளைச் சிதைக்க வேண்டும் என்ற ஈரானின் குறுகிய நோக்கத்தினால், மத்திய கிழக்கில் வாழும்  ஆசிய நாட்டவர் பீதியடைகின்றனர்; பாதிப்படைகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஈரான் தனது பதிலடியை வேறு திசைக்குத் திருப்புவதை தமது சிந்தனைக்கு எடுப்பது காலத்தின் தேவையாகும்.

"தோல் தடிமனானது; சதை கசப்பானது!” 
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் இந்த வாசகம் இப்போது அமீரகம் முழுவதும் அதிர்வலையைக் கிளப்பியுள்ளது.

“Thick skin, bitter flesh” – அதாவது, நாங்கள் அவ்வளவு எளிதாக வீழ்த்தப்படக்கூடியவர்கள் அல்லர். சவால்களைத் தாங்கும் வலிமையும்  எங்களை எதிர்க்க நினைப்பவர்களுக்கு கசப்பான பாடத்தைப் புகட்டும் துணிவும் எங்களிடம் உண்டு என்பது இதன் பொருளாகும்.

இன்று அமீரகத் தெருக்களில் ஓடும் வாகனங்கள் முதல், மக்கள் தங்கள் கைகளில் ஏந்தும் காஃபிக் கோப்பைகள் வரை இந்த ‘No Easy Prey’ வாசகம் ஒரு அடையாளமாக மாறியுள்ளது!

எதிர் காலத்தில் அமீரகம் முற்றிலுமாக மறைந்துவிடாமல், சற்று கவர்ச்சி குறைந்தாலும், யதார்த்தமான ஒரு வடிவமாக உருமாறலாம்; அதன் வெற்றிப் பாதைக்கு வாழ்த்துக்கள்!

செம்மைத்துளியான்.


 


Post a Comment

0 Comments