
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர வர்த்தக வளாகம் ஒன்றினுள், மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத திரவம் அல்லது வாயுவை விசிறியடித்ததில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸாரும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் திங்கட்கிழமையன்று (இன்று) தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் யுசுகே கொயிடே ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவிக்கையில், "மர்ம நபர் ஒருவர் அந்த வர்த்தக வளாகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஏ.எஃப்.பி. (ATM) பணப்பரிமாற்ற இயந்திரப் பகுதியில் இந்த அடையாளம் தெரியாத திரவத்தை விசிறியடித்துள்ளார்" என்றார்.
அதேவேளை, அப்பகுதியில் ஏதோவொரு "அசாதாரண வாசனை" வீசுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், இச்சம்பவத்தால் "சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்" என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த வர்த்தக வளாகம் அமைந்துள்ள கின்ஸா (Ginza) எனும் வர்த்தகப் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் முழுமையாக முடக்கப்பட்டதுடன், தீயணைப்பு வாகனங்கள் வீதியெங்கும் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்தில் இருந்த ஏ.எஃப்.பி. செய்தி நிருபர் ஒருவர் விபரிக்கையில், "பாதிக்கப்பட்ட இருவர் படுக்கைப்பாயில் (Stretcher) அவசர ஆம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றப்படுவதைக் காண முடிந்தது. அதேநேரம், அபாயகரமான இரசாயனப் பாதுகாப்பு ஆடைகளை (Hazmat Suits) அணிந்திருந்த தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும், வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களைப் பரிசோதிப்பதற்காக விசேட மருத்துவ வாகனங்களுக்குள் அழைத்துச் சென்றனர்" என்று குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் அனைத்தும் பாரதூரமானவை அல்ல என்றும், அவை சாதாரணக் காயங்கள் என்றும் ஜப்பானின் தேசிய பொதுத் தொலைக்காட்சிச் சேவையான என்.எச்.கே. (NHK) தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டோக்கியோ பொலிஸார் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments