
அமேசான் வனத்துக்குள் நுழைந்த மூவரும், தேடி எடுத்த எச்சங்களையும் மூலிகை களையும் சுமந்தபடி கிராமத்துக்குள் வந்து சேர்ந்தனர்.
ஜாகைக்குள் நுழைந்த செரோக்கியின் தந்தை, இர்வின் நகரத்துப் பையன் என்பதால், அவனுக்கு உகப்பான உணவுப் பதார்த்தங்களைத்தான் இனிமேல் பரிமாற வேண்டும் என்று நினைத்தவராக, அதுபற்றித் தனது மனைவியுடன் கலந்து பேசலானார்.
தந்தைக் குருவி எடுத்துவீசி, தன் காலடியில் வந்து விழுந்த தனது பைக்குள் திணித்துப் பத்திரப்படுத்திக் கொண்ட அந்தக் கிளையை செரோக்கி, தன் நண்பனிடம் காட்டி, நடந்த சம்பவத்தை விலாவாரியாக கூறிவிட்டு, அதனை அவனிடம் ஒப்படைத்த போது, இர்வின் அதனைத் தன் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்!
தான் வீட்டை அடைந்ததும் அந்த மரக்கிளையைத் தாவரவியலாளர் ஒருவரிடத்தில் கொண்டுசென்று விபரம் கேட்கலாமென்று முடிவு செய்து கொண்ட அவன், வீடுவந்து சேர்ந்த சில நாட்களில் அந்தக் கிளையோடு தாவரவியலாளரை நாடிச் சென்றான்.
அதனைப் பரிசோதித்த அவர், ‘அதன் இலைகளின் வாசனையில் பாம்புகளைக் கொல்லும் நச்சுத்தன்மை இருப்பதாகவும், அதனருகில் பாம்புகள் நெருங்க மாட்டாது’ எனவும் தெரிவித்தார்.
பாம்புகள் அஞ்சும் கொடிய விஷம் இந்த இலைகளில் உள்ளது என்று சிட்டுக்குருவிக்கு எப்படித் தெரிந்தது? அதனை அவைகளுக்குக் கற்றுக்கொடுத்தது யார்?
இதனை ஆய்வாகக்கொண்டு இர்வின் தனது சஞ்சிகையில் ஒரு கட்டுரையைத் தொடராக எழுதலானான்!
அது வாசகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றது!
"மண்ணிலும், விண்ணிலும், காட்டிலும், நாட்டிலும் நேர்த்தியான ஒரு நிர்வாகம் நிபுணத்துவமிக்க ஏதோ ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது" என்பதே கட்டுரையின் சாராம்சமாக இருந்தது!
காட்டிலுள்ள பறவைகளுக்கு பாதுகாப்பு யுக்திகளை கற்றுக்கொடுத்த அந்த 'சக்தி', உலகவாழ் மக்கள் பலர் இனங்கண்டு கொண்டபோதிலும், வனத்தை அண்டிய பிரதேசங்களில் அது இன்றுவரை வெளிப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை! அந்த சக்தியை மோப்பம் பிடிக்கக்கூடிய அறிவு உலகவாழ் உயிரினங்களுக்கு இருப்பதை இர்வின் தனது கட்டுரையில் வெளிப் படுத்தினான்!
இதன் மூலம், ‘நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்லப்போகின்றோம்’ என்பதை உணராது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகவாழ் மக்களுக்கு இயற்கையின் இரகசியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவனது கட்டுரைத்தொடர் உள்ளூடறுத்து உணர்த்தத் தொடங்கியது
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments