
பாட்டி கதை சொல்லி முடித்ததும், அதுவரை அமைதியாகச் சாய்ந்து கொண்டிருந்த சின்ன மருமகள் துள்ளி எழுந்தாள்.
“என்ன? அதுதானா? இனி குமரன் மருத்துவர் கதைக்குள் வரமாட்டாரா? சீ... அத்தை, ஏன் இப்படி கதையை முடித்தீர்கள்? நான் எத்தனையோ கற்பனைகள் வளர்த்தேன். எல்லாம் போச்சே! ஏமாற்றமாச்சே! எனக்கு என்னமோ போல இருக்கு.
எல்லாம் அந்த மீசைக்காரக் கிழவனால் வந்தது. அவனை அப்படியே நாலு அறை விடவேண்டும் போல இருக்கு. இறுதியில் அந்தக் கிழவன் திருந்தியிருந்தாலும், எனக்கு அவன் மேல் உள்ள கோபம் இன்னும் போகவில்லை!” என்று ஒரே புலம்பலாகக் கொட்டினாள்.
இதைக் கவனித்த மேரி அக்கா சிரித்தபடி,
“அடியே! யாருடி அந்த மீசைக்காரக் கிழவன்?” என்று கேட்டார்.
“அக்கா, அதுதான் அந்தக் கிழட்டு மருத்துவர். அவரைத்தான் சொன்னேன்,” என்றாள் அவள்.
“அடி பாவி! அவருக்கு மீசை பெரியது என்று உனக்கு எப்படிடி தெரியும்?” என்று மேரி அக்கா கேட்டவுடன், அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
அப்போது சின்ன மருமகள் கொஞ்சம் கடுப்போடு,
“அத்தை கதை சொல்லும்போதே என் மனதில் அவர் அப்படித்தான் இருந்தார், அக்கா. நீ சும்மா கேலி பண்ணாதே. நானே கவலையோடு இருக்கிறேன்,” என்றாள்.
பாட்டி உடனே,
“அது என்னடி அம்மா, உனக்கு கவலை? என் கதை முடிந்ததாலா? நான் இன்னும் முடிக்கலையே! நாளையும் தொடரிருக்குதானே? நீ ஏன் இப்போ போருக்குப் போய்த் தோற்றவள் மாதிரி கத்துகிறாய்? அப்பப்பா... இவளோடு முடியல!” என்று சிரித்தபடி கூறினார்.
உடனே அவள் தனது மாமியாரைப் பார்த்து,
“அத்தை, நீங்க கதை சொல்லும்போதே நான் எனக்குள் இப்படித்தான் முடியும் என்று ஒரு முடிவு நினைத்தேன். அது நடக்கல. அதனால்தான் கவலையாச்சு. நீங்க வேறு இனி குமரன் கதைக்குள் வரமாட்டான் என்றதும், அது கூடிப் போச்சு. அவ்வளவுதான்,” என்றாள்.
பாட்டி உடனே,
“அது சரி. இவளை நாம அப்படியே சினிமா பக்கம் அனுப்பிடுவோமா, மேரி?” என்று கேட்டுச் சிரித்தார்.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளது கணவன் சந்திரன் வாய் திறந்தான்.
“அப்பாடா! இனியாவது எனக்கு நிம்மதி வரட்டும். சீக்கிரம் அனுப்ப ஏற்பாடு பண்ணிடலாமா? ஏன்டி?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
அவள் உடனே,
“இங்கே நீங்க வேறு கடுப்பாக்காமல் போய்த் தூங்குங்க!” என்று கூறி இருக்கையை விட்டு எழுந்தாள்.
“சரி, சரி. நாளை பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளைகளா? எல்லோரும் போய்த் தூங்குங்க,” என்று பாட்டி கூறினார்.
பிறகு மூத்த மருமகளைப் பார்த்து,
“இந்தாம்மா, என் இடுப்பு வலி மருந்தையும் கொஞ்சம் சூடான தண்ணீரும் தந்து விட்டு நீயும் போய்த் தூங்கு,” என்றார்.
மேரியும் லூசியாவும்,
“சரி, நாங்க போறோம். வீட்டில் எல்லோருக்கும் குட் நைட்!” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.
பாட்டியும் தன் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார்.
மூத்த மருமகள், மறுநாள் காலை உணவுக்குத் தேவையான மாவை கரைத்து வைத்து விட்டு, அவளும் உறங்கத் தயாரானாள்.
ஆனால் சின்ன மருமகள் மட்டும் ஏதோ ஒன்றைத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே மகளின் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளது கணவன் அதைக் கவனித்து,
“ஏய்! லூசி மாதிரி தனியாகப் பேசிக்கிட்டு இருக்காதே. வா, வந்து தூங்கு. விளக்கையும் அணைத்திடு,” என்றான்.
அவன் கட்டளைக்குப் பணிந்தவளாய் அவளும் வந்து படுத்துக் கொண்டாள்.
விழிகளை மூடினாள்...
ஆனால்...
உறக்கம் மட்டும் வரவில்லை.
ஆர்.எஸ் .கலா
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments