Ticker

6/recent/ticker-posts

இந்திய அணியின் மோசமான தோல்வி... டி20ஐ தொடரில் இப்படி நடந்ததே இல்லை


இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 5வது டி20ஐ போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்திய அணி முதல்முறையாக ஒரு டி20ஐ தொடரில் 4 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை விளையாட இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

நடைபெற்று வரும் டி20ஐ தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்துவிட்டது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இன்று 5வது டி20ஐ போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சம்பிரதாயமாக நடைபெற்ற போட்டியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் ஷ்ரேயாஸ் - கம்பீர் ஜோடி களமிறங்கியது.

பிளேயிங் லெவன் மாற்றம்

கடந்த மூன்று போட்டிகளில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி இப்போட்டியில் விளையாடவில்லை. சஞ்சு சாம்சன் மீண்டும் களமிறக்கப்பட்டார். அடுத்து வாஷிங்டன் சுந்தருக்கு பதில் சூர்யான்ஷ் ஷெக்டே விளையாடினார். இங்கிலாந்து அணியும் சிறு மாற்றத்துடன் களமிறங்கியது.

பட்லர் - ப்ரூக் பார்ட்னர்ஷிப்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிக்காட்டியது. பில் சால்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜாஸ் பட்லர் - ஹாரி ப்ரூக் ஜோடி 102 பந்துகளில் 233 ரன்களை குவித்து அசத்தியது. 19வது ஓவரில்தான் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார். 

64 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்ஸர் என 131 ரன்களை குவித்து ஆட்டமிழந்த, ஜாஸ் பட்லர். அடுத்த பந்திலேயே ஜேக்கப் பெத்தல் டக்அவுட்டானர். கடைசி வரை ஹாரி ப்ரூக் ஆட்டமிழக்காமல் இருந்தார். 45 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 95 ரன்களை குவித்தார். வில் ஜாக்ஸ் 2 பந்துகளில் 7 ரன்களை அடித்திருந்தார்.

258 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்களை குவித்தது. இந்திய பந்துவீச்சில் சிவம் தூபே 2 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்திய அணிக்கு 258 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் நல்ல தொடக்கம்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி சுமாரான தொடக்கத்தை அளித்தது. அபிஷேக் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடியது. பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை அடித்த இந்தியா, 10வது ஓவர் முடிவில் இந்தியா அதே 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை குவித்தது.

இஷான் கிஷன் அரைசதம்

அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷான் கிஷன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து வெற்றி

அடுத்து வந்தவர்கள் தொடர்ச்சியாக சொதப்ப 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி இத்தொடரில் முதல்முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. சாம் கர்ரண் இந்த போட்டியில் 3 விக்கெட்டையும், அடில் ரஷித் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்தியாவின் மோசமான தோல்வி

இதன்மூலம், இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.  இந்திய அணி முதல்முறையாக டி20ஐ தொடரில் 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஜாஸ் பட்லரும், தொடர் நாயகன் விருதை ஹாரி ப்ரூக்கும் வென்றனர்.

zeenews


 


Post a Comment

0 Comments