
அடுத்த நாள்…
ஒரு சிறிய பொதியை தபால்காரன் மைதிலியிடம் ஒப்படைத்தான்; அதற்குள் ஓர் அழகான சிறிய கண்ணாடி விளக்கு இருந்தது. அதிலிருந்த கடிதத்தை நடுங்கும் கரங்களால் திறந்து வாசித்தாள்.
“இந்த விளக்கை ஏற்றும்போது நினைவில் வைங்க… இருள் எவ்வளவு பழகியிருந்தாலும், ஒரு சிறிய வெளிச்சத்தால் அதை வெல்ல முடியும்.
அன்புடன்
மோகன்."
அந்தக் கடிதத்தின் மேல் விழுந்த அவளது கண்ணீர்த் துளிகள், மெதுவாக அந்த மை எழுத்துகளை நனைத்துக் கொண்டிருந்தன!
அந்த விளக்கை மைதிலி அப்போதே மின்னேற்றினாள்.
விளக்கின் வெளிச்சமல்ல அது… அவளது இருண்ட மனதிற்குள் மெல்ல நுழைந்த ஒரு நம்பிக்கை!
சுவரில் மாட்டியிருந்த இறந்துபோன தன் கணவரின் படம் தாங்கிய பிரேமை பக்குவமாக எடுத்து அந்தச் சிறிய விளக்கின் பக்கத்தில் வைத்துவிட்டு, சில நொடிகள் அமைதியாக அதனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னை மன்னிச்சுடுங்கோ…
நான் உங்கள மறக்க முயற்சிக்கல்ல…
ஆனா… இனிமேல் அழுதுகிட்டு மட்டும் என்னால வாழ முடியலீங்க!"
அந்த வார்த்தைகளைச் சொன்னபோது, அவளது மனதிலிருந்த பாரம் கொஞ்சமாகக் குறைந்தது!
அடுத்த நாள் காலை…
மைதிலி தன் கைபேசியை அடிக்கடி பார்த்தாள்.
மோகனிடமிருந்து வழமைபோல் குறுஞ்செய்தி வரவில்லை.
“ஏன் மெசேஜ் இல்ல…?” என்று தெரியாமல் அவளது மனம் நெருடியது.
மதியம் ஆனதும், பொறுமையிழந்த அவள்,
“கோபமா இருக்கீங்களா?”
என்று பதிவொன்றை ஏற்றினாள்.
சில நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.
“உங்க மனசு அமைதியா இருக்கணும்னு நினைச்சேன். அதனால தொந்தரவு செய்யல.”
அவள் அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் வாசித்தாள்.
அவளது அமைதிக்காகத் தன்னைத் தானே விலக்கிக்கொண்ட ஒரு மனிதன் இந்த மோகன் என்பதை அந்த நொடியில் அவள் உணர்ந்தாள்…
மோகன் தன்னை காதலிப்பதற்கும் மேலாக, தனக்கு “மரியாதை” தருவதை அவள் வெகுவாக இரசித்தாள்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments