
இந்த அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 5-ல் ஒருவருக்குத் தனது வாழ்நாளில் நேரடியாகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது
உலக மக்கள் தொகையில் சுமார் 92 சதவீதத்தினர் தங்களது வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் புற்றுநோயின் தாக்கத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கை எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான"புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை 2026"(Global Status Report on Cancer 2026 ), புற்றுநோயின் தற்போதைய நிலை, எதிர்கால அபாயம் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 5-ல் ஒருவருக்குத் தனது வாழ்நாளில் நேரடியாகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது . ஒருவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிட்டால், உலகில் வாழும் 92 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் புற்றுநோயின் தாக்கத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்கொள்ள நேரிடும் . இதன் மூலம், உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் தொடும் (அல்லது ஒவ்வொரு குடும்பத்திலும் இதன் தாக்கம் காணப்படும்) என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 2 கோடியே 6 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வயது முதிர்வு ஆகிய காரணங்களால், 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 66.7% ஆக அதிகரிக்கும் என்றும், ஆண்டுக்கு 3.5 கோடி புதிய பாதிப்புகள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1990 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், உலகளவில் 50 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே புற்றுநோய் பாதிப்பு 79.1% என்ற அளவில் அதிகரித்துள்ளது. இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இந்தத் தாக்கம் உலக மருத்துவ நிபுணர்களைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் மருத்துவச் செலவீனங்களை (Out-of-pocket expenditure), எதிர்கொள்ளாமல் 45% முதல் 60% வரையிலான குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து மருத்துவ ரீதியாக செயலிழந்த (Medical bankruptcy) போவதாகாவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த நோயின் தாக்கம் அடுத்த தலைமுறையையும் கடுமையாகப் பாதிக்கிறது. 2020-ஆம் ஆண்டு தரவுகளின்படி, புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளால் ஆண்டுதோறும் சுமார் 10.4 லட்சம் குழந்தைகள் தங்கள் தாயையும், 14.1 லட்சம் குழந்தைகள் தங்கள் தந்தையையும் இழந்து தனித்துவிடப்பட்டுள்ளனர்.
கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி வலிகளைத் தாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 60% பேர் மனச்சோர்வு, பதற்றம், தீவிர மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் மருத்துவ வதந்திகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன. புதிதாகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 93% பேர் தவறான மருத்துவத் தகவல்களால் (Misinformation) திசைதிருப்பப்பட்டு, முறையான சிகிச்சைகளைத் தாமதப்படுத்துவதாகவும் அல்லது முற்றிலும் தவறவிடுவதாகவும் இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுமார் 40% பாதிப்புகளை முன்கூட்டியே முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியும் என்றும்புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம், உடல்பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் போன்ற சில வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலமும், அதற்கான தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலமும் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய புற்றுநோய்க் கொள்கைகள் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களையும், அவர்களின் வாழ்பனுவங்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் வலியுறுத்தியுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments