
5.இல்வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை முறை
41.இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
42.துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
46.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
47.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
48.ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
49.அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
50.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
5. இல்வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை முறை
41.குடும்பத்தலைவன் என்பவன் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவருக்கும் இறுதிவரை துணையாவான்.
42.துறவியர், ஏழையர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு இல்லறத்தான் துணையாவான்.
43.அறிஞர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர், உறவினர், தன்னையும் சேர்ந்து ஐவரையும் போற்றுவதே கடமையாகும்.
44.நல்வழியில் சேர்த்தப் பொருளைப் பகுத்துண்டு வாழ்பவருக்கு வாழ்வில் குறை இல்லை.
45.அன்பும், நற்செயல்களும் உடைய வாழ்க்கை சிறப்பான பண்பும், பயனும் தரும்.
46.நற்செயல்களை நாம் இல்லறத்தில் இருந்தே செய்யலாம். அதற்காகத் துறவறம் மேற்கொள்ளத் தேவையில்லை.
47.முறையோடு வாழ்பவர்கள், முன்னேற முயற்சி செய்பவர் அனைவரிலும் சிறந்தவர்.
48.பிறரை நற்செயல் புரியத்தூண்டி, தானும் அவ்வழியில் வாழ்பவன் வாழ்க்கை, துறவற வாழ்வைவிடச் சிறந்தது.
49.அறம் என்று சொல்லப்படுவதே குடும்ப வாழ்க்கை தான். அவ்வாழ்வு பிறர்பழிக்கு இடமின்றி இருந்தால் மேலும் சிறப்பாகும்.
50.உலகில் வாழும் நெறியுடன் வாழ்பவன் பிறர் போற்றும் உன்னத நிலையில் மதிக்கப் பெறுவான்.
உரையாசிரியர்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்
தமிழ்ச்செம்மல் பல்திறன்வளர்
இலக்கியமாமணி
முனைவர்
மு.க.அன்வர்பாட்சா
தமிழாசிரியர் (பணி நிறைவு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments