Ticker

6/recent/ticker-posts

காத்திருப்பு; இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு வலி!


'காத்திருப்பு' என்பது மனித வாழ்வின் ஓர் ஆழமான, விவரிக்க முடியாத உணர்வாகும்; இது அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரம் போன்றது!

சோதித்துப் பாருங்கள்!

யதார்த்தத்தின் கடினமான களத்தில் நின்று பார்க்கும்போது, ​​'காத்திருப்பு' என்பது உண்மையில் ஒரு உள்ளார்ந்த 'வலி' என்பதை எவரும் புரிந்து கொள்வர்!

சிலர் தங்கள் அன்புக்குரியவரின் வருகைக்காகக் காத்திருப்பர்; சிலர் ஒரு நல்ல நாளின் நம்பிக்கைக்காகக் காத்திருப்பர்; இன்னும் சிலர் ஒரு கடிதத்திற்கோ அல்லது தொலைபேசி அழைப்பிற்கோ காத்திருக்கலாம்!

காத்திருப்பின்போது, ​அவர்களைச் சுற்றியுள்ள உலகம் ஸ்தம்பித்து விடுகிறது; அப்போதுதான் கடிகாரத்தின் ஒவ்வொரு 'டிக் டிக்' ஒலியும் காதுகளில் சுத்தியல் கொண்டு அடிப்பது போலிருக்கும்!

காத்திருப்பின் வலியானது அடிப்படையில் நிச்சயமற்ற தன்மையிலிருந்து எழுகின்றது. அதன் முடிவு எங்கே இருக்கிறது என்று தெரியாதபோது, ​​அதுதான் வலி வடிவம் எடுக்கின்றது!

இந்த நிச்சயமற்ற தன்மை சோகத்தாலும்,  துக்கத்தாலும் மனிதனின் உள்ளத்தை அரித்துத் தின்னலாம்!

அன்புக்குரிய ஒருவரைப் பிரிந்து, அவர் திரும்பும் வரை காத்திருப்பது, ஒருவேளை மிகவும் கடினமான நேரமாக இருக்கலாம்; பெரும் சுமையாகக் கூட இருக்கலாம்.

இந்தக் காத்திருப்பில் ஆறுதல் எதுவுமில்லை; நினைவுகளின் கொந்தளிப்பு மட்டுமே உள்ளது!

கடின உழைப்புக்குப் பிறகு வெற்றிக்காகக் காத்திருப்பது, மனதளவில்  சோர்வை அடையச் செய்கின்றது. தொடர் தோல்வி குறித்த பயமும், சமூகம் மற்றும் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளின் அழுத்தமும் காத்திருப்பை விஷமாக்குகின்றன!

காத்திருப்பு மக்களுக்கு நேரத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுக்கிறது; ஆனால் அதற்கு ஈடாக அது நேரத்தைத் தம் வசப்படுத்திக் கொள்கின்றது!

எதிர்காலத்தில் ஒரு தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் மனிதன், நிகழ்காலத்தில் அழகான தருணங்களை அனுபவிக்க மறந்துவிடும் நிலை கூட ஏற்படுவதுண்டு!

"கவலை என்பது ஒரு கண்ணாடி, அதில் மனிதன் தனது இயலாமையை மிகத் தெளிவாகக் காண முடியும்."

முடிவாகச் சொல்வதானால், காத்திருப்பு என்பது இனிப்பும் கசப்பும் கலந்த ஓர் உணர்வாக இருந்தாலும், அதனுடன் எப்போதும் ஒரு வலி இணைந்தே இருக்கின்றது என்பதை எவரும் புரிந்து கொள்வர்.

சில நேரங்களில் அந்த வலி ஒரு பெருமூச்சாக வெளிவருகின்றது; கண்களிலிருந்து கண்ணீராகவும் விழுகின்றது.

ஆனால் வாழ்க்கையின் தேவைகளால் நாம் பல விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக, வாழ்க்கை என்பது ஏதோவொன்றிற்காகக் காத்திருப்பதாகும். அந்த ஒன்று கிடைத்தால், எல்லாத் துன்பங்களும் மதிப்புள்ளதாகத் தோன்றும்.

ஆனால் அது ஒன்றுமில்லாமல் முடிந்தால், அந்தக் காத்திருப்பை விடப் பெரிய சாபம் வேறு எதுவுமாக இருக்க முடியாது!

உண்மை என்னவென்றால், காத்திருத்தல் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக ஆக்குகிறது, ஆனால் அந்தப் பொறுமையின் எல்லை உடைந்துவிட்டால், குழப்பம் மட்டுமே எஞ்சி இருக்கப் போகின்றது!

அதனால்தான், காத்திருப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல—அது ஒரு நீண்டகால அழுத்தம் என்று கூறப்படுகின்றது!

செம்மைதாதுளியான்.

 


Post a Comment

0 Comments