
வெகுளாமை--31
கோபம் கொள்தல் கொடிய பழக்கம்
கோபம் பலிக்கும் இடந்தன்னில்
காப்போன் தானே சினம்காப்போன்!
செல்லாத இடத்தில் கோபத்தைக்
காத்தா லென்ன? சினந்தென்ன?
எளியா ரிடத்தில் சினங்கொண்டால்
அதுபோல் தீமை வேறில்லை!
சினத்தால் விளையும் தீமைதான்!
சினத்தை மறத்தல் நன்மைதான்!
முகத்தின் சிரிப்பை, சித்திரத்தை
அழிக்கும் பகையோ கோபந்தான்!
உன்னைக் காக்க சினமடக்கு!
காக்க மறுத்தால் உனையழிக்கும்!
சினமோ நெருப்பாய் மாறிவிடும்!
காக்கும் உறவை அழித்துவிடும்!
நிலத்தில் அடித்தால் கைவலிக்கும்!
சினத்தில் திளைத்தால் துன்புறுவான்!
அனலைப் போன்ற துன்பத்தை
ஒருவன் நமக்குச் செய்தாலும்
புனலாய் மாறி சினம்தவிர்த்தால்
நிம்மதி யாக வாழலாம்!
மனதால் சினத்தைப் புறக்கணித்தால்
நல்லவை எல்லாம் கைகூடும்!
சினமுடை யோர்கள் இறந்தவராம்
சினத்தைத் துறந்தோர் துறவிகளாம்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
இன்னாசெய்யாமை-32
புண்படுத்துவோரைப் பண்படுத்து
மலைபோல் செல்வம் கிடைத்தாலும்
பிறர்க்குத் துன்பம் செய்யாத
மனமே சான்றோர்க் கழகாகும்!
சினந்தே துன்பம் தந்தாலும்
திருப்பித் துன்பம் செய்யாமல்
இருப்பதே நல்ல நெறியாகும்!
தீமை செய்யா நல்லவர்க்குத்
தீங்கைச் செய்வது நல்லதல்ல!
பழிக்குப் பழியாய் நடந்தாலோ
நல்லவ ருக்கும் துன்பந்தான்!
தீமை செய்த மாந்தருக்கு
நன்மை செய்தல் தண்டனையாம்!
ஏனைய உயிர்கள் துன்பத்தை
தனது துன்பம் எனக்கருதி
நீக்கா விட்டால் அறிவிருந்தும்
இல்லா தவராய்க் கருதிடுவார்!
தனக்குத் துன்பம் எனத்தெரிந்தால்
பிறர்க்கு அதையே செய்யாதே!
நெல்முனை அளவே என்றெண்ணி
தீமையைச் செய்யா நிலையொன்றே
பண்பை உயர்த்தும் செயலாகும்!
முற்பகல் தன்னில் மற்றவர்க்குத்
துன்பம் செய்தால் செய்தவர்க்குப்
பிற்பகல் துன்பம் வந்துவிடும்!
துன்பம் செய்தால் துன்பமெல்லாம்
செய்தவ ரையே சென்றடையும்!
தனக்குத் தீமையை விரும்பாதோர்
பிறருக்குச் செய்தல் நல்லதல்ல!
திருக்குறள் குழந்தைப் பாடல்
கொல்லாமை-33
உயிரை வதைத்தல் இழிந்த செயலாகும்
உயிர்க்கொல் லாமை அறச்செயலாம்
உயிர்க்கொலைப் பாவச் செயலாகும்!
நீதி நெறியே பகிர்ந்துண்ணல்!
அறங்களில் அதுவே முதன்மையாம்!
அறங்களில் சிறந்தது கொல்லாமை!
அடுத்தது இங்கே பொய்யாமை!
வாழ்வைக் கண்டு நடுங்கியேதான்
துறவறம் ஏற்றோர் கோழைதான்
இல்லறக் களத்தில் கொல்லாமை
போற்றும் மாந்தர் வீரர்தான்!
இப்படிப் பட்ட நல்லவரைச்
சாவும் நெருங்கத் தயங்கிடுமே!
தனது உயிரை இழந்தாலும்
மற்றோர் உயிரை அகற்றுவதை
இங்கே என்றும் செய்யவேண்டாம்!
கொலையைச் செய்வதால் பலவளங்கள்
கூடிக் குலவி வந்தாலும்
நேர்மை தவறிய பயன்களையோ
இழிவாய்க் கருதுதுவர் சான்றோர்கள்!
கொலையைத் தொழிலாய் ஏற்றவர்கள்
இழிந்த நீசப் பிறவிகளாம்!
நோய்கள் மொய்க்க வறுமையுடன்
இந்தப் பிறவியில் வாடுபவர்
சென்ற பிறவியில் கொலைக்குற்றம்
சுமந்தோர் என்றே கருதவேண்டும்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments