தவம் -- 27
உடல்வருத்தித் துறவறத்தைப் பின்பற்று
துன்பம் தன்னைப் பொறுப்பதுவும்
தீங்கே செய்யா நற்பண்பும்
தவத்தின் தளங்கள் என்றுணர்வோம்!
வேட மற்ற நன்னெறிதான்
மாசே இல்லா தவவடிவம்!
வேட தாரிக் கும்பலென்றால்
தவமே இல்லை! இழிநிலைதான்!
துறவிகள் வாழ்வைக் காப்பதற்கே
இல்லறந் தன்னை ஏற்றவர்கள்
துறவறந் தன்னை மறந்தாரோ?
பகையை அடக்கி மாற்றிடவும்
நண்பரைத் தாங்கி உயர்த்திடவும்
தவத்தால் உலகில் முடியும்பார்!
இல்லறம் ஏற்றோர் தவமேற்று
வல்லவ ராக மாறிடலாம்!
தவத்தை ஏற்றோர் சான்றோர்கள்!
மற்றவ ரெல்லாம் பேராசை
வலையில் சிக்கிய வீணர்கள்!
பொன்னைச் சுட்டால் ஒளிபெருகும்!
துன்பத் தணலால் தவச்சான்றோர்
ஞானம் பெருகி ஒளிபெறுவார்!
பற்றை விலக்கி வாழ்வோரை
உயிரினம் அனைத்தும் வணங்கிநிற்கும்!
தவத்தின் வலிமை பெற்றவர்கள்
மரணந் தன்னை வென்றிடுவார்!
ஆற்ற லற்றோர் பலரானார்!
ஆற்ற லுள்ளோர் சிலரானார்!
தவம்செய் யாதோர் பலராக
உள்ளதே இதற்குக் காரணமாம்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
கூடா ஒழுக்கம் --28
போலித் துறவறம் இழிவு
நல்லொழுக்க வேடமிட்டு வல்லூறாய் வாழ்பவரை
உடலுக்குள் உலவுகின்ற ஐம்பூதம் கூடிநின்று
எள்ளிநகை யாடிநிற்கும்! இடித்துரைத்துப் பரிகசிக்கும்!
குற்றத்தைச் செய்பவர்கள் தவக்கோலம் பூண்டாலும்
சற்றுமிங்கே பயனில்லை! புல்கூட மதிக்காது!
மனஅடக்கம் இல்லாதோர் தவவேடம் போடுவது
புலித்தோலைப் பசுஅணிந்து மேய்வதுபோ லாகும்பார்!
தவச்சான்றோன் தீயசெயல் செய்வதுவோ சத்தமின்றி
பறவைக்குக் கண்ணிவைக்கும் ஏமாற்று வித்தையாகும்!
ஆசையை விட்டுவிட்டேன் என்றேதான் பொய்சொல்லும்
கயவனுக்கு உள்ளமே துன்பத்தைத் தந்துவிடும்!
துறவற எண்ணமின்றி பற்றற்ற கோலமிட்டால்
கொடியவர்கள் அவரைப்போல் உலகத்தில் யாருமில்லை!
குன்றிமணி செவ்வண்ணம் புறத்தினிலே தோன்றினாலும்
குன்றிமணி ஏந்துகின்ற கருநிறத்து மூக்கைப்போல்
காரிருளை அகத்தினிலே கொண்டவர்கள் இங்குண்டு!
மனமெல்லாம் கும்மிருட்டு! குளித்தமணம் உடலெல்லாம்!
இத்தகைய நீசர்கள் இவ்வுலகில் வாழ்கின்றார்!
வளையாத அம்புகளின் செயல்களிங்கே கொடிதம்மா!
வளைந்திருக்கும் இசையாழின் செயல்களிங்கே இனிதம்மா!
தோற்றத்தை விட்டுவிடு! செயலாலே எடைபோடு!
உலகம் பழிக்கும் செயலைத் துறந்துவிட்டால்
தலைமுடி சடைமுடி நீக்குதல் வேண்டாமே!
கள்ளாமை--29
அடுத்தவர் பொருளைக் கவருதல் தப்பு
தன்னை மற்றவர் இகழாமல்
வாழத் துடிக்கும் நல்லவர்கள்
மாற்றார் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் இன்றி வாழவேண்டும்!
அடுத்தவர் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் தீதின் நிழலாகும்!
திருட்டுச் செல்வம் கானல்நீர்!
உள்ளதும் அழிந்து மறைந்துவிடும்!
திருடிப் பிழைக்கும் வாழ்க்கையிலே
துன்பம் கொடிபோல் படர்ந்துவரும்!
பொருளைத் திருட நேரத்தைப்
பார்த்தே நிற்பவன் எண்ணத்தில்
அன்பும் அருளும் இருக்காது!
திருட்டுத் தனத்தால் வாழ்பவர்கள்
பேரா சையால் அழிந்திடுவார்!
அளவை அறிந்து வாழ்பவர்கள்
களவுத் தொழிலே செய்யமாட்டார்!
நேர்மை யாளர் நெஞ்சத்தில்
அறத்தின் ஆட்சி நிலைத்திருக்கும்!
பொய்மை, திருட்டில் வாழ்பவர்கள்
நெஞ்சில் வஞ்சகம் குடியிருக்கும்!
களவுத் தொழிலைச் செய்பவர்கள்
குற்றச் செருக்கில் அழிவார்கள்!
களவுத் தொழிலால் பழிபெருகும்!
செய்யாமல் வாழ்ந்தால் புகழ்பெருகும்!
வாய்மை-- 30
உண்மை பேசினால் நிம்மதி
எள்முனை யளவும் பொய்யற்ற
சொல்லைப் பேசுதல் வாய்மையாம்!
நற்பயன் இங்கே கிடைக்குமென்றால்
பொய்மையும் வாய்மை யாகிவிடும்!
மனதை மீறிப் பொய்சொன்னால்
மனமே சுட்டுப் பொசுக்கிவிடும்!
பொய்யை எண்ணா மனங்கொண்டோர்
நல்லோர் மனதில் வாழ்ந்திருப்பார்!
சொல்லும் செயலும் உண்மையானால்
தானம் தவத்தினும் மேலாகும்!
பொய்சொல் லாததே அறமாகும்!
வேறொரு அறச்செயல் தேவையில்லை!
குளித்தால் கிடைக்கும் புறத்தூய்மை!
வாய்மை தருமே அகத்தூய்மை!
ஒளிதரும் விளக்குகள் விளக்கல்ல!
வாய்மைப் பண்பே ஒளிவிளக்காம்!
அறிந்து உணர்ந்த நூலெல்லாம்
அறமெனச் சொல்வது வாய்மையைத்தான்!
பொய்மை என்றும் தோற்றுவிடும்!
வாய்மை ஒன்றே வென்றுவிடும்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments