
"எதுக்குமா, நான் டியூஷன் போகணும்..? நல்லாதானே படிக்கறேன். பத்தாம் ராங்க் வரை வாங்குறேன்..."
"இன்னும் நீ, நல்லா படிக்கணும். நிறைய மார்க் வாங்கணும்னு, அப்பா ஆசைப்படுறார், சஞ்சய்..."
"ஸ்கூலில் படிச்சா போதும். நான் டியூஷனுக்கு போகவே மாட்டேம்மா..." என்று ஓரப்பார்வையால், அம்மா சாந்தினியை பார்த்தான், சஞ்சய்.
**
அரசு உயர்நிலைப்பள்ளி.
"வணக்கம் மேடம்..."
"வாங்க... சந்திரன், உட்கார்ங்க..."
"என்னை வரச்சொன்னதாக, சஞ்சய் சொன்னான். அதனால் தான் வந்தேன்..."
"ஒரு ஐந்துநிமிஷம் பேசலாமா...?
"தாராளமா..."
"சஞ்சய், நல்லா படிக்கிற பையன்தான். அவனை டியூஷன் விடுறது தப்பில்லை. உங்க நிலமையை அவன் சொன்னபோது, எனக்கே அவன்மேல் ஓரு நம்பிக்கை ஏற்பட்டது. 'அப்பா ரொம்பவும் கஷ்டபடுறார். வாரத்தில் நாலுநாள் தான் வேலை இருக்கும். இந்த நிலமையிலும் என்னை டியூஷன் போகச் சொல்றார். மாசம் எழுநூறு ரூபாய் பீஸ் கட்டணும். முடியுற காரியமா, டீச்சர்'ன்னு சொல்றான். எட்டாம்வகுப்பு படிக்கும் போதே குடும்பச் சூழ்நிலையை புரிஞ்சி வெச்சிருக்கான். அதனால, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா...?"
"சொல்லுங்க மேடம்..!"
"நாளையிலிருந்து, தினமும் அரைமணிநேரத்துக்கு முன்னாடி, சஞ்சய்யை, பள்ளிக்கு வரச் சொல்லுங்க. அவனுக்கு, காலை, மாலையிலும் அரைமணிநேரம், டியூசன் எடுக்கிறதா, நான் முடிவு செய்திருக்கேன்..."
"இது நடக்கிற காரியமா..? டீச்சர்..."
"நிச்சயமா, நடக்கும். வகுப்பு பத்துமணிக்கு தான் ஆரம்பிக்கும். டீச்சர்ஸ் எல்லோரும் ஒருமணிநேரம், பொழுதுபோகாமல் எதையாவது நாங்க பேசிகிட்டே இருப்போம். அந்த நேரத்தை, படிக்கிற மாணவனுக்காக பயனுள்ள நேரமா மாற்றலாம்ன்னு நினைக்கிறேன். நம்பிக்கையோடு, சஞ்சய்யை அனுப்புங்க, சந்திரன்..."
**
இரவு மணி 8:00
தனது செல்ஃபோன் அழைப்பைக் கேட்டு எடுத்தார், தலைமையாசிரியர் ஞானபிரகாசம்.
"வணக்கம் சார்.... சஞ்சய்யோட அப்பா, சந்திரன் பேசுறேன்..."
"வணக்கம் சந்திரன்... உங்க போனை தான் எதிர்பார்த்து காத்திருக்கேன். போன காரியம் என்னாச்சு...? காயா...? பழமா...?"
"பழம்தான் சார்... உங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே, எனக்கு தெரியலை..."
"உங்க சூழ்நிலையை தான், சஞ்சய் சொல்லியிருக்கான். ஒரு விஷயம் நாம புரிஞ்சிக்கணும். டீச்சர்ஸ் எல்லோரிடம் மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறது. சஞ்சய்க்கு காலை, மாலையில் டியூஷன் எடுக்கிறதா, பரிமளம் டீச்சர் சொன்னது, என் மனசுக்கு நல்ல விஷயமா தோணுது. காரணம், இதே நிலை தொடர்ந்தால், மற்ற டீச்சர்ஸ்க்கும் இதில் ஒரு ஈடுபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் மாணவர்களுக்கிடையே படிக்கும் ஆர்வமும், டீச்சர்ஸ்களுக்கு சொல்லிக் கொடுக்கும் மனப்பக்குவமும் அதிகமாகும். மாணவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு, இது ஒரு ஆரம்பமாக இருக்கும்..."
"நிச்சயமாக சார்...!"
நாகர்கோவில் கோபால்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




1 Comments
மிக்க மகிழ்ச்சி
ReplyDelete