Ticker

6/recent/ticker-posts

ரொஹான் குணரத்தினவின் நூல்- கருத்தியல் ரீதியாக எதிர்க்கப்பட வேண்டும்


இலங்கையின் உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் எனும் தலைப்பில் தன்னைத் தானே சர்வதேச பயங்கரவாத ஆய்வாளராக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் பேராசிரியர் (?) ரொஹான் குணரத்தின என்பவர் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
 
அதன் வௌியீட்டு விழா எதிர்வரும் வௌ்ளிக்கிழமை 28ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது

குறித்த நூலின் உள்ளடக்கமாக அவர் சில விடயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.


அவையாவன, 
*அல்கொய்தாவின் 9/11 தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை உலகின் மிக மோசமான சர்வதேச பயங்கரவாத படுகொலையாகும். 2002ல் பாலியில் 202 பேரையும், 2003ல் மாட்ரிட்டில் 193 பேரையும், 2005ல் லண்டனில் 56 பேரையும், 2008ல் மும்பையில் 175 பேரையும், 2015ல் பாரிசில் 137 பேரையும், இலங்கையில் 275 பேரையும் மதவெறியர்கள் கொன்றனர். உலகளாவிய போக்கு, மதரீதியாக தூண்டப்பட்ட வன்முறை அதன் தோற்றம் சலாபி-ஜிஹாதிசத்தில் உள்ளது.

*பேரழிவுகரமான தாக்குதல் - எதிர்பாராத மற்றும் மிகவும் பரந்த அளவிலான சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் இலங்கையின் ஒற்றுமையை சீர்குலைத்து, அதன் பொருளாதார முதுகெலும்பான சுற்றுலாவை முடக்கியது. தொற்றுநோயுடன், அதன் அடுக்கு தாக்கம் நெருக்கடிக்கு வழிவகுத்தது.

*மத தீவிரவாதத்தை நிர்வகிப்பது இலங்கைக்கு புதிது என்பதால், பலவீனமான முடிவு நிலப்பரப்பு தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அடுத்த தாக்குதலைத் தடுக்க அரசாங்கம் எவ்வாறு கற்றுக்கொள்வது மற்றும் சமூகம் தன்னை வலுப்படுத்துவது?

*நிகழ்வின் சிறப்பம்சங்கள்; புத்தக வெளியீட்டு விழாவை ஒட்டி, இதுவரை பார்த்திராத சஹ்ரானின் வீடியோ திரையிடப்படும்.

*பாதுகாப்பைப் புறக்கணித்ததற்காக - அரசியல்வாதிகள், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டது. நமது மதத் தலைவர்கள் பிரத்தியேகவாத மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் போது அவர்களை எப்படி பொறுப்பாக்க வேண்டும்?

*தீவிரவாத வெளியீடுகள், வெளிநாட்டு சாமியார்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீவிர மதகுருமார்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள்?
*பாதுகாப்புத் தரப்பின் கீழான மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?

*இலங்கையர்களாகிய நாம், அடுத்த தாக்குதலுக்கு ஆளாகக் காத்திருக்க வேண்டுமா அல்லது ஒரு தாக்குதலைத் தடுக்க, நமது மத இடங்களை, புனிதப் பொக்கிஷமாக, அவசரமாக வடிவமைக்க வேண்டுமா?

போன்ற விடயங்களை அவர் அடிக்கோடிட்டுக் காட்டி நூலின் உள்ளடக்கம் குறித்து நமக்கு மேலோட்டமான பார்வையொன்றை ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டுகின்றார். 

குறித்த நூலின் உள்ளடக்கம் குறித்து அவர் பட்டியலிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது இது முற்று முழுதாக இலங்கை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வன்ம உணர்வுடன் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல் என்ற விடயம் தௌிவாக புலப்படுகின்றது.

இதில் இரண்டு விடயங்கள் குறித்து முதலில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். 

முதலாவது இதுவரை வௌியிடப்படாத சஹ்ரான் தொடர்பான காணொளி இவருக்கு எப்படிக் கிடைத்தது? பாதுகாப்புத் தரப்பினர் வழங்கியதாக இருந்தால், இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராத இவரிடம் அவ்வாறான ஒரு காணொளி வழங்கப்பட்டுள்ளமையானது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாக கொள்ள முடியும். எனவே குறித்த காணொளி இவருக்கு கிடைத்த வழிமுறை குறித்து முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

இரண்டாவது மிக விரைவில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம் என்பதைப் போல இவரது எதிர்வுகூறல் அமைந்துள்ளது

அவ்வாறு எதிர்வுகூறலுக்கான தகுதி ரொஹான் குணரத்தின எனும் சுய புகழ்ச்சிக்காரருக்கு அதற்கான தகுதி இருக்கின்றதா?  (ரொஹான் குணரத்தின குறித்த சுயபுகழ்ச்சிக்காரர் எனும் வார்த்தை என்னுடையதல்ல, ஆஸ்திரேலியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான கீர்த்திமிகு பத்தி எழுத்தாளருமான  Brian Toohey  கூறியது) 

இதே ரொஹான் குணரத்தினதான் ஒரு காலத்தில் அமெரிக்காவின் ப்ளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கை ராணுவத்தினரால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவே முடியாது என்றொரு கருத்தை முன்வைத்திருந்தார். பின்னர் இராணுவத்தின் கை ஓங்கத் தொடங்கியதும் அந்தர்பல்டி அடித்து ராணுவத்தின் அபிமானியாக தன்னை இனம் காட்டிக் கொண்டார்

 2003 ஆம் ஆண்டில், அல்-கொய்தா தளபதி (ஹம்பலி என்றழைக்கப்படும்) ரிதுவான் இசாமுதீன் ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி விஜயம் செய்து, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மீது விமானங்களைப் பறக்கவிட்டு தாக்குதல் மேற்கொள்வதற்கான சதித்திட்டமொன்றைத் தீட்டியதாக  ரொஹான் குணரத்னா கருத்து வௌியிட்டிருந்தார்; இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என ஆஸ்திரேலியா புலனாய்வு அமைப்புகளினால் பாிகாசத்துடன் நிராகரிக்கப்பட்டது

அதே ஆண்டில் ஜனவரி 2003 இல், குணரத்ன, நியூசிலாந்தின் ஹெரால்ட் செய்தித்தாளுக்கு பொறுப்பற்ற, ஆதாரமற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் பல இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத குழுக்கள் நியூசிலாந்து நாட்டில் இயங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அவர்கள் பணம் திரட்டுவதாகவும், தீவிரவாத கருத்துக்களை பரப்புவதாகவும், புதிய ஆட்களை சேர்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார், ஆனால் நியூசிலாந்து நிதி புலனாய்வு பிரிவு அந்த கூற்றுக்களை திட்டவட்டமாக மறுத்திருந்தது.  நியூசிலாந்தில் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய அசையா அல்லது அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என நியூசிலாந்து நிதிப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்திய நிலையில், ரொஹான் குணரத்னவின் அறிக்கையினால் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் இஸ்லாம் மீது தேவையற்ற அச்சம் ஏற்பட்டது. குறித்த வெறுப்புணர்வின் உச்சகட்டமாக நியூசிலாந்தின் கிரைஸ்ட் சேர்ச் நகரில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்திருந்தது.

2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வெளியாகும் 'தி ஏஜ்' செய்தித்தாளுக்கு பேராசிரியர் ரொஹான் குணரத்ன குறித்த கட்டுரை ஒன்றை கேரி ஹியூஸ் தொகுத்திருந்தார்.
அல்கொய்தா அல்லது பயங்கரவாதம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போதெல்லாம், ரொஹான் குணரத்ன அதற்காக முன்வருகிறார். அவர் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வருகிறார்.' என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது ரொஹான் குணரத்னவை பாராட்டுவது போல் தோன்றினாலும், கேரி ஹியூஸ் தனது கட்டுரையில் ரொஹான் குணரத்னவின் மர்மமான செயல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியுள்ளதுடன், வஞ்சகப்புகழ்ச்சி மூலம் ரொஹான் குணரத்தினவைக் கடுமையாக கிண்டல் அடித்துள்ளார்.

ரொஹான் குணரத்ன தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆய்வாளர்களில் எவ்வளவு கேவலம் கெட்ட பேர்வழி  என்பது பிரிட்டனின் 'த ஒப்சர்வர்' நாளிதழின் உள் விவகார ஆசிரியரும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நீண்டகால புலனாய்வு ஊடகவியலாளருமான மார்ட்டின் பிரைட்டின் அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.

"பின்லேடனைப் பற்றி கூறும் அனைத்து மக்களிலும் அவர் மிகவும் குறைவான நம்பத்தன்மை கொண்டவர். பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை ஒரு பகடையாகப்  பயன்படுத்துகிறார்கள்." என்று விமர்சித்துள்ளார்.

ரொஹான் குணரத்ன தனது நிலைப்பாட்டை ஒரே இரவில் மாற்றி அந்தர்பல்டி அடித்துக் கருத்துக்களை வௌியிடுவதிலும் வல்லவர். அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியரான டேவிட் ஹிக் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டபோது, டேவிட் ஹிக் அல்கொய்தா உறுப்பினர் அல்ல எனவும், அவர் பொதுமக்களை தாக்குவதற்கு திட்டமிடவில்லை எனவும், அவ்வாறான தாக்குதல்கள் அவருக்கு அவசியமில்லை எனவும் குணரத்ன தெரிவித்திருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, டேவிட் ஹிக்கை இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டுவர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அறிவித்தபோது, ரொஹான் குணரத்தின திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அமெரிக்க அறிக்கைக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்.

பசிபிக் ஜர்னலிசம் ரிவியூ , "இந்தோனேசியா குறித்து அவர் எழுதுவது குறிப்பிடத்தக்க வகையில் குறுகிய ஆதாரங்கள், ஆழ்ந்த அறிவின்மை மற்றும் இந்தோனேசிய ஆயுதப்படைகளின் வரலாறு மற்றும் அவர்களின் உளவுத்துறையின் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதலை வெளிப்படுத்துகிறது" என்று ரொஹான் குணரத்தின குறித்து விமர்சனக் கட்டுரையொன்றை வௌியிட்டிருந்தது. 

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மற்றும் புலனாய்வு விவகாரங்களில் நிபுணரான பிரையன் டூஹே-Brian Toohey   ரொஹான் குணரத்தினவை "சுய புகழ்ச்சிக்கார நிபுணர்" என்று கிண்டலடித்துள்ளார்

ஐ.நா.வின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் "முதன்மைப் புலனாய்வாளர்" என்று ரொஹன் குணரத்தின தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர் அது தொடர்பில் பொய்யுரைத்துள்ளார். உண்மையில், அவர் ஆஸ்திரேலிய பாராளுமன்ற நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் மட்டுமே பேசியுள்ளார். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பயங்கரவாத  ஆய்வாளரின் பொறுப்பற்ற கிறுக்குத் தனங்களுக்கு கனடா ஒரு தடவை கன்னத்தில் ஓங்கி அறை விட்டிருந்தது.

2011 பெப்ரவரியில் ரொஹான் குணரத்ன 'லக்பிம' பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். வழமை போன்று எவ்வித ஆதாரமும் வழங்காமல் 'கனடியத் தமிழர் பேரவை' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் இயங்குவதாக அவர் அந்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் விளைவாக, போருக்கு எதிரான கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழ் மக்களின் சந்தேகமும் அதிருப்தியும் அந்த அமைப்பின் மீது இருந்தது. இது தமது அமைப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்துவதாகக் கூறி கனடாவின் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் கனேடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல் செய்தது. ரொஹான் குணரத்ன, சட்டவிரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, அந்த அமைப்புக்கு பொய்யான அவதூறு ஏற்படுத்தியதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ரொஹான் குணரத்னவுக்கு ஐம்பத்து மூவாயிரம் கனேடிய டொலர்களை (சுமார் அறுபத்து ஒன்பது இலட்சம் ரூபா) இழப்பீடாகவும், அவமதிப்புக்காக நீதிமன்றச் செலவினமாக மேலும் பதினாறாயிரம் கனேடிய டொலர்களைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

குணரத்னவின் அறிக்கைகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிற்கு வெளியே  இலங்கைத் தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய பங்களிப்பைக் கொண்ட அமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலை அதிகரிக்கவும், இலங்கையின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் போர்க்குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச சமூகத்தின் முன் முன்வைக்கப்படுவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கவும் இந்தப் பெயரளவிலான ஆய்வாளர் இப்படித்தான் வழி செய்திருந்தார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகள் குறித்து 2014 ஆம் ஆண்டு பயங்கராவதம் தொடர்பான சர்வதேச நிபுணராக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்தப் பிரகிருதி,  அற்புதமான கண்டுபிடிப்பொன்றை வௌியிட்டிருந்தார். “மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் செய்ய அனுமதித்ததன் மூலம்  மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டது” என்பதுதான் அவரது கண்டுபிடிப்பாகும்.  

அவருடைய அரசியல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அலசல்கள் எந்த அளவுக்கு முட்டாள்தனமானவை என்பதை கோடிட்டுக் காட்ட அந்த ஆய்வறிக்கை  ஒன்றே போதுமானது. 

சீனாவில் உய்குர் முஸ்­லிம்கள் சீன அரசின் அடாவடிகள், அடக்குமுறைகளுக்குப் பலியாகியுள்ளதை உலகே அறியும். அந்த உய்குர்களின் மொழியே தெரியாமல் அவர்களின் அரசியல் இயக்கங்களுக்கு பயங்கரவாதப் பட்டம்சூட்டி அவர்களை பயங்கரவாதிகளென உலகுக்குச் சித்தரித்த ரொஹான் குணரத்தினவின் விஷமத்தனமான ஆய்வினை உய்குர் மொழியைக்கற்று அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உண்மையை அறிந்த அமெரிக்கப் பேராசிரியர் Sean Robers தனது The War on The Uyghurs என்ற நூலில் வெகுவாகக் கண்டித்துள்ளார். 

இலங்கையில் இனங்களின் அரசியல் பரம்பல் மற்றும் அவற்றுக்கான அதிகாரப் பரவலாக்கலின் நியாயம் குறித்து ஏற்றுக் கொள்ள முடியாதவர், அதனை வன்மையாக மறுக்க முனையும் ஒருவர், சர்வதேச ரீதியாக எந்தவொரு விடயத்திலும் நியாயபூர்வமான கருத்தை வௌியிட்டிராத, தனது கருத்துக்களின் முரண்பாடு குறித்து சர்வதேச புத்திஜீவிகளால் எள்ளி நகையாடப்படும் ஒருவர் பயங்கரவாத ஆய்வு நிபுணராக தன்னைத் தானே அடையாளப் படுத்திக் கொள்வதைப் போன்ற கிறுக்குத் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

அப்படியான அரைவேக்காட்டு ஆய்வாளர் தான் இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறித்து பீதியொன்றை ஏற்படுத்தி ராஜபக்‌ஷ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான இனவாத உணர்வொன்றை இந்நாட்டில் தட்டியெழுப்ப தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளார்

குறித்த சுயபுகழ்ச்சிக்கார ஆய்வாளரின் முயற்சிகள் சாத்தியப்படுவதற்கான சூழல் தற்போதைய இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பெரும்பான்மை மக்களில் அதிகமானவர்கள் இனவாதம், மதவாதம் என்பவற்றை நிராகரிக்கும் மனோநிலைக்கு மாறிவிட்டார்கள். 

அதே நேரம் இனவாதிகள் கண்டதையெல்லாம் எழுதி இஸ்லாமிய சமூகத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் போதெல்லாம் முஸ்லிம்கள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது என்பது ரொஹான் குணரத்தின போன்றவர்களுக்கு கருத்தியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் மூலம் புரிய வைக்கப்பட வேண்டும்.


 



Post a Comment

0 Comments