தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் 2வது பெரிய நகரமான சென்னை, தென்னிந்தியாவின் வாயிலாகவும் பார்க்கப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களில் அளப்பரிய பங்காற்றிய மெட்ராஸ், சென்னை என பெயர் மாறியது எப்படி தெரியுமா?
கிபி 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை ஒரு முக்கிய நகரமாக வளரத் தொடங்கியது. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சென்னை மாநகரம் உருவானது.
1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசபட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று சென்னை. சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.
சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும், பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள், அதைவிடவும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை.
கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர். அவரது நினைவாகவே கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.
கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புகள் கட்டி எழுப்பப்பட்டன. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. இதைத் தொடர்ந்து, 1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றது சென்னை.
கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான இந்தப்பகுதி "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. சென்னப்பட்டினம் ஆங்கிலேயர் வசம் வருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே டச்சுக்காரர்களால் மதராஸ் என்று சொல்லப்பட்டது. மாதரசன் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்புக்கு வசதியாக ’மதராஸ்’ என்று அழைத்தார்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதுவும் காலப்போக்கில் மக்களின் உச்சரிப்பால் மருவி, மெட்ராஸ் என மாறிப் போனது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் மெட்ராஸ் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் மெட்ராஸ் உடன் இணைக்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது மெட்ராஸ்.
அதன்பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தலைநகரான மெட்ராஸ், 1996ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments