Ticker

6/recent/ticker-posts

24 வருட இடைவெளிக்குப் பின் இலங்கையில் பெண் பிரதமராகும் கலாநிதி ஹரிணி அமரசூரிய!


இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க  பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது! இதுவரை பிரதமர் பதவியை வகித்தவர்களுள், இவர் 16வது பிரதமராவார்.

"நாட்டை நிச்சயமாக சரிவடையச் செய்த அனுபவம் எங்களுக்கு இல்லை. ஆனால், நாட்டைக் கட்டியெழுப்புவதில் நாம் அனுபவத்தைப் பெறுவோம்"  என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஹரிணி அமரசூரிய, எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவரான இவர் இலங்கையில் கல்வியாளர், உரிமை ஆர்வலர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதியாகவும் மதிக்கப்படுகின்றார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த இவர்,  2019ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்தவராவார்; கருத்தியல் ரீதியாக தேசிய மக்கள் சக்தியின் முக்கிய அங்கத்தவருமாவார்.
தன்னை ஒரு தாராளவாதியாக கருதும் கலாநிதியவர்கள்,  இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறையின் திறமையின்மை போன்ற அழுத்தமான பிரச்சினைகள் குறித்த தனது ஆராய்ச்சிகளால் நன்கு அறியப்பட்டவர்.

தற்போது 'நெஸ்ட்' எனப்படும் இலங்கை உள்ளூர் அரசுசாரா அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். 

இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

1960 ஜுலை 21ம் திகதி முதல் 1965 மார்ச் 25ம் திகதிவரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவராவார். பின்னர் 1994 ஆகஸ்ட் 19ம் திகதி முதல் 1994 செப்டம்பர் 12ம் திகதிவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராகப் பதவி வகித்தார். ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும்,  தனது தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14ம் திகதி முதல் 2000 ஆகஸ்ட் 9ம் திகதி வரை அவரே பிரதமராகச் செயற்பட்டார். 
2000ம் ஆண்டுக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச, தி.மு. ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்தனர். இறுதியாக தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமாச் செய்தார். 

இவ்வாறானதொரு பின்புலத்தில் 24 வருட இடைவெளிக்குப் பின்னர், இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராக பதவியேற்கின்றமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும். வாழ்த்துக்கள்!

சட்டத்தின் பிரகாரம்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் திறன் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பொதுத்தேர்தல் நடைபெற்று, புதிய அரசாங்கத்தை நிறுவும் வரை செயற்படும் இடைக்கால அரசில், நான்கு பேர்கொண்ட உறுப்பினர்கள் 15 அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments