Ticker

6/recent/ticker-posts

வானவில்...!


"சினிமாவில் நடிக்க ஆசையா...?" உங்கள் வயது இருபதிலிருந்து, முப்பதுக்குள் இருக்கவும். நடிப்பில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்...
 

அன்றைய நாளிதழில் வெளியாகியிருந்த, அந்த செய்தியை வாசித்துக் கொண்டிருந்தவன், அதில் குறிப்பிட்டிருந்த பத்து இலக்க அலைபேசி எண்ணை குறித்துக் கொண்டான்.

வாரம் ஒன்று கழிந்தது.

நித்யா ஸ்டியோவின் வளாகத்தில், யமஹா பைக்கில் இருந்து இறங்கியவன், அந்த பிரமாண்டமான ஹாலில் நுழைந்தான். அங்கே சினிமாவில் நடிக்க சான்சுக்காக, பலர் காத்திருந்தனர். வரவேற்பு அறையில் இருந்த இளம்பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

இரண்டுமணி நேரத்துக்குபின்...

ஏ.ஸி. அறையின் கதவு மெல்ல திறந்துக் கொள்ள, வெளிப்பட்டாள், அந்த இளம்பெண். முகத்தில் மேக்கப் சற்றும் கலையாமல் நூறு சதவீதத்தை காட்டியிருந்தாள்.

"மிஸ்டர் சக்தீஸ்வரன்..."

குரல் கேட்டு நிமிர்ந்து எழுந்தான், அவன் என்கிற சக்தீஸ்வரன்.

"உள்ளே வாங்க..."

அறைக்குள் நுழைந்தான், சக்தீஸ்வரன்.

உள்ளே...

சுழலும் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி ஐந்துபேர்கள், பரபரப்பாக இருந்தனர்.

"வாங்க சக்தீஸ்வரன்... உங்க முழுபெயர் சக்தீஸ்வரன் தானா...?"

"ஆமாம் சார்..."

"உட்கார்ங்க..."

"பரவாயில்லை சார்..." சொல்லிக் கொண்டே பவ்யமா நின்றான்.

"எனக்கு இந்த பணிவு, மரியாதை எல்லாம் பிடிக்காது. நானும் ஒரு சராசரி மனுசன் தான். உட்கார்ந்து பேசலாம்..."

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான், சக்தீஸ்வரன்.

"சினிமாவில் நடிக்க முழுமையான பயிற்சி எடுத்திருக்கீங்களா...? அனுபவங்கள் ஏதும் உண்டுமா...?"

"எங்க ஊர்திருவிழாவில், நடக்கும் நாடகப் போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கியிருக்கேன். ஆனா... சினிமாவில் நடிக்கணும்ன்னு ஆசை மனசுல வளர்ந்திட்டே இருந்திடிச்சு. போன வாரம் பத்திரிகை செய்தில வெளிவந்த தலைப்பை பார்த்ததும், சான்சுக்காக இங்கே வந்திருக்கேன்..."

"உங்களால, ரஜினி சார் போல நடிச்சு காட்டமுடியுமா...?"

"முடியாது சார்..."

"ம்.... சரி. கமல் போல நடிச்சு காட்டுங்க..."

மௌனமா இருந்தான், சக்தீஸ்வரன்.

"என்ன சக்தி... இப்படியே ஒண்ணுமே தெரியாதுன்னு, மௌனமா இருந்திட்டா... எதுக்கு இங்கே வந்தீங்க...?" கடுப்பானார், டைரக்டர் சாம்பசிவம்.

நாற்காலியில் இருந்த எழுந்த சக்தீஸ்வரன்,"டைரக்டர் சார்... முதலில் என்னை ஆசீர்வதியுங்க..." சொல்லிக் கொண்டே, சாம்பசிவத்தின் காலைத் தொட்டு வணங்கினான்.

"கடவுளும் உன்னை ஆசீர்வதிக்கட்டும்... எழுந்திரு, சக்தி..."

சக்தீஸ்வரன் எழும்பவே இல்லை. பதறிப்போனார் சாம்பசிவம்.

"நீலகண்டன்... இங்க வாங்க. சக்தி என் காலில் விழுந்தான். எழும்பவே இல்லை. எழுப்பி விடுங்க, அவனை..."

சக்தீஸ்வரனை தட்டி எழுப்பிப் பார்த்த முயற்சியில் தோற்றுப்போனார், நீலகண்டன்.

"டைரக்டர் சார்... சக்திக்கு என்னாச்சின்னு தெரியலியே...?" 

விநாடிகள், பரபரப்பான நிமிஷங்களாய் கடந்துக் கொண்டிருந்தது. ஏதும் செயவதறியாமல் அனைவரும் திகைத்து நின்றனர்.

பில்டர் கேனில் இருந்த தண்ணீரை எடுத்து, சக்தீஸ்வரன் முகத்தில் தெளித்தார், நீலகண்டன்.

அசைவே இல்லை...

மீண்டும், மீண்டும் தண்ணீரை எடுத்து தெளித்தார்.

மெல்ல... மெல்ல கண்ணை திறந்து பார்த்தான், சக்தீஸ்வரன்.

நிம்மதி பெருமூச்சு விட்டார், சாம்பசிவம்.

"என்னாச்சு... சக்தி... உங்களுக்கு...?"

"ஏன் சார், என்னை எழுப்பினீங்க...?"

அனைவரின் பார்வையும் சக்தீஸ்வரன் மேல் பாய்ந்தது.

பேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து, எடுத்த அந்த கர்ச்சீப்பால் தன் முகத்தில் அப்பியிருந்த தண்ணீரை துடைத்து, சாம்பவசிவத்தை பார்த்துச் சொன்னான், சக்தீஸ்வரன்.

"ஒருவரின் காலில் விழுந்தவன், தீடீர்ன்னு மயக்கமாகவோ, இறந்துபோனாலோ... அந்தநேரத்தில் உங்கள் மனநிலை எப்டி இருக்கும். அதனால அந்த இடமே ஒரு பரபரப்பாக இருந்திருக்கும். அதை உங்களுக்கு உணர்த்தவே நானும் மயக்கமா நடிச்சேன்..."

"இதனால உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்ன்னு நம்புறீங்களா...?" ஏளனமா, சிரித்துக்கொண்டே கேட்டார், நீலகண்டன்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா..? இன்னிக்கு, சினிமா சான்சுக்காக வந்திருந்தவங்க யாரையாவது நீங்க தேர்வு செய்திருப்பீங்களா...? செய்திருக்க மாட்டீங்க. ஏன்னா, நீங்க கேட்கிற கேள்வியும் முறையானது இல்லை. ஆயிரம் கனவுகளோட வந்திருக்கிறவங்களுட்ட, ரஜினிசார் போல, கமல் சார் போல நடிக்கமுடியுமான்னு கேட்கிறீங்க. ரஜினி போல நடிச்சா... நாங்க ரஜினி ஆகமுடியுமா...? அல்லது கமலு போல நடிச்சா... கமலாக முடியுமா...? யோசிச்சு பாருங்க சார். திறமைங்கிறது தானா வருவது. ஒவ்வொரு சிட்டிவியூசனுக்கு ஏற்றமாதிரி நடிக்கமுடியுமான்னு கேளுங்க. நிச்சயமா நடிச்சுக் காட்டுவாங்க. அவங்க, கனவை கலைச்சிடாதீங்க... சார்..." சொல்லிக்கொண்டே, அறையிலிருந்து வெளியேறினான், சக்தீஸ்வரன்.

கோபால்


 



Post a Comment

1 Comments

  1. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete