Ticker

6/recent/ticker-posts

ரூமடிக் பீவர் என்றால் என்ன?


எனது மகனுக்கு Rheumatic Fever இருப்பதாகவும் இதற்குப் பல வருடங்கள் ஒருவகையான ஊசி போட வேண்டியுள்ளதாகவும் டாக்டர் ஒருவர் கூறி இன்று முதலாவது ஊசியையும் போட்டார். இந் நோய் என்ன என்பதையும் இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விபரமாக குறிப்பிடவும். 
ரூமடிக் பீவர் (Rheumati Fever) என்பது ஒருவகை பற்றீரியாவினால் எற்படும் நோயாகும். பொதுவாக இந்நோய் 5 வயது முதல் 20 வயதினரையே தாக்குகின்றது.

இந்நோய் தொண்டையில் ஏற்படக்கூடிய ஒருவகை பற்றீயாவின் தொற்றுதலுக்குச் சிகிச்சை அளிக்காமல் இருக்கும் நிலையில் அல்லது தகுந்த சிகிச்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குக் கொடுக்காமல் இருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. 

இது வறுமையான சன நெரிச்சல் கூடுதலாக இருக்கும் பகுதிகளில் வாழும் பிள்ளைகளையே கூடுதலாகத் தாக்குகின்றது.  

இவ்வாறு தொண்டையைத் தாக்கக் கூடிய இந்த பற்றீரியாத் தொற்றுக்கு தகுந்த சிகிச்சையளிக்காத போது இக்கிருமிகள் உடம்பில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் மூட்டுகள், இருதயம், மூளை மற்றும் தோல் போன்ற உறுப்புக்களுக்குப் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. 

மூட்டுக்களைப் பொறுத்தவரையில் கை, கால்களில் உள்ள பெரிய மூட்டுக்களே அநேகமாகப் பாதிக்கப்படுவதோடு இந்நோயின் விசேட தன்மையாக ஒரு மூட்டிலிருந்து மற்றுமொரு மூட்டுக்கு இந்நோவு மாறும்.

இவ்வாறு மூட்டுக்களில் நோவு ஏற்படும் காலத்தில் காய்ச்சலும் ஏற்படும், அத்துடன் இக்கட்டத்தில் மூட்டுக்களை அசைக்க முடியாத நிலை ஏற்படும். மூட்டுக்களுக்கு அடுத்தபடியாக இக்கிருமியின் தாக்கம் இருதயத்தைப் பாதிக்கும்.

இது இருதயத்தின் சகல பகுதிகளையும் தாக்குகின்றபோதும் கூட விசேடமாக இருதயத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள இருதய வால்வுகளையே (Valve) கூடுதலாகத் தாக்குகின்றன. 

இத்தாக்கம் பொதுவாக ஒரு நிரந்தரத் தாக்கமாக இருப்பதோடு இது இறுதியில் இருதயம் செயலிழப்பதற்கு காரணமாகவும் அமைகின்றது.

அத்துடன் இருதயத்தின் தொழிற்பாடு இழக்கும்போது அது நுரையீரலையும் பாதித்து இளம் வயதிலேயே மரணம் ஏற்படுவதற்கும் காரணமாகவும் அமைகின்றது. மேலும் இந்நோய்க் கிருமியின் தாக்கத்தினால் மூளையும் பாதிப்படைகின்றது.

இதன் காரணமாக கையில் அசாதாரண அசைவுகள் , நடையில் வித்தியாசம்  தன் பேச்சில் தடை முக பாவனையில் வித்தியாசம் போன்றவைகள் ஏற்படலாம். இந்நிலைக்குச் சரியான சிகிச்சையளிக்காவிட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட மேலும் பல நோய்கள் ஏற்படலாம். 

மேலும் தோலில் சிவப்பு நிற நோவற்ற சிறு கட்டிகள் ஏற்படுவதும் ரூமடிக் பீவரின் ஒரு அறிகுறியாகும். இது தவிர களைப்பு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற நோய் அறிகுறிகளும் காணப்படலாம். இந் நோயினால் இருதயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படாவிட்டால் சிகிச்சை மூலம் பூரணமாகக் குணப்படுத்தலாம்.

இருதயத்திற்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பல வருடங்களுக்கு மாத்திரைகள் அல்லது ஊசி தொடர்ச்சியாக எடுக்க வேண்டியேற்படும்.

எனவே நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம் பல பாதிப்புக்களில் இருந்து எமது இளம் சிறார்களைக் காப்பாற்றலாம். இந்நோய் வராமல் தடுப்பதாயின் தொண்டையில் ஏற்படும் பற்றீரியா தொற்றுதலான Tonsilitis ஏற்படாமல் தவிர்ப்பதே மேல். விசேடமாகக் குளிர்பானங்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் Tonsilitis ஏற்பட்டு விட்டால் உடனடியாகச் சிகிச்சை பெறுவது முக்கியம். 

எனவே பெற்றோர்கள் இந்த Tonsilitis எனப்படும் தொண்டை வீக்கத்தை அலட்சியமாக அல்லது ஒரு சாதாரண விடயமாகக் கருதக்கூடாது. இதைப் பொதுவாக Tonsil எனவும் சிலர் அழைப்பதுண்டு.

ஒரு சில பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு Tonsil ஏற்பட்டு மருந்து எடுத்தாலும்கூட நோயின் குறி குணங்கள் ஒரு சில நாட்களில் குறைந்தவுடன் மருந்தையும் நிறுத்தி விடுகிறார்கள். இது ஒரு பிழையான கருத்தாகும். ஆகக் குறைந்தது 10 நாட்களுக்காவது சிகிச்சையைத் தொடர் வேண்டும்.

மேலும் இந்நோய் ஏற்பட்டு விட்டால் அதிகளவு திரவ ஆகாரங்கள் பழச்சாறு போன்றவைகளை உட்கொள்வதோடு பாரமில்லாத உணவு வகைகளைக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையும் கொடுக்க வேண்டும். மேலும் கோப்பி, மென்பானங்கள், பொரித்த உணவு வகைகள் பதனிடப்பட்ட உணவு வகைகள் போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் நவீன வைத்தியத்துறையில் மாத்திரம்தான் இதற்கான சிகிச்சையுள்ளது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். 

மேலும் மூட்டுக்கள் மற்றும் இருதயம் போன்ற உறுப்புக்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளமையினால் மருந்து உட்கொள்வதைப் போன்றே ஓய்வும் மிக மிக முக்கியமாகும். எனவே இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களை நோயின் தீவிரத் தன்மை குறையும் வரை விளையாட்டுகளிலும் ஏனைய களைப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்களிலிருந்தும் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்.

இங்கு கேள்வி அனுப்பியிருக்கும் தாயும் தனது பிள்ளையின் விடயத்தில் வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளைக் கேட்டும் தொடர்ச்சியாக உங்கள் வைத்தியர் சிபாரிசு செய்யும் சிகிச்சையை மேற்கொண்டால் இன்ஷா அல்லாஹ் உங்கள் மகனுக்கும் பாதிப்பு ஏற்படாது.

இறுதியாக வாசகர்களுக்கு அதிலும் விசேடமாகப் பெற்றோர்களுக்கு ஒரு செய்தியாக உங்களது பிள்ளைகளுக்கு Tonsilitis அல்ல து Tonsil எனப்படும் தொண்டை வீக்கம் ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடாமல் உடனடியாக சிகிச்சை பெறுமாறு வேண்டுகிறேன்.

DR.NASEEM


 



Post a Comment

0 Comments