காஸா 'மெனைட்ஸ்' பழங்குடிகள் குடியேறி வாழ்ந்து வந்த பூமியாகும். துருக்கியின் ஆசியாப் பகுதியில் அனடொலியாவில் வாழ்ந்தவர்கள் 'மினோஆன்ஸ்' அல்லது 'மெனைட்ஸ்' என்று அழைக்கப்பட்டு வந்தனர்.
அரபுலகின் மிகவும் பழமையான குடிமக்கள் இந்த 'மெனைட்ஸ்' பழங்குடிகள் என்று கருதப் படுகிறது. இவர்களே கி. பி. 1000வது ஆண்டில் நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் என்றும், காஸா நகரை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும் என்றும் கூறப்படுகின்றது.
'மெனைட்ஸ்' பழங்குடிகள்
பாலஸ்தீனத்திலிருந்த காஸாவை பண்டைய காலமுதல் அரேபியர்கள், காஸா என்றுதான் அழைத்து வந்துள்ளனர். பிறகு அது 'ஹாஷேமின் காஸா’ என்றழைக்கப்பட்டுள்ளது. காஸாவில் இறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனாரான, ஹாஷேம் பின் அப்துல் மனாஃபைக் குறிப்பிடும் வகையில் இது பரிணாமம் பெற்றது.
இஸ்லாமிய கருத்தியல் நிறுவனராகக் கருதப்படும் இமாம் அல்-ஷஃபிஈ பிறந்த இடமும் காஸாவாகும். நான்காம் நூற்றாண்டில், இன்றைய இஸ்ரேலில் சீசரியாப் பகுதியில் பிறந்த கிறித்துவ இறைவியலாளர், 'காஸா' என்பதன் பொருள் 'பெருமை', 'அதிகாரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பலர் இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்ததென்றே நம்புகின்றனர். கிரேக்கத்தில் இதன் பொருள் 'செல்வம்' அல்லது 'வளம்' என்பதாகும்.
1858ம் ஆண்டில் காஸா
காஸா நகரத்தின் மூலோபாய முக்கியத்துவம் குறித்துக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அறிஞர் ரிச்சர்ட் கோதில், தெற்கு அரேபியா மற்றும் கிழக்கிலிருந்து சிரியா, துருக்கி, ஐரோப்பா ஆகியவற்றுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களின் சந்திப்பாகவும், பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்குமிடையிலான இணைப்பாக காஸா நகரம் இருந்ததாக, ரப்பி மார்டின் மேயர் என்ற அமெரிக்கர் எழுதி, 1907ம் ஆண்டில் வெளியான நூலின் அறிமுக உரையில் குறிப்பிடுகிறார்.
எகிப்து, பாபிலோனியா, அசிரியன், கிரேக்கம், ஈரான், ரோம சாம்ராஜ்யம் ஆகியவற்றால் காஸா ஆளப்பட்டுள்ளது. பாலஸ்தீன வரலாற்றாசிரியர் அரிஃப் அல்-அரிஃப், "காஸாவின் வரலாறு புகழ் பெற்றது" எனக்குறிப்பிடுகின்றார். “காஸா பல விதமான பேரழிவுகளையும், ஆபத்துகளையும் எதிர்கொண்டுள்ளது. அதைத் தாக்கியவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்கள் இங்கிருந்து வேரறுக்கப் பட்டனர். இதற்கு விதிவிலக்கே இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
எகிப்து மற்றும் இந்தியாவுக்கிடையிலான முக்கியமான வர்த்தக இணைப்பாக 'காஸா' இருந்து வந்துள்ளது. அரபுலகில் காஸாவின் முக்கியத்துவம் பெருக, இவ்விணைப்பே முக்கிய காரணமாகும். செங்கடல் வழியாகச் செல்வதைவிடவும், இந்தவழி அரேபிய வணிகர்களுக்கு மிகவும் உகந்ததாக இருந்துள்ளது.
'கனான் மக்கள் காஸா பகுதியில் 'ஆலிவ்' பயிரிட்டனர்' எனக்கூறும் அல்- அரிஃப், பானைகள் செய்வது, சுரங்கப் பணிகளில் ஈடுபடுவது அவர்களின் ஜீவனோபாயத் தொழில்களாக இருந்து வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
அல்- அரிஃபின் குறிப்பினை ஆதாரமாகக் கொண்டு, ஆதிகாலம் தொட்டே காஸா மக்கள் சுரங்கம் தோண்டுவதில் திறமை மிகக் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர் என்பது புலனாகின்றது.
இந்த காஸாவின் பூமிக்கடியில்தான், இப்பொழுது இரண்டு மீற்றர் உயரத்தில் ஒரு மீற்றர் அகலம் கொண்ட 500 கிலோ மீட்டர் தூரத்திலான 'சிலந்திவலை சுரங்க நகர்' அமைக்கப் பட்டுள்ளதாகவும், மின்சார வசதிகளோடு, எண்ணிலடங்கா பாதைகள் கொண்ட இந்த பூமிக்கடியிலான நகரத்தில் இருந்து கொண்டுதான், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தரைப்படையினரைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சுரங்கவழி மூலம் எகிப்து நாட்டிற்குச் செல்லக்கூடிய வசதிகள் இருப்பதாகவும், ஹமாஸ் இதனூடாகவே ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கடத்திவருவதாகவும் கூறப்படுகின்றது.
சுமார் 25,000 படை வீரர்கள் தங்கக் கூடிய வசதி கொண்ட சுரங்கமானது, குண்டு போட்டாலும் தகர்க்க முடியாத பொறியியல் கட்டமைப்பைக் கொண்டது என்றும், உள்ளே பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் வைக்கப் பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றைத் தாக்குவதும், ஹாமாஸிடம் தாக்குப் பிடிப்பதும் இஸ்ரேல் படைகளுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கும் என்று எவரும் நினைக்க மாட்டார்கள்.
பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்களால் காஸாவாழ் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளர்களுமே மரணமடைந்து வருகின்றனர்.
ஹமாஸுடன் நேருக்கு நேர் மோதத் தெம்பில்லாத இஸ்ரேல், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குவதில் இன்பம் காண்கின்றது.
பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்
அதனால், உலக முழுவதிலிருந்தும், குறிப்பாக இஸ்ரேல் ஆதரவு நாடுகள் அனைத்திலிருந்துமே மக்கள் வெள்ளமாகத் திரண்டு, போர் நிறுத்தத்துக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும், இஸ்ரேலும் அமெரிக்காவும் சண்டையை நிறுத்துவதற்கு உடன்படுவதற்கான எவ்வித அடையாளமும் தெரியவில்லை.
தற்காலிகமாக சண்டையை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், செய்தியாளர் கூட்டமொன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு நெருக்குதல் அளித்தபோதிலும், அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
'சண்டையை நிறுத்தினால் அது ஹமாஸுக்கு சாதகமாக இருக்கும்' என்பதே பிளிங்கனின் பதிலாக இருந்தது. இதிலிருந்து பிளிங்கன் தமது தோல்வியைத்தான் சூசகமாக ஏற்றுக் கொள்கின்றார் என்பது அவருக்கே புரியவில்லை.
அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடாத்திய வான் தாக்குதலின்போது,1,400 பேர் உயிரிழந்தனர்; 240க்கும் அதிகமானோரைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.
அதன் பிறகு இஸ்ரேல், காஸாமீது ஆகாயவழித் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. இதனால் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை, உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ஷஹீதாகிவிட்டதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் இதுவரை நால்வரை விடுதலை செய்துள்ளது. எழுபது பேர்களைக் காணவில்லை என்றும், அவர்கள் இஸ்ரேலின் தாக்குதலின்போது, மாண்டிருக்கலாம் அல்லது கட்டிடச் சிதைவுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று ஹமாஸ் குறிப்பிடுகின்றது.
இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதல்கள் மூலம் நூற்றுக்கணக்கான தொடர்மாடிக் கட்டடங்களும், 30,000த்துக்கும் மேற்பட்ட வீடுகளும், ஆலயங்கள், பள்ளிவாயில்கள், ஆசுபத்திரிகள் என்பனவும் தரைமட்டமாயின. இவற்றின் சிதைவுகலுக்குள் பிணைக்கைதிகள் சிலரும் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
லண்டன், பெர்லின், பாரிஸ், இஸ்தான்புல், வாஷிங்டன் உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் சியோனிஸக் கொள்கைக்கு அப்பாற்பட்ட யூதமக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, உடனடி தற்காலிகப் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோ பைடனின் அமெரிக்க அரசாங்கம் எவ்வளவு காலம் அதற்கு செவி சாய்க்காமல் இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதற்கிடையே ஹமாஸுடன் நேருக்கு நேர் மோதத் திராணியற்ற கோழைத்தனமான இஸ்ரேல், காஸாவுக்கு பாரிய அணுகுண்டு ஒன்றைப் போடப்போவதாக மிரட்டி வருவதோடு, ஹமாஸ் தலைவர்கள் ஆறுபேர்களைக் கொல்லாமல் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிடுகின்றது.
இன்று இவ்வளவு கடினமான பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையின் அடித்தளம் அறுபத்தேழு வார்த்தைகள் கொண்ட ஒரு கடிதத்திலிருந்து உருவானதுதான்.
இந்த ஆவணம் பால்ஃபோர் பிரகடனம் என்று வரலாற்றில் பெசப்படுகின்றது. பாலஸ்தீனத்தில் 'இஸ்ரேல்' நாடு உருவாவதற்கும், மத்திய கிழக்கின் வரலாற்றை மாற்றியமைப்பதற்கும் இதுவே சதி செய்தது எனலாம்! யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தில் தாயகம் அமைப்பதை பிரிட்டன் ஒப்புக்கொண்ட நாள் 1917ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதியாகும்.
பாலஸ்தீனப் பகுதியை பிரித்தானியா, ஒட்டோமன் பேரரசிடமிருந்து கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் சியோனிஸத்தை விரும்பும் யூதர்கள், பால்ஃபோர் பிரகடனத்தை இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான அடித்தளமாகவே பார்த்தனர்.
ஆனால், இந்தப் பிரகடனம் தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அப்போதைய அரபுலகம் கருதியது.
ஓட்டோமன் பேரரசுக்கெதிராக பிரித்தானியர் சண்டையிட்டபோது, பேரரசை விரட்டியடிக்க பிரித்தானியருக்கு ஆதரவளித்தமையே, அராபியர் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும். ஓட்டோமன் பேரரசின் ஓட்டம், நாடோடிகளாயிருந்த யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குள் நுழையச் செய்தது.
அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பால்ஃபோர், குறிப்பிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை தக்க பாதுகாப்புடன், லண்டனிலுள்ள லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட்டின் வீட்டு முகவரிக்கு அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புள்ள ரோத்ஸ்சைல்ட்,
யூத மக்களின் விருப்பங்களுக்கு ஆதரவான இந்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மாட்சிமை பொருந்திய அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
"யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் தாயகம் அமைக்கப்படுவதற்கு பிரிட்டனின் மாட்சிமை பொருந்திய அரசாங்கம் ஆதரவாக உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்துகொடுக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் 'பாலத்தீனத்தில் வாழும் யூதர் அல்லாத மக்களின் மத மற்றும் சமூக உரிமைகள் அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் யூத மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் நிலை எதையும் மோசமாகப் பாதிக்கக் கூடாது' என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்."
இந்த அறிக்கை பற்றிய தகவல்களை நீங்கள் சயனிச (யூதவாதம்) (Zionist) கூட்டமைப்புக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தக் கடிதம்தான் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோரின் பெயரிடப்பட்டு, ஒரு பிரகடனமாக அங்கீகரிக்கப் பட்டது! இப்பிரகடனத்திற்குப் பிறகு, சுமார் ஒரு லட்சம் யூதர்கள் பாலஸ்தீனத்தை வந்தடைந்தனர்.
பால்ஃபோர் என்பவர், அப்போதைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜ் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராவார். ஸ்காட்லாந்துவாசியான இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவுடன், பழைமைவாதக் கட்சியின் பிரதிநிதியாக, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
பிரித்தானிய அரசாங்கம் யூதர்களையும், சியோனிசத்தையும் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்ற வாதத்திலிருந்த இவர், தனது அரசியல் ஆதாயத்திற்காக யூதர்களின் திட்டத்தை ஆதரிப்பதில் ஆர்வம் காட்டினார்.
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர்.
தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அப்போதிருந்த பிரித்தானியாவின் செல்வாக்குமிக்க யூதத்தலைவர்களான சாய்ம் வெய்ஸ்மேன், லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட் போன்றோர்களின் ஆதரவைப் பெருவதில் கவனம் செலுத்தினார்.
ரோத்ஸ்சைல்ட் என்பவர், பிரித்தானியாவில் அதிகாரமிக்க வங்கிசார் வணிக குடும்பத்தவராகவும், பிரித்தானியாவில் வாழ்ந்த யூத சமூகத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமாகவும் இருந்தார்.
அதே குடும்பத்தைச் சேர்ந்த எட்மண்ட் ரோத்ஸ்சைல்ட் என்பவர், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாலத்தீனத்தில் ஏராளமான நிலங்களை வாங்கி, அங்கு யூதர்களின் குடியேற்றங்களை நிறுவப் பெருந்தொகையை முதலீடு செய்தார்.
லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட்
இந்தக் குடும்பமே இஸ்ரேலிய தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
'பிரித்தானிய யூதர்கள் பிரதிநிதிகள் வாரியம்' என்பது அந்நாட்டு யூதர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இதன் தலைவராக ஸ்டூவர்ட் சாமுவேல் என்பவர் இருந்தார்.
அக்காலத்தில் இவ்வாரியத்தில் சியோனிசம் தொடர்பாக எதிர் கருத்துகளும் இருந்தன. சியோனிசத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்துத் தெரிவித்தனர். இந்த விடயத்தில், வால்டர் ரோத்ஸ்சைல்டின் நிலை நடுநிலையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோருடன் ரோத்ஸ்சைல்ட் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததால், இக்கடிதத்தை அவர், ரோத்ஸ்சைல்டுக்கே அனுப்பினார்.
1925ல், ரோத்ஸ்சைல்ட் 'பிரித்தானிய யூதர்களின் பிரதிநிதிகள் வாரியத்தின்' தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பினால் அமெரிக்காவில் வாழும் யூதர்களை உலகப் போரின்போது நேச நாடுகளின் பக்கம் நிற்கச் செய்ய முடியும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்பியது.
கடிதத்தின் பின்னாலிருந்த உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், 1948ல் இஸ்ரேலின் உருவாக்கம், நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம்.
யூதர்கள் கொண்டிருந்த தேசத்தின் மீதான கனவுக்கு இந்தப் பிரகடனம் நம்பிக்கை வழங்கியபோதிலும், இது பாலத்தீனியர்களுக்கு பிரச்சினையாக மாறியது என்பதுதான் நிதர்சனம்.
ஜெருசலத்தில் யூத மக்களுக்கு எதிராக 1937ல் பாலத்தீனியர்கள் நடாத்திய போராட்டம்,
முதல் உலகப்போரில் ஓட்டோமன் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, பால்ஃபோர் பிரகடனம் நேச நாடுகளின் ஆதரவைப் பெற்றது. மேலும் அது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடி அமைப்பான 'லீக் ஆஃப் நேஷன்ஸா'ல் அங்கீகரிக்கப்பட்டது. உள்ளூர் அரேபிய மக்கள் 1930களில், இப்பகுதியில் அதிகரித்து வரும் யூத மக்கள் தொகை குறித்து அதிருப்தியை வெளிப் படுத்தத் தொடங்கினர். இரு சமூகத்தினருக்கு மிடையே தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்தன.
ஜெருசலத்தில் யூத மக்களுக்கு எதிராக 1937ல் பாலத்தீனியர்கள் நடாத்திய போராட்டம்,
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத அரசை அமைப்பதற்கான கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனியில் நடந்தவைகள், இந்தக் கோரிக்கைக்கு வலுவூட்டின.
பாலஸ்தீனத்திற்கான பிரித்தானிய ஆணை, 1948ம் ஆண்டு மே 14ம் தேதி நள்ளிரவில், முடிவுக்கு வந்தது. பிரித்தானியா பாலஸ்தீனப் பகுதியிலிருந்து வெளியேறிய அதே நாளில் 'இஸ்ரேல்' தனது சுதந்திரத்தை அறிவித்தது.
அந்த இஸ்ரேலைத்தான் இல்லாமலாக்கப் போவதாக, இப்போது பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் வரிந்து கட்டிக்கொண்டு சூழுரைத்தபடி, களமிறங்கிக் கருமமாற்றிக் கொண்டிருக்கின்றது.
செம்மைதுளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments