Ticker

6/recent/ticker-posts

இறந்தவர்களுடன் பேச வைக்கும் தொழில்நுட்பம்! ஒருமுறை பேச கட்டணம் $10 மட்டுமே!


மரணம் என்பதை யாரும் தவிர்க்கவே முடியாத ஒன்று என்றாலும், நேசிப்பவரின் இழப்பு என்பது வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய மிகக் கொடூரமான உண்மை என்பது வருத்தத்திற்குரிய நிதர்சனம். அந்த இழப்பின் துக்கத்தை சமாளிப்பதில் மக்கள் வேறுபடுகிறார்கள். சிலருக்கு ஒருசில நாட்கள் என்றால் சிலருக்கு பல வருடங்கள் ஆகின்றன.

யதார்த்தத்துடன் வாழ்க்கையை அடுத்து எப்படி கொண்டு செல்வது என்பது கடினமாக இருக்கும் நிலையில், இயல்பான வாழ்க்கைக்கு வருவதற்கான வழிகளைத் தேட வேண்டியுள்ளது. நெருங்கியவர்களை இழந்தவர்கள், அன்புக்குரியவர்கள் இல்லாததை உணர்வது இயல்பு என்றாலும், அந்த விஷயத்திலும் AI தொழில்நுட்பத்தால், இல்லாதவர்களின் இடத்தை இட்டு நிரப்ப முடிகிறது.

தொழில்நுட்பத்தின் புதிய யுகத்தில், மரணம் என்ற துக்கத்தையும் சுலபமாக கடந்துவிடலாம் என்று காட்டும் ஒரு நிதர்சனம் சர்வதேச அளவில் பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஸ்கை நியூஸ் (SkyNews) ஒரு நடிகை தனது தாயை இழந்தபோது எப்படி தொழில்நுட்பத்தின் துணையால் அதை எதிர்கொண்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவைச் சேர்ந்த நடிகை Sirine Malas, எதிர்பாராத விதமாக தனது தாயை இழந்தபோது, இந்தத் துயரத்தைச் சமாளிக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார். ப்ராஜெக்ட் டிசம்பர் எனப்படும் AI-அடிப்படையிலான போட் அமைப்பின் மூலம் அவருக்கு தனது தாயை இழந்த பிரிவு துயரம் நிவர்த்தியாகியிருக்கிறது.

"இறந்தவர்களை உருவகப்படுத்தும்" தொழில்நுட்பம் என்ன செய்தது தெரியுமா? 

AI கருவியை பயன்படுத்திய சிரின் மலாஸ் என்ற பெண், தாயின் பிரிவுத் துயரில் இருந்து ஆறுதல் அடைந்தாலும், சில சமயங்களில் அது "பயமுறுத்துவதாகவும்" இருந்தது.

AI கருவியைப் பயன்படுத்தி இறந்த தனது தாயுடன் பேசிய நடிகைக்கு இறுதியில் திகைப்பு தான் ஏற்பட்டது. சிரின் மலாஸ் 2015 இல் தனது சொந்த நாடான சிரியாவை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். தனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, தன்னுடைய தாயை சந்திக்க விரும்பினார். ஆனால் தாயை சந்திப்பதற்கு முன்னரே 82 வயதான தாய், சிறுநீரக செயலிழப்பால் எதிர்பாராத விதமாக மரணமடைந்துவிட்டார்.

தாயார் நஜா 2018 இல் இறந்தபோது, அந்த துக்கம் தாங்க முடியாததாக இருந்தது என்று சொல்லும் மலாஸ்அந்த துக்கத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறுகிறார். 

தாய் இல்லை என்ற நினைப்பு என்னைக் கொல்லத் தொடங்கியது. அவருடன் பேச வேண்டும் என்ற ஏக்கமும், ஆசையும் என்னை வேதனைப்படுத்தியது என்று சொல்கிறார் மலாஸ். நான்கு ஆண்டுகளாக தனது தாயின் இழப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிய மலாஸ், டிசம்பர் திட்டம் என்பதைப் பற்றி கேள்விப்பட்டார். அந்தத் திட்டத்தில், தன்னுடைய விவரங்கள் மற்றும் தாயின் விவரங்களையும் (வயது, தாயுடனான உறவு போன்றவை) ஆன்லைன் படிவத்தில் நிரப்ப வேண்டும்.

தனது தாயுடனான உரையாட விரும்பிய மலாஸின் அனைத்து பதில்களும் விரைவில் OpenAI இன் GPT2 பதிப்பால் இயக்கப்படும் AI சாட்போட்டுக்கு சென்றது.  (ChatGPTக்குப் பின்னால் உள்ள மொழி மாதிரியின் ஆரம்ப பதிப்பு). AI கருவி மலாஸின் தாயின் சுயவிவரத்தை உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கியது.

இது போன்ற மாதிரிகள் பொதுவாக ஒரு சொல் முன்கணிப்பு கருவியைப் போலவே கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க இணையம் முழுவதிலுமிருந்து பரந்த அளவிலான புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன.

$10 செலவில், பயனர்கள் சுமார் ஒரு மணிநேரம் chatbotக்கு செய்தி அனுப்பலாம். இதில் மலாஸ் தனது தாயுடன் உரையாடும் வாய்ப்புகள் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டன.  

தாயுடன் பேசுவதைப் போலவே உணர்ந்த தருணங்களும் இருந்தன என்றும், வேறு யாரோ பதிலளித்தது போன்ற தருணங்களும் இருந்ததாகவும் இருந்ததாக அவர் கூறுகிறார். அதேபோல, சில சமயங்களில் சாட்போட்டில் உரையாடும்போது மிகவும் பயமாக இருந்ததாகவும் கூறுகிறார். தனது தாய் தன்னை கூப்பிடும் செல்லப் பெயரிலேயே தன்னை சாட்போட் உரையாடல்களில் குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்ததாக சிரின் கூறுகிறார்.

நன்றாக சாப்பிடுகிறாயா என்று கேட்கும் உருவகத் தாய், நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொன்னதாம். மரணத்தை வெல்ல முடியாது என்றாலும், மரணித்தவர்களின் தகவல்களை வைத்து அவர்களுடன் உரையாடும் வாய்ப்பையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும், இந்த சேவைகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

zeenews


 



Post a Comment

0 Comments