Ticker

6/recent/ticker-posts

அம்மா அடித்ததால் வீட்டை விட்டுச் சென்ற அக்கா-தம்பி 13 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பியது எப்படி?


பெற்றோர் அடித்து துன்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி, வழிதவறிய சகோதர சகோதரிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வர 13 வருடங்கள் ஆகிவிட்டன. இவையெல்லாம் கேட்டால் திரைப்படங்களில் வருவதுபோல் இருந்தாலும், இது உண்மைச் சம்பவம்.

அது ஜூன் 2010-ஆம் ஆண்டின் கடும் வெப்பமான கோடைக்காலம். பெற்றோரிடம் இருந்து அடி வாங்கிச் வாங்கி சலித்துப் போன 11 வயதான ராக்கியும் அவளது 7 வயது தம்பி பப்லுவும் வீட்டை விட்டு வெளியேறினர். பாட்டி வீட்டிற்கு சென்று தங்கலாம் என்று நினைத்த அவர்களை விதி வேறு பாதையில் அழைத்துச் செல்லவிருந்தது.

பாட்டி வீடு இவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. அனால், இந்தச் சிறுவர்களுக்கு அது விளங்கவில்லை. பாட்டி வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக, எங்கேயோ வழிதவறிய இவர்கள், 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.

அக்காவும் தம்பியும் எப்படி தொலைந்து போனார்கள், அவர்கள் எப்படிப் பிரிந்தார்கள், எவ்வாறு மீண்டும் சந்தித்தார்கள், கடைசியில் எப்படி தங்கள் தாயிடம் வந்து சேர்ந்தார்கள் என்பது தான் இந்த கதை.

பப்லு ஆதரவற்றவர்களுக்கான இல்லம் ஒன்றில் வளர்ந்தார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, ​​அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பிபிசியுடன் தொலைபேசியில் பேசிய அவர், 'நான் எனது அம்மாவை பற்றி நினைக்காத நாளே இல்லை, இப்போது வீட்டில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார்.

டிசம்பர் இறுதியில் நடந்த இந்த சந்திப்பு வீடியோவிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பப்லுவை வீட்டிற்கு வரவேற்கும் போது அவரது தாயார் கண் கலங்கி நின்றார். பப்லுவை இறுக்கி அணைத்துக்கொண்டு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு விதி, அந்தக் குடும்பத்திற்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. பப்லுவின் சகோதரி ராக்கியும் வீடு திரும்பினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ராக்கி பப்லுவைச் சந்தித்தபோது, ​​உடன்பிறந்தவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர். இவர்கள் 10 ஆண்டுகாலத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு சந்தித்தனர்.

என்ன நடந்தது?

2010-ஆம் ஆண்டு. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில், நீது குமாரி மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு பப்லு மற்றும் ராக்கி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர்.

அவ்வான்டு ஜூன் 16-ஆம் தேதி நீது குமாரி வீட்டிற்கு வந்தார். அன்று வேலை தேட முயன்றும் வேலை கிடைக்காததால் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இதனால் விரக்தியடைந்த நீது குமாரி, அந்தக் கோபத்தை தனது மகள் மீது காட்டினார். ராக்கியை சமையலறையில் இருந்த இடுக்கியால் அடித்தார்.

இதனால் கோபமடைந்த ராக்கியும் பப்லுவும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பாட்டி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

"நான் நன்றாகப் படிக்காததால் என் தந்தை என்னை அடித்தார். அதனால் ராக்கி என்னிடம் வந்து, பாட்டியுடன் வாழலாம் என்று கூறியவுடன் நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன்," என்று பப்லு கூறினார்.

அக்காவும் தம்பியும் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தொலைந்து போனார்கள். ஒரு ரிக்ஷா டிரைவர் அவர்களை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.

தற்செயலாக, இவர்கள் ஏறிய அதே ரயிலில் ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணும் பயணம் செய்தார்.

ரயில் அவர்கள் வீட்டிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள மீரட் நகரை அடைந்ததும், அந்தப் பெண் குழந்தைகளை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். காவல் துறை இவர்களை அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது.

"நாங்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம் என்று அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தோம், எங்கள் பெற்றோரைப் பற்றி அவர்களிடம் சொல்ல முயற்சித்தோம், ஆனால் காவல்துறையோ அல்லது ஆதரவற்றவர்களுக்கான இல்ல அதிகாரிகளோ எங்கள் பேச்சைக் கேட்கவில்லை மற்றும் எங்கள் குடும்பத்தைத் தேடவும் இல்லை," என்று பப்லு கூறுகிறார்.

சில காலம் அக்காவும் தம்பியும் ஒரே ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் தங்கியிருந்தனர், ஆனால் பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

டெல்லி அருகே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்கள் காப்பகத்திற்கு ராக்கி அனுப்பப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள மற்றொரு அரசு ஆதரவற்றவர்களுக்கான இல்லத்திற்கு பப்லு மாற்றப்பட்டார்.

மீண்டும் சந்தித்த அக்காவும் தம்பியும்

எந்தவொரு முக்கிய அதிகாரியோ, ஆர்வலர்களோ அல்லது பத்திரிகையாளரோ ஆதரவற்றவர்களுக்கான இல்லத்திற்கு வரும்போதெல்லாம், ராக்கியைப் பற்றி பப்லு அவர்களிடம் கூறுவார். ராக்கி தன்னை மீண்டும் சந்திப்பார் என்று நம்பினார்.

ஆனால் 2017-ஆம் ஆண்டில் தான் அவருக்கு விடியல் கிடைத்தது. ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் இருந்த பெண் பப்லுவிற்கு உதவ முன்வந்தார். டெல்லிக்கு அருகில் உள்ள பெண்களுக்கான ஆதரவற்றோர் இல்லத்திற்கு ராக்கியை அனுப்பியதாக பப்லு அவரிடம் கூறினார்.

"நான் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் (டெல்லியின் புறநகர்ப் பகுதி) உள்ள ஒவ்வொரு ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தையும் தொடர்புகொண்டேன். ராக்கி என்ற பெயரில் யாரவது இருக்கிறார்களா என்று கேட்டேன், கடைசியாக கடுமையான முயற்சிக்குப் பிறகு ராக்கியைக் கண்டுபிடித்தேன்," என்று பப்லு கூறுகிறார்.

மேலும், "உடன்பிறந்தவர்களை பிரிப்பது மிகவும் கொடுமையானது என்பதை நான் அரசாங்கத்திற்குச் சொல்ல விரும்புகிறேன். சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் அடுத்த மையங்களில் வைக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

பப்லு ராக்கியைக் கண்டுபிடித்த பிறகு, அவர்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். அவர்களின் உரையாடலில் அவர்களின் வீட்டை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், ராக்கி தன்னால் வீட்டிற்கு திரும்ப முடியாது என்று உணர்ந்தார்.

"ராக்கி எப்போதும், பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன, நம் அம்மாவை நாம் கண்டுபிடிக்க முடியாது என்று நினைப்பதாக கூறுவாள்," என்று பப்லு கூறினார்.

ஆனால், பப்லுவின் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எப்போதும் ராக்கியிடம், "உன்னை கண்டுபிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, ஒருநாள் நமது அம்மாவையும் நாம் கண்டுபிடிப்போம் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.

தான் வசித்த இடத்தில், பராமரிப்பாளரும் வயதில் பெரியவர்களும் அடிக்கடி அடிப்பார்கள் என்று பப்லு கூறுகிறார். அவர் இரண்டு முறை தப்பி ஓட முயன்றார், ஆனால் பயந்து திரும்பி இங்கேயே வந்துவிட்டார்.

மறுபுறம், தான் வளர்ந்த ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் தன்னை நன்றாக கவனித்துக்கொண்டதாக ராக்கி கூறுகிறார்.

அவர் வீட்டில் இருந்தால் அவரது வாழ்க்கை வேறுவிதமாக இருக்குமா என்று கேட்டக்கப்பட்ட கேள்விக்கு அவர், "நடக்கும் எல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். வீட்டை விட்டு வெளியே இருப்பது என் வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவியிருக்கலாம்," என்று ராக்கி கூறுகிறார்.

மேலும் அவர் பேசுகையில், "நான் அவர்களுக்கு யாரென்றே தெரியாதபோதிலும் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். யாரும் என்னை அடிக்கவில்லை, நான் எப்போதும் நன்றாக நடத்தப்பட்டேன். நான் ஒரு நல்ல பள்ளியில் படித்தேன், எனக்கு நல்ல ஆரோக்கியமும் கிடைத்தது," என்றார்.

குழந்தை உரிமை ஆர்வலர்கள் இந்தக் குடும்பத்தை மீண்டும் இணைத்தனர்.

டிசம்பர் 20 அன்று ஆக்ராவைச் சேர்ந்த குழந்தை உரிமை ஆர்வலர் நரேஷ் பராஸுக்கு பப்லுவிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. பப்லு அவர்களிடம், "நீங்கள் பல குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளீர்கள் என்று கேள்விப்பட்டேன். என் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவுவீர்களா?" என்று கேட்டார்.

2007 முதல் குழந்தைகளுடன் பணிபுரியும் பராஸ், இது எளிதான செயல் அல்ல என்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கும் தங்களது தந்தையின் பெயர் நினைவில் இல்லை, அரசு வழங்கிய ஆதார் அட்டையில் அவர்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் எந்த மாநிலம் அல்லது எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

அவர் வசித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பதிவுகளின்படி, அவர் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் நகரில் வசிப்பவர். எனவே பராஸ் பிலாஸ்பூரில் உள்ள ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள் மற்றும் காவல்துறையைத் தொடர்பு கொண்டார். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

டம்மி ரயில் என்ஜின் குறியீடுகள்

பப்லுவிடமிருந்து பராஸுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. சிறுவயதில் ஊரைவிட்டு செல்ல பப்லு ரயிலில் ஏறியதும், ஸ்டேஷனுக்கு வெளியே டம்மி ரயில் என்ஜினைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அது ஆக்ரா கண்டோன்மென்ட் நிலையமாக இருக்க வேண்டும் என்று பராஸ் நினைத்தார்.

அங்குள்ள நகர காவல்துறையின் பதிவேடுகளை ஆராய்ந்த பிறகு ஜகதீஷ்புரா காவல் நிலையத்திற்கு வந்தார். ஜூன் 2010-ஆம் ஆண்டில் அதே காவல் நிலையத்தில் தனது குழந்தைகளைக் காணவில்லை என்று சந்தோஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

ஆனால் பராஸ் அந்தக் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முயலும்போது, ​​அந்தக் குடும்பம் ஒரே இடத்தில் வசிக்கவில்லை என்பது அவருக்கு தெரியவந்தது.

இதற்கிடையில், ராக்கி தனது தாயின் பெயரை நினைவில் வைத்துக்கொண்டு, தனது தாயின் கழுத்தில் தீக்காயம் இருப்பதாக பராஸிடம் கூறினார். ஆக்ராவில், தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் காலையில் ஒரு இடத்தில் கூடுவார்கள்.

அங்கு சென்று பராஸ் இவர்களின் தாய் நீதுவைத் தேட முயன்றார், ஆனால் நீதுவை அங்கு காணவில்லை. ஆனால் அங்கிருந்த தொழிலாளர்கள் சிலர், நீதுவை தங்களுக்குத் தெரியும் என்றும், அதைப் பற்றி அவளிடம் தெரிவிப்போம் என்றும் கூறினர்.

குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த நீது குமாரி, தடக் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் பராஸைத் தொடர்பு கொண்டார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பு

பராஸ் நீது குமாரியை சந்தித்து குழந்தைகளின் புகைப்படங்களையும் போலீஸ் புகாரின் நகலையும் காட்டினார். பின்னர் நீது குமாரி, பப்லு மற்றும் ராக்கியுடன் வீடியோ அழைப்பில் பேச வைக்கப்பட்டார்.

நீது குமாரி பராஸிடம், "ராக்கியை அடித்ததற்காக நான் இன்னும் வருந்துகிறேன். என் குழந்தைகளைக் கண்டுபிடிக்க நான் கடுமையாக முயற்சித்தேன்," என்றார்.

இதுகுறித்து நீது குமாரி பேசுகையில், "எனது குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுப்பதாக கேள்விப்பட்டு கடன் வாங்கி பாட்னா சென்றேன். ஆனால், அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் பாதுகாப்புக்காக கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தேன்," என்றார்.

"இப்போது என் குழந்தைகள் என்னிடம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர், அதனுடன் எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது," என்று அவர் கூறினார்.
"நான் ஒரு திரைப்படம் பார்ப்பதை போல உணர்கிறேன்," என்றார் ராக்கி. "ஏனென்றால் என் அம்மாவை மீண்டும் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்கிறார்.

பப்லு, "எனது குடும்பத்தைக் கண்டுபிடிக்க பராஸ் ஒரு வாரம் தான் எடுத்தார் என்பது அசாதாரணமானது. நான் காவல்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன், ஆனால் அவர்கள் எனக்கு உதவவில்லை. இப்போது என் அம்மாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.

பப்லுவைப் பார்த்த அவரது தாய் அழுது கொண்டே அவன் அருகில் வந்து, "ஏன் என்னை விட்டுப் போனாய்?" என்றார். அதற்கு பப்லு, "அம்மா, நான் உன்னை விட்டு போகவில்லை, எங்கேயோ தொலைந்து போய்விட்டேன்," என்றார்.

bbctamil


 



Post a Comment

0 Comments