தென் கொரியாவின் 'முதல் மற்றும் ஆகப்பெரிய' பாலியல் திருவிழாவை நடத்தப் போவது பற்றி லீ ஹீ டே உற்சாகமாக இருந்தார்.
கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அந்த நிகழ்வுக்கு ஜப்பானிய ஆபாசப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருவதாக இருந்தது. அவர்களைக் காண 5,000 ரசிகர்கள் திரள்வார்கள் என்று அவர் கருதினார். 'பாண்டேஜ் (bondage) ஃபேஷன் ஷோ', சுய இன்பக் கருவிகளின் கண்காட்சி, மக்களின் உடல்களுக்கு இடையே பலூன்களை வெடிக்கச் செய்வது போன்ற வயது வந்தோருக்கான சில விளையாட்டுகள் ஆகியவை இந்த நிகழ்வில் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால் இந்த நிகழ்வு நடக்க 24 மணி நேரமே இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
பாலியல் மற்றும் வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு ஆகிய விஷயங்களில் தென் கொரியா இன்னும் பழமைவாத அணுகுமுறையையே கொண்டுள்ளது. பொது நிர்வாணம் மற்றும் நிர்வாண 'ஷோக்கள்' தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாசப் படங்களை விற்பதும் விநியோகிப்பதும் சட்டவிரோதமானது. ஆனால் அவற்றைப் பார்ப்பது குற்றமல்ல.
"எல்லா வளர்ந்த நாடுகளிலும் செக்ஸ் திருவிழா உள்ளது. ஆனால் தென் கொரியாவில் வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு கலாசாரம் இல்லை. அதை உருவாக்குவதற்கான முதல் அடியை நான் எடுக்க விரும்புகிறேன்," என்கிறார் லீ ஹீ டே.
ப்ளே ஜூக்கர் என்ற இவரது நிறுவனம் முதலில் மென்மையான ஆபாசப் படங்களைத் தயாரித்து வந்தது. அதன்பின் இதுபோன்ற பாலியல் நிகழ்வுகளை நடத்துவதில் ஈடுபடத் துவங்கியது.
அடுத்தடுத்து வந்த தடங்கல்கள்
ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த செக்ஸ் திருவிழா நடைபெறவிருந்த சுவோன் நகரத்திலிருந்த பெண்கள் உரிமைக் குழுக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தின. ஏற்கனவே பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கும் தென் கொரியாவில், இந்த நிகழ்வு பெண்களை மேலும் சுரண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இது பாலின சமத்துவம் உள்ள நிகழ்வு அல்ல என்று அவர்கள் வாதிட்டனர். இதற்கான விளம்பரங்களில் மிகக் கவர்ச்சிகரமான ஆடையணிந்த பல பெண்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதனால், இந்நிகழ்வுக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள் என்று அவர்கள் கூறினர்.
மேலும் இந்த நிகழ்வு ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகில் நடக்கவிருந்தது. இதற்கு உள்ளூர் மேயர் கண்டனம் தெரிவித்தார். இந்த நிகழ்வு நடந்தால், அந்த அரங்கத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அதனால் அந்த அரங்கத்தினர் தங்கள் இடத்தைத் தர மறுத்துவிட்டனர்..
விரக்தியடைந்தாலும் லீ ஹீ டே மனம் தளரவில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடத்தை மாற்றினார். ஆனால் மேலும் தடங்கல்கள் வந்தன. புதிய இடத்தின் அதிகாரிகள் இந்தத் திருவிழா `பாலியல் பற்றிய தவறான பார்வையை விதைப்பதாக` குற்றம் சாட்டினர். புதிய அரங்கத்தையும் இந்த நிகழ்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தலைநகர் சியோலில் ஒரு ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இந்த விழாவை நடத்த திரு லீ முடிவெடுத்தார். ஆனால், கப்பல் போக்கிவரத்துச் சபையின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அப்படகின் குத்தகைதாரர், இந்தத் திருவிழா நடந்தால், படகுக்குச் செல்லும் வழி தடை செய்யப்படும் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அந்தப் படகின் நிர்வாகத்தினரை மிரட்டினார்.
இவ்வாறு ஒவ்வொரு அடியிலும், லீ ஹீ டே திருவிழாவின் கொண்டாட்ட அளவைக் குறைக்க வேண்டியிருந்தது. டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பித் தரக் கோரினர். இதனால் லீ ஹீ டே-க்கு பல லட்சம் பவுண்டுகள் நஷ்டமாயின.
'நிர்வாணம் இல்லை, பாலியல் செயல்கள் இல்லை'
இனி வேறு வழியே இல்லை என்றானபோது லீ ஹீ டே, சியோலின் கவர்ச்சிகரமான பகுதியான கங்னம் சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய நிலத்தடி பார்-ஐக் கண்டுபிடித்தார். அதில் சுமார் 400 பேர் கூட முடியும். இந்த முறை அந்த இடத்தை ரகசியமாக வைத்திருந்தார்.
ஆனால், கங்னம் பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான உணவகங்களுக்கு ஓர் அறிக்கை அனுப்பியது. அவர்கள் திருவிழாவை நடத்தினால், அது 'தார்மீக ரீதியாக தீங்கு விளைவிக்கும்' என்றும், மீறி நடத்தினால், அந்த உணவகம் மூடப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் லீ ஹீ டே தேர்ந்தெடுத்திருந்த பார், அந்நிகழ்ச்சியை நடத்துவதில் உறுதியாக இருந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள், அங்கு வரவிருந்த ஜப்பானிய ஆபாச நட்சத்திரங்கள் தாம் வரப்போவதில்லை என்று அறிவித்தனர். இந்த நிகழ்வுக்கு வந்த எதிர்ப்பு மிகவும் தீவிரமடைந்ததால் பெண் ஆபாச நட்சத்திரங்கள் தாங்கள் தாக்கப்படலாம், கத்தியால் கூட குத்தப்படலாம் என்றும் அஞ்சுவதாக அவர்களது நிறுவனம் கூறியது.
கங்னம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து, லீ ஹீ டே பிபிசியிடம் பேசினார்.
"இந்த நிகழ்வுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை, அதிர்ச்சியளிப்பவை," என்றார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறினார். "நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. இருந்தும் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன்", என்று அவர் கூறினார். இந்தத், திருவிழா சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாணம் அல்லது பாலியல் செயல்கள் எதுவும் செய்யப்படாது என்றார். சென்ற ஆண்டும் கடந்த அவர் இதேபோன்ற நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால் அது இவ்வளவு பிரபலமடையவில்லை.
'தென் கொரிய மக்களின் இரட்டை வேடம்'
லீ ஹீ டே-யின் 'ப்ளே ஜோக்கர்' நிறுவனம் கடந்த காலங்களில் கவனத்தை ஈர்க்கும் விதமான பல 'ஸ்டண்ட்'களை அரங்கேற்றியுள்ளது.
கடந்த ஆண்டு சியோலின் தெருக்களில் ஒரு அட்டைப் பெட்டியைத் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பெண்ணை நடக்கவிட்டது இந்நிறுவனம். அந்த அட்டைப்பெட்டிக்குள் கையை விட்டு, அந்தப் பெண்ணின் மார்பைத் தொடும்படி வழிப்போக்கர்களுக்கு அழைப்பு விடுத்தது.
இன்னும் கடந்த காலத்திலேயே சிக்கித் தவிக்கும் தென் கொரியாவின் பாலியல் சார்ந்த பார்வைகளையும் ஆபாசப் படங்கள் மீதான அணுகுமுறையையும் கேள்வி கேட்பதே தனது நோக்கம் என்று லீ ஹீ டே கூறுகிறார்.
"அதிகாரிகள் வெளிவேஷம் போடுகிறார்கள். ஆன்லைனில் எல்லோரும் ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதிலிருந்து 'லாக் அவுட்' (log out) செய்த பின்னர், அப்பாவிகள் போல பாசாங்கு செய்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இப்படிப் பாசாங்கு செய்யப் போகிறோம்?" என்கிறார் லீ ஹீ டே.
தென் கொரியாவில் பிரபலமான சர்வதேச ஆபாச இணையதளங்கள் தடை செயப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இந்தத் தடையை மீற பெரும்பாலானவர்கள் VPN-களை பயன்படுத்துகின்றனர்.
பாலியல் விழா பற்றி பெண்கள் சொல்வது என்ன?
இந்த நிகழ்வை முதலில் எதிர்த்த 'சுவோன் மகளிர் ஹாட்லைன்' என்ற பெண்கள் குழு இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது 'வெற்றி' என்று குறிப்பிட்டது.
"அமைப்பாளர்கள் என்ன சொன்னாலும், இது பாலியலைக் கொண்டாடும் நிகழ்வு அல்ல, பெண்களைச் சுரண்டி, அவர்களை போகப்பொருளாக்கும் நிகழ்வு. மேலும் இது பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கிறது," என்று இந்த அமைப்பின் இயக்குநர் கோ-யுன்-சீ கூறினார்
இவ்வமைப்பு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.
கோ-யுன்-சீ மற்றும் கொரியாவில் உள்ள மற்ற பெண்கள் உரிமை அமைப்புகள், அந்த நாட்டில் பாலியல் வன்முறை ஒரு தீவிரமான பிரச்னை என்று சொல்கின்றனர். அப்பிரச்னை மீது அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். "இது கொரியாவின் கலாசாரத்தில் ஊடுருவி இருக்கிறது," என்று அவர் கூறினார். இப்படியான ஒரு திருவிழா இல்லாமலேயே ஆண்கள் தங்கள் பாலுணர்வை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும் என்கிறார் அவர்.
சியோலில் இருக்கும் செஜோங்க் பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் கலாசாரம் பற்றி விரிவுரை ஆற்றும் பே ஜியாங்க்-வியோன், இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் ஆண் பார்வையாளர்களை மையப்படுத்தியே அமைந்தவை, அதுதான் அவற்றின் சிக்கல் என்றார்.
"இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஏராளம். அதனால் பெண்கள் பாலியல் சுரண்டல் பிரச்னைகளில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் பாலின அமைச்சகத்தின் 2022 கணக்கெடுப்பின்படி, மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாகக் கூறியிருந்தனர்.
"தென் கொரியாவில் பாலியலைப் பற்றி எதிர்மறையாக, வன்முறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையில் பேசும் வழக்கம்தான் கொரியாவில் உள்ளது. அதைப்பற்றி நேர்மறையான, ரசிக்கத்தக்கச் செயலாகப் பேசப்படுவது இல்லை," என்று திருமதி பே மேலும் கூறினார்.
இளைஞர்கள் என்ன சொல்கின்றனர்?
இந்தத் திருவிழா நடைபெறவிருந்த கங்னம் பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலான இளைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே பாலின ரீதியான பிளவு ஏற்பட்டது.
ஆண் தகவல் தொழில்நுட்ப ஊழியரான மூன் ஜாங்-வான், "இது ஆபாசமானது அல்ல, அவர்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை, எனவே இது தடுக்கப்பட்டிருக்கக் கூடாது," என்றார்.
ஆனால் 35 வயதான பெண்மணி லீ ஜி-யோங் இந்தத் திருவிழாவைத் தடை செய்த அதிகாரிகளை ஆதரித்தார். "பாலுறவை வணிகமயமாக்கப் பார்த்ததால் அந்த விழா அருவறுப்பானது," என்று கூறினார்.
ஆனால், பெரும்பாலானோர், இந்த நிகழ்வைத் தடை செய்ததன் மூலம் அதிகாரிகள் எல்லை மீறிவிட்டதாக ஒப்புக்கொண்டனர்.
34 வயதான யூ ஜூ, "இந்தத் தடை, பழமைவாத அரசியல்வாதிகளின் முடிவு. இதன்மூலம் அவர்கள் பழைய வாக்காளர்களை ஈர்க்க விரும்புகின்றனர்," என்றார். "செக்ஸ் மறைக்கப்பட வேண்டும் என்று அந்தத் தலைமுறை இன்னும் நம்புகிறது," என்று அவர் கூறினார்.
பாலியல் மீதான இளைஞர்களின் அணுகுமுறை மாறி வருகிறது என்றும், தானும் தனது தோழிகளும் பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவதாகவும் அவர் கூறினார்.
'பாலியல் திருவிழா மீண்டும் நடத்தப்படும்'
தென் கொரியாவில் அரசியல் இன்னும் பெரும்பாலும் பழமைவாத, பாரம்பரிய விழுமியங்களால் வழிநடத்தப்படுகிறது. பன்முகத் தன்மையை ஒடுக்கும் வகையில் அதிகப்படியான அதிகாரம் செலுத்தியதாக அதிகாரிகள் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.
சென்ற ஆண்டு, கிறிஸ்தவ மதக் குழுக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சியோல் நகர சபை அந்நகரின் பிரதானப் பகுதியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியை நிறுத்தியது. தென் கொரியாவில் அதிகப்படியான வெறுப்பை எதிர்கொள்ளும் பால் புதுமையினர் மற்றும் பெண்கள் சமூகத்தைப் பாதுகாக்கும் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை கொரிய அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை.
தற்போது இந்தப் பாலியல் திருவிழா மீதான சர்ச்சை, பாலியல் பன்முகத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் ஆகிய இரண்டு பிரச்னைகளையும் ஒன்றிணைத்துள்ளது. மக்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வது தடுக்கப்பட்டதாக அதன் அமைப்பாளர்கள் வாதிடுகின்றனர். பெண்களோ தங்கள் உரிமைகள் மீறப்படுவதாகச் சொல்கிறார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை கொரிய அதிகாரிகள் முடிவு செய்யவேண்டும். பிபிசி-யிடம் பேசிய 'ப்ளே ஜோக்கர்' நிறுவனம், வரும் ஜூன் மாதம் இந்தத் திருவிழாவை இன்னும் பெரிதாக நடத்த மீண்டும் முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்தது. லீ ஹீ டே, இப்போது தன் பக்கம் பல அரசியல்வாதிகள் இருப்பதாகக் கூறுகிறார். கடந்த வார இறுதியில், சியோலின் மேயர் தனது யூடியூப் சேனலில் `எதிர்காலத்தில் இந்தப் பிரச்னையில் ஈடுபடும் எண்ணம் இல்லை` என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
bbc
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments