Ticker

6/recent/ticker-posts

110 வயதிலும் திடமாக இருக்கும் முதியவர்... இத்தனை வயதிலும் ஆரோக்கியமாக இருக்க காரணம் இதுதான்!


அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட் கடந்த மாதம் தனது 110-வது பிறந்தநாளை கொண்டாடினார். உலகின் வயதான நபர்கள் என இவரையும் சேர்த்து இன்று உலகில் எட்டு பேர் மட்டுமே இருக்கின்றனர்.

உலகளவில் 100 வயதை கடந்து வாழ்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருந்தாலும், இந்தப் பட்டியலில் உள்ள சில ஆண்களில் வின்சென்ட்டும் ஒருவர். இத்தனை வயதான பிறகும் மூட்டு வலிகள் தவிர்த்து வேறு எந்தப் பிரச்னையும் இன்றி மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வருகிறார் வின்சென்ட்.

எந்த அரசாங்க உதவியோ அல்லது யாருடைய உதவியோ இன்றி சுயாதீனமாக வாழ்ந்து வரும் வின்சென்ட், தானே சமைத்துக்கொண்டு, தனது மூன்று மாடி வீட்டையும் பராமரித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தினமும் எந்தப் பிரச்னையும் இன்றி கார் ஓட்டவும் செய்கிறார். தனது ஆரோக்கியத்தை எளிமையாக அணுகுவதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிகிறார் வின்சென்ட். 20 வருடங்களாக புகைப்பழக்கம் இருந்தாலும், 70 வயது வரை கடுமையாக உழைத்திருந்தாலும் தன்னுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அவர் தவறியதேயில்லை. ஹம்பர்கர், பால் சாக்லேட், இத்தாலிய உணவுகள், எப்போதாவது பீர், தினமும் ஒரு கப் காஃபி. இதுதான் இவருடைய டயட்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நடைபயிற்சி செல்பவர்களை பார்த்து, எதற்கு இப்படி ஓடுகிறார்கள்? என வின்சென்ட் அடிக்கடி சிரிப்பதாக அவருடைய கொள்ளு பேத்தி லிஸ்டா கூறுகிறார். தந்தையாகவும், மூன்று பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் ஏழு பேரக்குழந்தைகளுக்கு கொள்ளு தாத்தாவாகவும் இருக்கும் வின்செண்ட், தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு அதிர்ஷ்டமும் பாலும், எனக்கு பிடித்த வேலையை செய்ததும் தான் காரணம் என்கிறார்.

தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, 15 வயதில் பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார் வின்சென்ட். அங்கு பணிபுரிந்த ஐந்து வருடங்கள் தான் தன்னுடைய வாழ்க்கைக்கு பலத்தையும் நம்பிக்கையும் கொடுத்ததாக கூறுகிறார்.

இன்று தினமும் தான் குடிக்கும் பசும் பாலில் சுவைக்காகவும் வைட்டமின் சத்துக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் ஓவல்டின் பவுடரை கலந்து குடிக்கிறார். உள்ளூர் தீயணைப்பு நிலையத்தில் சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக தன்னர்வலராக பணிபுரிந்தது தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம் எனக் கூறுகிறார் வின்சென்ட். இங்குதான் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் என தான் பார்த்த தீயணைப்பு வேலையை பெருமிதமாக கூறுகிறார்.

1992-ம் ஆண்டில் இவருடைய மனைவி இறந்த பிறகு, தீயணைப்பு நிலையமே இவரது வசிப்பிடமாகவும் குடும்பமாகவும் மாறிப்போனது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை தீயணைப்பு நிலையத்தில் இவரும் இவருடைய பழைய நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து தங்கள் சந்தோஷங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தனை வயதிலும் உடல் இயக்கத்தோடும் ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸோடும் இருப்பதற்கு தன்னார்வலராக பணிபுரிந்ததும் ஒரு காரணமாகும். நேர்மறையான மனநிலையும் அடுத்தவர்களிடம் அன்பு காட்டுவதுமே என்னை நூறு வருடங்களுக்கும் மேல் வாழ வைக்க உதவுகிறது என நம்புகிறார் வின்சென்ட்.

news18


 



Post a Comment

0 Comments