மானிறப்பூனைக் குட்டியொன்றை அணைத்துக் கொண்டு ரெங்க்மா- செரோக்கியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவளிடமிருந்து பூனைக் குட்டியை இலாவகமாகத் தூக்கியெடுத்து அதனோடு கொஞ்சிக் கொண்டே அதனை உற்று நோக்கினான் செரோக்கி!
இது “ஹந்துந்திவியா!” - பூனைக் குடும்பத்தில் சிறிய இனமாகும். ஈரவலய மற்றும் உலர்வலயக் வனங்களில் அதுவும் மிகவும் அரிதாகக் காணப்படும் இவ்வகையான பூனை இனத்தை காட்டுச்சூழலில், கிராமத்துச் சூழலில் இலகுவில் கண்டு கொள்ள முடியாது!
ரெங்க்மாவின் தந்தை வேட்டைக்குச் சென்றபோது வனத்திலிருந்து பிடித்து வந்திருக்கலாம்!
அவனருகே வந்த ரெங்க்மா, பூனையின் தலையைத் தடவிக் கொண்டே மழலை மொழியில் ஏதோ சொன்னாள். அது அவனுக்குப் புரியவில்லை! புரிந்ததுபோல் பாசாங்கு செய்து விட்டு, அதனைத் தன் மச்சினச்சியிடம் கொடுத்தான்!
ரெங்க்மா கையிலெடுத்ததும் அது அவளது கைகளிலிருந்து நழுவி, மெதுவாக வாசற்பக்கம் சென்றபோது, அங்கே ஒரு பழங்குடிச் சிறுவன் தன் கட்டை விரலொன்றை வாயிலிட்டுச் சூப்பியவாறு நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டு வாசல் நிலையில் சாய்ந்து நின்றிருப்பதைப் பார்த்தான் செரோக்கி! செரோக்கியின் ஒத்த வயதாகத் தெரிந்த அவனைக் கண்டதும் ரெங்க்மா மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு "மங்கு… மங்கு…” எனத் தனது மழலை மொழியால் கைகளை அசைத்தபடி, அவனை ஜாகைக்குள் அழைத்தாள்.
அதே நேரத்தில் ரெங்க்மா ”மங்கு” என்ற பெரைச் சொன்னதும், பின்புலமிருந்து ஓடிவந்த செரோக்கியின் அத்தை“மங்கினி... உள்ள வாடா...”என அழைத்தபோது, அந்தச் சிறுவன் வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
அவனது பெயர் மங்கு அல்ல… “மங்கினி” என்பதைத் புரிந்து கொண்ட செரோக்கி, ஆதரவுடன் அவனைக் கூப்பிட்டுத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
பழங்குடி இனத்திற்கே உரித்தான கருகருவென்ற நிறம் - கூர்மையான கண்கள் சுருட்டையான முடி- பளிச்சென்ற வெண்ணிறப் பற்கள்; இவற்றுக்கும் மேலாக அவன் பார்க்க வெகுளியாக இருந்தான்!
மங்கினி முன் வீட்டுப் பையன்! ரெங்க்மா பிறந்ததிலிருந்து அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து ரெங்க்மாவை ஸ்பரிஸ்துக் கொள்வான். அன்போடும் ஆதரவோடும் பார்த்துக் கொள்வான்! ரெங்க்மா தவழ்ந்து விளையாடுகின்ற போதும், அவளுடன் வந்து விளையாடிக் கொண்டிருப்பான்.
மங்குனி தன் குழந்தையோடு வந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரெங்க்மாவின் தாய் ஜாகைக்கு வெளியே உள்ள தனது வேலைகளை விறுவிறென முடித்துக் கொள்வாள்!
செரோக்கியைக் கண்டதும் அந்தக் குட்டிப் பையனை ரெங்க்மா விலக்கி ஒதுக்கி விடுவாளோ என்ற ஒரு பயம் சொரொய்யாவுக்குள் வந்துவிட்டது!
“செரோக்கி, இவன் பெயர் மங்குனி. எதிர் வீட்லதான் இருக்கான். ரெங்க்மா குட்டிப் பாப்பாவாக இருக்கின்ற காலத்திலிருந்தே இங்கு வந்து விளையாடிக் கொண்டிருப்பான். ரெங்க்மா இவனை மங்கு என்றுதான் அழைப்பாள். சரி, இப்ப நீங்க மூவரும் ஒத்துமையா வௌயாடிக் கொண்டிருங்க… நான் அப்புறமா வறேன்”என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்! வெளியில் சென்ற ஹந்துந்திவியா, ”மியாவ்” என்ற சத்தத்தோடு மீண்டும் உள்ளே வந்தது. அவர்கள் மூவரும் அதனோடு சிறிது நேரம் விளையாடினார்கள்.
மூங்கிற் சுவரில் மண்டையோடு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அப்படியானதொரு மண்டையோடு ஏன் தனது ஜாகையில் இல்லை என்பது அவனுக்குப் புரிய வில்லை! அதனால் அதனை செரோக்கி வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். வனத்துக்குச் செல்லும் வழியில் தனது தந்தையிடம் இதுபற்றிக் கேட்டுவிட வேண்டுமென்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்!
வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் சந்தேகங்களை செரோக்கி வனத்தை நோக்கிச் செல்லும் வழியில், தனது தந்தையிடம் கேட்டு அறிந்து கொள்வதை வழக்காகக் கொண்டிருந்தான். அந்தவகையில் செரோக்கி தனது அறிவை விருத்தி செய்து கொள்ளும் கல்விப் பாசறையாக “அமேசான் வனத்துப்பாதை” காணப்பட்டது!
சிறிசுகள் ஹந்துந்திவியாவைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த வேளை, திடீரென எழுந்து நின்றான் செரோக்கி! மறந்துபோய்விட்ட ஏதோ நினைவுக்கு வந்தவனாக...
“ரெங்க்குக்குட்டி நான் அப்புறமா வேறோர் நாள் வரேண்டா” என்று செல்லமாக அவளது கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு, அங்கிருந்து வேகமாக ஓடினான், தனது ஜாகையை நோக்கி!
அங்கு அவனது தந்தை வனத்திற்குப்போக ஆயத்தமாகி யவராக குகைக்கருகேயிருந்த கருங்கல்லின் மீது ஆயாசமாகச் சாய்ந்தபடி - செரோக்கியின் வருகைக்காகக் காத்திருந்தார்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments