பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ நெருங்கியுள்ளது. தொலைதூரப் பகுதி என்பதாலும், 26 அடி உயரத்துக்கு இடிபாடுகள் குவிந்திருப்பதாலும் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கிழக்கு இந்தோனேஷியாவை ஒட்டி அமைந்துள்ளது பப்புவா நியூ கினி தீவுகள். மலைகள், காடுகள், ஏராளமான ஆறுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 1 கோடியே 17 லட்சம் பேர் வசிக்கும் பப்புவா நியூ கினியில், 850 மொழிகள் பேசப்படுகின்றன. இதன்மூலம், அதிக மொழி பேசும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகஅளவில் உள்ளன. இந்நிலையில், எங்கா மாகாணத்தில் உள்ள யம்பாலி கிராமத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பொதுமக்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர்.
4 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு இடிபாடுகள் குவிந்திருந்தன. 150-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டன. மேலும், தொலைதூர கிராமம் என்பதால் மீட்புப்படையினர் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 670-ஆக உயர்ந்திருப்பதாக பப்புவா நியூ கினிக்கான ஐநா அமைப்பின் அதிகாரி செர்ஹான் அக்டோபிராக் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததைவிட, பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மண் சரிவு தொடர்வதால், மீட்புப் பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் செர்ஹான் அக்டோபிராக் தெரிவித்தார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்துவந்த நிலையில், ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். விளைநிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சடலங்களை மீட்பதற்காக குச்சிகள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு, இடிபாடுகளை தோண்டும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரும் பாறைகள், மரங்கள், மண் என 26 அடி உயரத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், வன்முறை அரங்கேறி வருகிறது. மேலும், சாலைகளிலும் இடிபாடுகள் கிடப்பதால், மீட்புப் பணியாளர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்புப் படையினர் செல்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பப்புவா நியூ கினி ராணுவம் அளித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments