பிகார் மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ராமேஷ்வர் சாவோவின் கிராமத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பமும் வசிக்கவில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் கூட இஸ்லாமியர்கள் இல்லை.
அவர் படிக்கும் காலத்திலும் அங்கு அவர் இஸ்லாமியர்களைச் சந்தித்ததில்லை. இளம் வயதில் திருமணத்துக்குப் பிறகு பொறுப்புகள் அதிகரித்ததால், அவருக்கு வேலை வாய்ப்பு தேடும் நெருக்கடி ஏற்பட்டது. 2015-ஆம் ஆண்டு, வேலை தேடி ரமேஷ்வர் சௌதி அரேபியா செல்ல வேண்டியிருந்தது.
இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமம், சமூகம் மற்றும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ராமேஷ்வர் சாவோவுக்கு, இஸ்லாமிய நாடான சௌதி அரேபியாவை அடைந்தது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது.
சீக்கிரமே இஸ்லாமியர்கள் அவருடைய அறை நண்பர்களாக மாறினார்கள் என்று ராமேஷ்வர் கூறுகிறார். அவர்களில் சிலர் இந்தியாவிலிருந்தும், சிலர் பாகிஸ்தானிலிருந்தும் வந்தவர்கள்.
ஊடக அறிக்கைகள் மூலம் பாகிஸ்தானியர்கள் 'பயங்கரவாதிகள் மற்றும் மதவெறியர்கள்' என்று ராமேஷ்வர் மனதில் ஒரு பிம்பம் இருந்தது. ராமேஷ்வர் தனது மனதில் இஸ்லாமியர்களைப் பற்றியும் அதே பிம்பத்தைக் கொண்டிருந்தார்.
ராமேஷ்வர் சாவோ, "இஸ்லாமியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுடன் வாழ்ந்தபோது, என்னுடைய பல எண்ணங்கள் மாறிவிட்டன. முன்னர், இஸ்லாமியர்கள் இந்துக்களை வெறுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்னவென்றால், நான்தான் அவர்களை வெறுத்தேன். அந்த வெறுப்பு தீர்ந்தது. பாகிஸ்தான் மக்கள் எனது பிரச்னைகளில் எனக்கு உதவுவார்கள், நானும் அவர்களுக்கு உதவி செய்தேன்," என்கிறார் அவர்.
ரமேஷ்வர் தனது மனநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார். அவர் சௌதி அரேபியாவுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், பல உண்மைகளை அறியாமல் இருந்திருப்பார் என்று அவர் கூறுகிறார்.
வெளிநாட்டில் இந்து-முஸ்லிம் நட்பு
பிகார் மாநிலத்தில் உள்ள சிவான் நகரில் உள்ள சந்த்பாலி மௌசா கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இங்கு 10-12 இந்து வீடுகள் மட்டுமே உள்ளன. இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஓரிரு ஆண்கள் வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்கிறார்கள்.
வளைகுடா நாடுகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வளைகுடா நாடுகளின் சம்பாத்தியத்தின் தாக்கம் இந்தக் கிராமத்திலும் தெளிவாகத் தெரிகிறது. கிராமத்தில் ஒரு மண்வீடு கூட இல்லை.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன் ஷர்மா. அவருக்கு வேலை இல்லை. சிவானில் வசிக்கும் போது ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிப்பது கூட கடினமாக இருந்தது என்கிறார் அவர்.
ஒரு நாள் அவரது கிராமத்தைச் சேர்ந்த சொஹ்ராப் அலி, ராஜனிடம் கத்தாருக்கு வேலைக்குச் செல்ல விருப்பமா என்று கேட்டார். சிறிதும் தாமதிக்காமல், ராஜன் சரி என்றார். சொஹ்ராப் அவருக்கான விசாவைப் பெற்றுத்தந்தார்.
ராஜன் ஷர்மா கடந்த ஒன்பது ஆண்டுகளாக கத்தாரில் வசித்து வருவதால் மாதம் தோறும் ரூ.30,000 சேமிக்கிறார். தனது சம்பாத்தியத்தில், தனது கிராமத்தில் மூன்று மாடி வீட்டைக் கட்டியுள்ளார் ராஜன். ராஜன் தனது சகோதரனின் திருமணத்திற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவர் ஏமாற்றமடைந்தார்.
ராஜன், "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, எங்கள் கிராமத்தின் வழியாக ஒரு ஊர்வலம் சென்றது. அது வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பகுதிகளுக்குள் நுழைந்து பிரச்னையை ஏற்படுத்த முயன்றது. சூழ்நிலை ஒருவழியாகச் சமாளிக்கப்பட்டது. இல்லையெனில் வகுப்புவாதப் பதற்றம் ஏற்பட்டிருக்கும்," என்று கூறுகிறார்.
"இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், என் அம்மாவிடம் சென்று, 'நம்ம ராமர் இப்படிப்பட்டவர் இல்லை. அவர் ராஜாவாக வாழ்ந்து, மக்களைக் கவனித்துக்கொண்டார்', என்றேன். இவர்கள் ராமர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற விஷயங்கள் அதிகரித்துள்ளன," என்றார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் ராஜனின் அறை நண்பர் சந்த்பாலியைச் சேர்ந்த முகமது வாசிம். அந்த அறையில் இருக்கும் நான்கு பேரில் ராஜன் மட்டும்தான் இந்து.
அந்த அறையின் ஒரு மூலையில் ராஜனுக்கு சிறிய பூஜை அறையைக் கட்டி இருக்கிறார்கள் அவரது இஸ்லாமிய நண்பர்கள். பூஜையும் தொழுகையும் ஒரே அறையில் நடக்கின்றன.
ராஜன், "கத்தாரில் எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படுக்கையில் இருந்து எழுவதே கடினமாக இருந்தது. வாசிம் பாய் எனது துணிகளைக் கூடத் துவைத்துக் கொடுத்தார். அத்தகைய அன்பு நாட்டிற்குள் ஏன் இருக்க முடியாது?" என்கிறார்.
மதச்சார்பின்மையால் என்ன பயன்?
சௌதி அரேபியாவில் வசிக்கும் சந்த்பாலியைச் சேர்ந்த முகமது நசீம், விடுமுறைக்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அவர் ஜூன் மாதம் சௌதி அரேபியா திரும்புவார்.
இந்தியாவில் மதவாத அரசியலைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.
"சௌதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு இருப்பது மன்னராட்சி. ஒரே குடும்பத்தின் ஆட்சி. நாங்கள் இஸ்லாமியர்கள். அங்கு சென்று மதப்பெரும்பான்மையாக மாறுகிறோம். ஆனால் அதற்காக எந்தச் சலுகையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சட்டம் சமமானது. அங்குள்ள ரவுடிகள், ரவுடிகள்தான். இஸ்லாமிய ரவுடிகள், இந்து ரவுடிகள் என யாரும் இல்லை," என்கிறார் முகமது நசீம்.
இந்திய இஸ்லாமியர்களும் இதே மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் முன்னோர்களும் இந்தியாவைக் கட்டியெழுப்ப ரத்தமும் வியர்வையும் சிந்தினர். ஆனால் அவர்கள் மதத்தின் அடிப்படையில் இரண்டாம் தர குடிமக்களாக்கப்படுகிறார்கள். இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெளிநாடுகளில் ஒன்றாக வாழ்கின்றனர். ஆனால் நாட்டுக்குத் திரும்பி வந்தவுடன், நிலைமை வேறு. மதச்சார்பற்ற நாட்டில் பாகுபாடு இருக்கக்கூடாது, ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது," என்றார்.
முகமது நசீமின் கிராமமான சந்த்பாலியில் இருந்து 10கி.மீ. தொலைவில் உள்ள தர்வேஷ்பூரைச் சேர்ந்த உபேந்திர ராம், அவருடைய அறைத் தோழர். "உபேந்திராவுக்காக இஸ்லாமியர்கள் அறையிலேயே பிளைவுட் மூலம் ஒரு சிறிய பூஜை அறையை கட்டியுள்ளனர். சௌதி அரேபியாவில் இந்துமதத்தைப் பின்பற்றுவது எளிதானதல்ல. ஆனால் எங்கள் இந்து சகோதரனுக்காக நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை," என்று நசீம் கூறுகிறார்.
முகமது நசீம் கூறுகையில், உபேந்திரா சாதியால் செருப்புத் தொழிலாளி, ஆனால் இஸ்லாமியர்களுடன் இருக்கையில் அவர் தன்னை தீண்டத்தகாதவராகக் கருதியதில்லை, என்றார். அதேசமயம் சௌதி அரேபியாவில் கூட உயர் சாதி இந்துக்கள் அவருடன் உணவு உண்பதைத் தவிர்க்கிறார்கள், என்றார்.
மாறும் மனப்பான்மைகள்
பிகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த இலா ஷர்மாவின் கணவர் ஷியாம், துபாயில் உள்ள L&T நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இப்போது அவரது கணவர் தோஹாவுக்கு மாறியதால் விசாவுக்காக காத்திருக்க அவுரங்காபாத் வந்துள்ளார்.
துபாயில் அவர்கள் வசிக்கும் போது, இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்ததாக உணரவே இல்லை என்கிறார் இலா சர்மா.
"உண்மையாகச் சொல்வதென்றால், துபாயில் ஹோலி, தீபாவளி, ஆகிய பண்டிகைகளை ஆடம்பரமாகக் கொண்டாடினேன். எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் அங்கு சிறுபான்மை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒருபோதும் உணரவில்லை. பாதுகாப்பு விஷயத்தில் கூட பெண்கள் துபாயில் இரவு 2 மணிக்கு கூட தனியாக நடக்கலாம்," என்கிறார்.
வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களை நீங்கள் சந்தித்தால், அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களைப் பற்றிய அவர்களது தவறாந எண்ணம் மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். வளைகுடா வேலை அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அவர்களின் அரசியல் மற்றும் சமூக சிந்தனையையும் மாற்றியுள்ளது.
வெளிநாட்டில் சிந்தனை மாறுவது ஏன்?
இந்த மாற்றம் குறித்து பாட்னாவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி தவிஷி பஹ்ல் பாண்டே கூறுகையில், “ஒரே இடத்தில் வசிக்கும் போது பலவிதமான அனுமானங்கள் உருவாகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்று பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கும் போது, இந்த உணர்வுகள் மாறுகின்றன. நாம் முன்பு அனுமானித்தது உண்மையல்ல என்பதை உணர்கிறார்கள்," என்கிறார்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் நான் பேசிய அனைத்து பிஹாரி இந்துக்களும் இஸ்லாமியர்கள் மீதான அவர்களின் சிந்தனை மாறிவிட்டது என்று கூறினார்கள். சிவாநைச் சேர்ந்த ரவிக்குமார் சௌதி அரேபியாவில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். தற்போது சிவான் நகரில் வீடு கட்டி வருகிறார்.
"சௌதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன், இஸ்லாமியர்களைப் பற்றி நான் வெறுப்புடனேதான் நினைத்தேன். சௌதி அரேபியாவுக்குச் சென்ற பிறகு அவர்கள் மீது இருந்த தவறான கருத்துக்கள் மாறின. சௌதி அரேபியா இஸ்லாமிய நாடு என்றாலும், இந்தியாவின் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு தனி நன்மையும் கிடைக்காது. இந்தியாவுக்கு வந்தவுடன், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் இன்னும் குழப்பத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது," என்றார்.
அப்துல் பாரி சித்திக்கி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பழைய மற்றும் சக்திவாய்ந்த தலைவராக கருதப்படுகிறார். வளைகுடாவுக்குச் செல்லும் இந்துக்களின் மனதில் இஸ்லாமியர்கள் பற்றிய சிந்தனை மாறி வருவதை அவர் எப்படிப் பார்க்கிறார்?
அவர் கூறுகிறார், "கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாமியர்கள்மீது வெறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பான்மையான இந்துக்கள் மத்தியில் அது இல்லை. பெரும்பான்மையான இந்துக்கள் இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை ஆதரிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். வளைகுடாவுக்குச் சென்ற பிறகு, இந்தியாவில் இஸ்லாத்தை அவர்கள் வெறுக்கும் காரணங்கள், உரையாடல் மூலம் மாறுகின்றன என்பதைப் பார்க்கிறார்கள்," என்றார்.
சித்திக்கி மேலும் கூறுகையில், “நான் கயஸ்தா குடும்பத்தில் வளர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். இந்தத் திருமணத்தை நடத்துவதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் இந்துக்கள் உதவினார்கள். அப்போது பிகார் மாநில முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் எங்களை அவர் தனது வீட்டில் பல நாட்கள் தங்கவைத்திருந்தார். இப்போது அரசியலில், வெறுப்பு அதிக இடத்தைப் பெறுகிறது, ஆனால் இந்த வெறுப்பு முடிவுறும் நாளும் வரும்," என்கிறார் அவர்.
வளைகுடாவிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜி.சி.சி) ஆறு உறுப்பு நாடுகளான சௌதி அரேபியா, யு.ஏ.இ, குவைத், பஹ்ரைன், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதன் போக்கு முற்றிலும் மாறிவிட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, முந்தைய ஆண்டுகளில் கூலித்தொழிலாளர்கள் கேரளாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் இந்த நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் இது 90% குறைந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதை ஈடுசெய்கிறார்கள்.
2023-இன் முதல் ஏழு மாதங்களில், ஜி.சி.சி நாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
இது குறித்து தவிஷி பஹ்ல் பாண்டே கூறுகையில், "பாட்னாவின் பிராந்திய அலுவலகம் மூலம் ஆண்டுக்கு சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் வளைகுடாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். பீகாரில் இருந்து வளைகுடா செல்லும் போக்கு உள்ளது. முன்னதாக இந்த இடம்பெயர்வு நாட்டிற்குள் அதிகமாக இருந்தது. வளைகுடாவிற்குச் செல்லும் பெரும்பாலான மக்கள் சிவான் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்," என்றார்.
வளைகுடாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகபட்சமாக 34 லட்சம் இந்தியர்களும், சௌதி அரேபியாவில் 26 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். 2023-ஆம் ஆண்டில், இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்த பிறகு 125 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். இதில் பெரும் பங்கு வளைகுடாவில் வாழும் இந்தியர்களுடையது. 125 பில்லியன் டாலர்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களின் பங்கு மட்டும் 18%.
பாட்னாவின் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெளியே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இந்த இளைஞர்களிடம் பேசினால் பிகார் பற்றிய அவநம்பிக்கை தெரிகிறது. இந்த இளைஞர்கள் பட்டதாரிகள் அல்லது 12-வது வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்.
'வளைகுடா நாடுகளில் அதிகப் பணம் கிடைக்கிறது'
இஸ்லாமியர்களைவிட அதிகமான இந்துக்கள் வேலைவாய்ப்பிற்காக வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர் என்பது பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெளியே உள்ள வரிசையிலிருந்து தெரிகிறது.
பிகாரின் அர்ரா நகரைச் சேர்ந்த அமன் திவாரி ஓமன் செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்க வந்துள்ளார். அவர் 12-வது பாஸ். இந்தியாவில் வேலை கிடைப்பது கடினமா என்று அவரிடம் கேட்டேன்.
இந்த கேள்விக்கு பதிலளித்த அமன் திவாரி, "ஓமன் நாட்டுக்குச் சென்றால் கூலி வேலை செய்ய வேண்டும். ஆனால் அங்கு எனக்கு கண்ணியமான பணம் கிடைக்கும். இந்தியாவில் அதே வேலைக்கு குறைந்த பணமே கிடைக்கும். தங்க இடமும் கிடைக்காது," என்றார்.
"இந்தியாவில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், உங்கள் சம்பளம் குறைந்தது 30,000 ரூபாயாக இருக்க வேண்டும். டெல்லி-மும்பையில் ரூ.30,000 சம்பளம் இருந்தும் ரூ.10,000 சேமிப்பது கடினம். இந்தியாவில் தனியார் துறையில் பணிபுரியும் எந்த ஒரு தொழிலாளிக்கும் சம்பளம் ரூ.30,000 இல்லை. இதனால்தான் வயதான பெற்றோரை விட்டுவிட்டு வேறு நாடு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார்.
அமானின் சக ஊழியர் சரோஜ் பாண்டே கூறுகையில், "நிதிஷ் குமார் 20 ஆண்டுகளாக பிகார் முதல்வராக இருக்கிறார். ஆனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்பை விட மோசமாகிவிட்டது. முன்பெல்லாம் விவசாயம் லாபம் தரும் தொழிலாக இருந்தது, இப்போது விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாகிவிட்டது," என்கிறார்.
மதவாத அரசியலின் தாக்கம்
பிகாரின் பிரபல வரலாற்றாசிரியர் இம்தியாஸ் அகமது கூறுகையில், “வளைகுடாவில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடந்து வரும் வெறுப்பு மற்றும் வன்முறையால் நிச்சயமாக மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அரேபியாவில் அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், ஏனென்றால் இந்திய இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி, அரேபியர்கள் அவர்களை தொழிலாளர்களாகத்தான் கருதுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்தியர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கிறார்கள்," என்றார்.
“இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் வன்முறை அல்லது வெறுப்பு ஏற்பட்டால், அந்தச் செய்தி உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்கிறது என்பது உண்மைதான். இது அரேபிய ஆட்சியாளர்கள் மத்தியில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, சாமானிய மக்களிடையே சரியான செய்தியை அனுப்பவில்லை," என்றார்.
சௌதி அரேபியாவில் வசிக்கும் போது, இந்திய அரசியலில் சக இஸ்லாமியர்களுடன் எப்போதாவது விவாதித்தாரா என்று ராமேஷ்வர் சாவிடம் கேட்டோம்.
அதற்கு அவர், "இந்திய இஸ்லாமியர்களுக்கு பாஜக-வைப் பிடிக்காது. வளைகுடாவில் வாழும் இந்திய இஸ்லாமியர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். பாஜக-வை விமர்சிக்கின்றனர். வெளிநாடுகளில் தங்கள் நாட்டைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானின் இஸ்லாமியர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்," என்றார்.
ஆனால் பா.ஜ.க மீதான விமர்சனம் எப்படி நாட்டுக்கு தீமையாக மாறியது?
இதற்கு பதிலளித்த ராமேஷ்வர், "பா.ஜ.க இந்தியாவின் கட்சி. அது ஆட்சியில் உள்ள ஒரே கட்சி. இதுபோன்ற சூழ்நிலையில் நாட்டையும் கட்சியையும் தனித்தனியாக பார்க்க முடியாது," என்கிறார்.
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments