Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-16


ஒருநாள் காலை ஜாகைக்குள் இலேசாக வெளிச்சம்வர ஆரம்பித்தபோது… செரோக்கி வழமைபோல் செரோக்கி கண் விழித்துக் கொண்டான்! 

எழுந்திருந்தவன்… எப்போதும் போல்… தன் இரு கைகளையும் தலைக்கு மேலாக நீட்டி, நிமிர்த்தி உடம்பை முறுக்கிவிட்டுக் கொண்டு, தலையை இடதும் வலதுமாகச்  சுழற்றியபடி கண்களை அகல விரித்து கொண்டான்! 

சின்னப் பையனாக இருந்த காலம் தொட்டே அவனிடத்தில் இருந்து வந்த இந்தப் பழக்கம்;  வளர்ந்து வந்து அவன் பெரியவனான போதிலும் கூட விடுபடவில்லை!

செரோக்கி தனது அங்கவஸ்தியை இறுக்கி அணிந்து கொண்டு வெளியில் வருகின்றான்!

உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கூடாகத் தெரிந்த ஒளிக்கதிர்களை நோக்குகின்றான்!  அது “சூரியன்”என்பது இப்போது அவனுக்கு நன்றாகத் தெரியும்!

வளர்ந்து வாலிபனாகி விட்ட அவன் இப்போது தன் சுற்றாடலையும் அதற்கு அப்பாற் பட்டவற்றையும் அறிந்து புரிந்துகொள்வதில் ஆர்வம் மிகக் கொண்டுள்ளான்!

ஜாகைக்குள்ளிருந்து வந்தவன் - சற்றுத்தூரத்தில் கற்குகைக்கருகே மலைச் சரிவிலிருந்து பளிங்காகப் பாய்ந்து வந்து - குட்டையில் விழுந்து கொண்டிருந்த நீரூற்றில் வழமைபோல் முகத்தை அலம்பிக் கொண்டவனாக அருகிலிருந்த கற்பாறையில் சாவகமாக அமர்ந்து கொள்கின்றான்!

சிறிது நேரத்தில்  அங்கு வந்த அவனது தாய் நீட்டிய கஞ்சிச் சிரட்டையை வாங்கிக் கொண்டவன் - அதனை சுவைத்துப் பருகத் தொடங்கியபோது- அவனது ஜாகையை நோக்கி தூரத்திலிருந்து வந்துகொண்டிருந்த ரெங்க்மாவின் பெற்றோரைக் கண்டான்!

இருவர் தலைகளிலும் கூடைகளும்  - கரங்களில் பொட்டலங்களும் காணப்பட்டன. 

தாமதிக்காமல் ஜாகைக்குள் சென்று தன் தாயிடம் அவர்களது வருகை பற்றிய செய்தியைச் சொன்னான். பரபரப்பாக ஜாகைக்குள் வந்த தாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தவைகளை எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு - ஜாகையின் மையத்தில்  மிருகத்தோலிலான விரிப்பொன்றை விரித்தாள்.

வாசலடிக்கு வந்த அவர்கள் கரங்களில் இருந்த பொட்டலங்களையும் தலையிலிருந்த கூடைகளையும் தரையிறக்கி வைத்துவிட்டு - நடந்து வந்த களைப்புத் தீர விரிப்பில் அமர்ந்து கொண்டனர். பின்னர் ஒருவர் ஒருவராக அவனது பெற்றோரும், ரெங்க்மாவின் பெற்றோரும் மாறிமாறிக் குசலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்த விடியற்பொழுதில் அவர்கள் ஏன் வந்தார்கள் என்பது செரோக்கிக்கு மட்டுமல்லாது அவனது பெற்றோருக்கும் புதிராகவே இருந்தது!

ரெங்க்மா மூப்பெய்திய செய்தியைச் சொல்ல வந்ததாக அவர்கள் குறிப்பிட்டபோது-செரோக்கியின் தாயும் தந்தையும் அளவிலா மகிழ்ச்சியடைந்தார்கள்!

எது எவ்வாறிருந்தாலும் ரெங்க்மா அவனது தந்தையின் தங்கை மகள்!  அவள் வளர்ந்து பெரியவளானதில் அவனது தந்தை இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தார்!

செரோக்கிக்கு எதுவும் புரியவில்லை! அவர்கள் சென்றதும் தாயிடம் விசாரித்தறிந்து கொள்ள வேண்டுமென்று அவன் தன்னை அடக்கி வைத்துக் கொண்டான். வந்தவர்களை தாயும் தந்தையும் அன்பாக உபசரித்து, ஆதரவான வழியனுப்பி வைத்தார்கள்.

இன்னும் சில நாட்களில் ரெங்க்மாவுக்கு நடக்கப்போகும் மூப்பு நீராட்டு விழா பற்றிய செய்தியை அவனது தாய் அவனுக்கு விலாவாரியாகக் கூறினாள்!

(தொடரும்)


 



Post a Comment

0 Comments