Ticker

6/recent/ticker-posts

ஐ.நா.வின் தீர்ப்பை துச்சமென மதிக்கும் இஸ்ரேலும், நிர்க்கதியான பாலஸதீனமும்!


மேற்கு ஆசியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு நாடு; ஒரு காலத்தில் அதிகாரப்பூர்வமாக இருந்த பாலஸ்தீனம்; அது தன் பிரதேசத்தின் ஒரு பகுதியை தாரைவார்த்துவிட்டு, இன்று இரண்டு துண்டிக்கப்பட்ட பிரதேசங்களாகிப் போனது.

ஒன்று மேற்குக் கரை மற்றது காஸாப் பகுதி என்றும் அறியப்படும் பாலஸ்தீனத்தில் அதிகமான கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டு, 36000த்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும், முதியோரும், பெண்களும் ஷஹீதாக்கப்பட்டு, 70000த்துக்கும் மேற்பட்டோர் இரத்த வெள்ளத்தில் மூழ்கி, உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

உலகம் முழுவதிலிருந்தும், இவர்களின் விடிவுக்காக போராட்டங்கள் வலுத்த நிலையில்,  பாலஸ்தீனத்துடன் உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன்  ரமல்லா நகரில் தமது தூதரகத்தை திறக்க உத்தரவிட்டுள்ள கொலம்பியா நாட்டின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலின் நெதன்யாகு ஒரு " 'இனப்படுகொலை குற்றவாளி' என்று வரலாற்றில் இடம்பிடிப்பார்" என்று  கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் காட்டுமிராண்டித் தனத்தைக் கடுமையாக எதிர்த்து வரும் கொலம்பியா,  சிறிது காலத்திற்கு முன்பு இஸ்ரேல் உடனான உறவை முறித்து கொள்வதாக அறிவித்திருந்தது!  இந்நிலையிலேயே பாலஸ்தீனத்தில் தனது தூதரகத்தை நிறுவும் இவ்வறிவிப்பை இப்போது  வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ மேற்கு கரை நகரமான ரமல்லாவில் கொலம்பியாவின் தூதரகத்தை திறக்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லூயிஸ் முறிலோ கூறியுள்ளார். 

பல்லின மக்கள், பன்மொழி பேசுவோர் மிகுந்து வாழும் கொலம்பியா,  உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. அதன் பன்முக நிலவியலும், நிலத்தோற்றமும் வலுவான பிரதேச அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான நாகரிய மையங்கள் அந்தீஸ் மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.
அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜென்டினா, பொலிவியா, கொலம்பியா,ஈக்வெடோர், பெரு, சிலி, வெனிசூலா ஆகிய ஏழு நாடுகளூடாக வடக்குத் தெற்காக எழுந்து நிற்கின்றது. உயர்ந்த மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பர்.

இவ்வாறான  நாடுகளுள் ஒன்றான கொலம்பியா, தனது தூதரகத்தை பாலஸ்தீனில் நிறுவ முற்பட்டிருப்பது அந்த நாட்டு மக்களின் மனிதாபிமானத்தையும், நாட்டு ஜனாதிபதியின் கோழைத்தனமற்ற வீரத்தனத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது!

1967ம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாள் போரை அடுத்து, 1993ம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையின் படி, பாலஸ்தீனிய அதிகாரத்தின் கீழ் வரும் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியாக ரமல்லா இஸ்ரேலின் கட்டுப் பாட்டிலிருந்தது. பின்னர் அது மேற்குக் கரையில் பொதுஜன முன்னணி நிர்வாகத்தின் கீழ் வந்தது.

இஸ்ரேலிய சட்டமானது  ரமல்லாவிற்குள் இஸ்ரேலியர் நுழைவதைத் தடைசெய்கின்றது. ஜெரூசலத்து நகராட்சி எல்லையிலிருந்து மேற்கே ஜெருசலத்துக்கும் ரமல்லாவுக்குமிடையே மேற்குக் கரையில் அமைந்துள்ள கலந்தியா ஒரு பாலஸ்தீனியக் கிராமமாகும்.  இந்த கிராமத்தில் 2017ல் 572 பேர்கள் வசித்தனர். 1949ல் UNRWAவால் நிறுவப்பட்ட அகதிகள் முகாம் ஒன்று கலந்தியாவில் அமைந்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலமும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்து வந்தன.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே, மற்றும் ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில், அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை இஸ்ரேல் திரும்ப பெற்றிருக்கிறது!

கடந்த 1988ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இதே ஆண்டில்தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அவ்வேளையில், ஜெருசலம் தனது தலைநகர் என்று அறிவிக்கப் பட்டபோதிலும் அதன் எல்லைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

"ரஃபாவில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாக, இந்திய  'மாலை மலர்' செய்தி வெளியிட்டுள்ளது.

"அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 1980ம் ஆண்டு பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தீனத்தை தனி நாடாக வத்திக்கான் ஏற்றுகொண்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பாலஸ்தீனத்தின் தூதரகம் வத்திக்கானில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது!

பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி  கடந்த 2011ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தது!

இதுவரை பாலஸ்தீன அரசை மூன்று நாடுகள் அங்கீகரித்த நிலையில், அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், "வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே பிரதம மந்திரி அலுவலகத்தின்படி, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு இணங்கி,  2024 மே 28ம் திகதி, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நோர்வே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்த அங்கீகாரத்தின்படி, பாலஸ்தீனம் அதன் அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் ஒரு சுதந்திர நாடாகத் திகழ வழிவகுக்கும்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோர் காஸாவில் மக்கள் பட்டினியால் சாவதை ஒரு சாதனமாக  பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான் கூறியுள்ளார்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.

கடந்த 2024.05.24ம் திகதி வெள்ளிக்கிழமையன்று உயர்மட்ட ஐக்கிய நாடுகளின் நீதிமன்றம்,  ரஃபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட நிலையில், ஐ.நா.வின் உத்தரவை துச்சமென மதித்து, ரஃபாவிலுள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் கடந்த  வாரம், ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஃபாவின் கிழக்கில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய நிலையில் கடந்த வாரம்   ஆயிரக் கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த 'தால் அஸ்-ஸுல்தான்' சுற்றுப்புறத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்தது!

கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் அதேநேரம் தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும், பலத்த தீக்காயங்களுடன் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ரஃபா இஸ்ரேலால் எரிக்கப்படுவதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதைத் தடுக்க யாரும் எதுவும் செய்யவில்லை" என்று ரஃபாவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய தாக்குதலை எகிப்து, கத்தார், ஜோர்டான், மலேஷியா மற்றும் குவைத் கடுமையாக கண்டித்துள்ளது.

கடந்த 234 நாட்களில், 35,984 பாலஸ்தீனியப் பொதுமக்கள்,  குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், முதியோரும் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்; எண்ணற்ற பலர் காயமடைந்துமுள்ளனர், 

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் இடைவிடாத, இரக்கமற்ற தாக்குதல்களும்,  வேண்டுமென்றே செய்கின்ற இனப்படுகொலை நடவடிக்கைகளும் 2024 மே 24 அன்றைய சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக மலேஷியாவிலிருந்து விஸ்மா புத்ரா சுட்டிக்காட்டியது மட்டுமல்லாது, ரஃபாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தவும் கோரினார்.

“இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல் உலகின் மிக உயர்ந்த நீதி அமைப்பு மற்றும் அது நிலைநிறுத்தும் கொள்கைகளுக்கு, அதன் அப்பட்டமான அவமரியாதையை காட்டுகிறது.
“இந்த அட்டூழியங்களுக்கு சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மை காஸாவில் ஏற்கனவே உள்ள மோசமான மனிதாபிமான நிலைமையை மோசமாக்கும்.  நீதி மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்றும் மலேஷிய அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.

"ஒரு விரிவான சமாதான உடன்படிக்கைக்கான உறுதியான முயற்சியின் மூலமே இந்த வன்முறைச் சுழற்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும் மற்றும் பாலஸ்தீனியர்கள் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழக்கூடிய எதிர்காலம்  உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட விஸ்மா புத்ரா, ஐ.சீ.ஜேயின் தீர்ப்பை அமுல்படுத்தவும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதி தொடரப் பணியாற்றவும், இனப்படுகொலை மாநாட்டின் மாநிலக் கட்சிகள் உட்பட சர்வதேச சமூகத்தை மலேசியா வலியுறுத்தியதாகவும்  மேலும் அவர் கூறியுள்ளார்.

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments