புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-22

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-22


பெண்மைக்கே உரித்தான வெட்க சுபாவத்துடன் பொட்டலத்தை வாங்கிக் கொண்ட ரெங்க்மா, நிலைக் கம்பத்திலிருந்து ஜாகையின் மூலை வரை நகர்ந்து மூங்கிற் சுவரில் சாய்ந்தபடி மறுபடியும்  அவனையே வைத்த கண் மாறாமல் நோக்கிக் கொண்டிருந்தாள்!

குட்டி ரெங்க்மா, குமாரி ரெங்க்மாவாகி விட்டதால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு; மாரை மறைத்துக் கொண்டிருந்த பட்டைக் கவசத்தைச் சவாலாக்கி, வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கும் அவளது தேக வளர்ச்சி என்பதை செரோக்கி உணர்ந்தான்!

ஜாகைக்கு வெளியில் வேலையில் ஈடுபட்டிருந்த ரெங்க்மாவின் தாய், தன் வேலையை முடித்துக் கொண்டதும் அங்கு வந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சகோதரன் மகன் வந்துள்ள களிப்பை, புன்னகை பூத்த முகத்துடன், இரண்டொரு வார்த்தைகள் அவனிடம் பேசியதன் மூலம் வெளிக்காட்டிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்! 

தாய் விரிப்பில் வைத்துச் சென்ற பழங்களையும், பானங்களையும் ரெங்க்மா பரிமாறினாள்! 

பழங்களைப் பதம் பார்த்துவிட்டு, வெள்ளைத்துளசி கலந்த இஞ்சித் தண்ணியை அவன் சுவைத்துப் பருகினான்!

உண்டு, குடித்து முடித்து ஜாகைக்கு வெளியே வந்த செரோக்கியை, ரெங்க்மாவின் கால்கள் அவளை அறியாமலேயே பின்தொடர்ந்தன! முன்றலை விட்டும் வெளியான செரோக்கியின் கண்கள் மங்குவின் ஜாகைப் பக்கம் வட்டமிடுதை அவள் கண்டு கொண்டாள்! அவனின் தேடலை சாமர்த்தியமாக உணர்ந்து கொண்ட அவள்,

“ஆ…மங்குவைத் தேடுகின்றீரோ?”

“ஆமா… எங்கே அவன்?”
“போயிட்டான்…. மங்கு கண்ணாலம் பண்ணி“தபுயா” போயிட்டான்.”

“அதென்ன தபுயா...? அதெங்கே இருக்கிது? றொம்பத் தூரமோ?”

“ஒரிநோகோ ஆத்தைக் கடந்து செல்லவேண்டுமாம்… முரா இனத்தவர்களாம்... நதிக் கரையில்தான் ஜாகையாம்” என்று அவள் அடுக்கிக் கொண்டு போனாள்!

“அதென்ன திடீர் கண்ணாலம்? கடைசியா மங்குவை நான் உனது கொண்டாட்டத்தில் கண்டபோதுகூட இதப்பத்தி அவன் சொல்லலியே?” என்றான் செரோக்கி.
“அது ஒரு பெரிய கதை”என்று கூறிவிட்டு, ரெங்க்மா கதையைத் தொடர்ந்தாள்.

“முரா இனத்தவர்களுக்கும் முண்டுரு இனத்தவர்களுக்கும் ஆதி தொட்டே பிணக்கு உள்ளதாம்” என்று  கதையை ஆரம்பித்த அவள், “ஏதோ ஒரு கும்பலை நம்பி முண்டுரு இனத்தவர் முரா இனத்தவர்களோடு சண்டை செய்துள்ளார்களாம். வேற்று நாட்டுக் கும்பலுக்கு முரா இனத்தை அமேசான் நதிக்கரைகளிலிருந்து விரட்டியடிக்க வேண்டியதால் தந்திரமாக இரு இனத்தவர்களையும் மோதவிட்டுள்ளனராம். அதனால் வந்த பகை இன்றுவரை தொடர்கிறதாம்” என்று கூறி முடித்துவிட்டு சிறிது நிறுத்தி, மேலும் தொடர்ந்தாள்.

“இருநூறு வருடங்களுக்கு முன்பு ஒரு அதிகாரக் கும்பலை அமேசான் மழைக்காடு வசீகரித்துள்ளதாம். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதைப்புரிந்து கொண்டு முராக்களை எதிர்க்க நதிக்கரைவாசிகளான முண்டுரு இனத்தவரை உபயோகித்துக் கொண்டனராம். மறைந்திருந்து தாக்கும் யுக்தி, கூரான அம்புகளைக் குறிபார்த்து எய்துவதில் திறமை காரணமாக முண்டுரு இனத்தினர் வெற்றிகொண்டுள்ளனர். அதன் பிறகு அமேசான் காடுகளின் முராக்கள் பகுதி அதிகார வர்க்கத்தின் வசம் வந்தது. அமேசான் அழிந்து விடும் எனக் கவலையடைந்த முராக்கள்,  தங்கள் இனத்தைக் காவுகொடுத்தேனும் அதன் அழிவுக்கு எந்த சிக்கல் வர விடாமல் இன்றுவரைக் காப்பாற்றி வருகின்றனர். அமேசானின் நதியோடு பிறந்த அவர்கள், நதி ஓரங்களில்  தங்கள் கிராமத்தை அமைத்து வாழ்கின்றனர். 

கண்ணாலத்திற்குப் பிறகு மாப்புள கண்டிப்பாக பொண் ஜாகயிலதான்  இருக்க வேண்டுமாம். அதனாலதான் மங்கு அங்க போயிட்டான்”என்று அழகான வரலாறு கலந்த கதையொன்றைக் கூறிமுடித்தாள் ரெங்க்மா!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post