கடுதாசி..!

கடுதாசி..!


1992- அந்த வருடத்தின், அக்டோபர் மாதம் மூன்றாம்தியதி, மதியம் வேளையில்....

"என்னங்க, சாதம் வெந்திடிச்சி. கீழே இறக்கி வையுங்க. எனக்கு உடம்புக்கு முடியலைங்க...."

"கடந்த அஞ்சுவருஷமா, நீயும் இதைதான் சொல்ற. என்னங்கன்னு கூப்பிட்டா போதுமே. நான் புரிஞ்சுங்கமாட்டேனா...? பஞ்சவர்ணம்..." சொல்லிக்கொண்டே, சாய்வுநாற்காலியில் இருந்து எழுந்து, சமையலறையை நோக்கி சென்றார், எழுபதுவயதை தாண்டிய பத்மநாபன்.

"மோகனுக்கு, கடுதாசி கிடைச்சிருக்குமான்னு தெரியலிங்க. மூணு கடுதாசி போட்டாச்சு. அவனும் பதில் ஒண்ணும் எழுதல. மனசுக்கு என்னவோ போல இருக்குங்க. பக்கத்துவீட்டு காயத்திரிதான் நாம சொன்னதுபோல, கடுதாசி எழுதி விலாசம் எழுதினா. ஒருவேளை விலாசம் தப்பா எழுதியிருப்பாளோ...?"

"காயத்திரி எட்டாம்வகுப்பு படிச்சவ. சரியாதான் எழுதியிருப்பா. மோகனுக்கு அவசரவேலை இருந்திருக்கும். அதான் பதில் எழுதியிருக்க மாட்டான். தேவையில்லாமல், நீயும் மனசப்போட்டு குழப்பி, என்னையும் குழப்பாதே. நாளைக்கு ஒருகடுதாசி எழுதிடலாம், பஞ்சவர்ணம்..."

மூன்றுமாதங்களுக்கு பிறகு...

தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷன், இரண்டாவது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தவனை, அந்தகுரல் திரும்பி பார்க்க வைத்தது.

"மோகன் சார், உங்களை இங்கே சந்திப்பேன் என்று, நான் நினைக்கவே இல்லை..."

"போஸ்ட்மேன் சார் நீங்களா....? உங்களை பார்த்து ஆறுமாசமாகுது. புதுசா, வீடுமாறிட்டேன். உங்ககிட்ட சொல்லவும் மறந்திட்டேன். எனக்கு கடுதாசி ஏதும் வந்திடிச்சா...?"

"ஆமாம் சார்... உங்க அம்மா எழுதின நாலு கடுதாசிகளும், போஸ்ட் ஆபீஸில் என்மேஜையில் தான் இருக்கு. நாலுமாசமா உங்களை தேடுறேன். நீங்க வீடுமாறின விஷயம் பக்கத்துவீட்டுல சொன்னாங்க. ஆனா விலாசம் தெரியாதுன்னு சொன்னாங்க. கடுதாசியை திருப்பி அனுப்பலாம்ன்னா, பின்பக்க விலாசத்தில், பஞ்சவர்ணம் என்றுதான் எழுதியிருக்காங்க. உங்க விலாசம் தாங்க. நாளைக்கே அனுப்புறேன்..."

இரண்டு மாதங்கள் கழிந்தது.

அந்த அம்பாசிடர் காரில் வந்து இறங்கினான், மோகன்.

"சார்... வெயிட் பண்ணணுமா...?"

"அரைமணி நேரத்தில் வந்திடுவேன். அதற்கான வாடகையும் சேர்த்து தாரேன்..."

"சரிங்க, சார்...!" 

சொன்ன டிரைவரின்முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

மோகன் அந்த சின்ன தெருவை கடந்து, வலதுபக்கம் திரும்பி, புதுசா சுண்ணாம்பு அடித்த வீட்டை நெருங்கினான்.

"அப்பா..."

தென்னம்மரத்தையே, பார்த்துக் கொண்டிருந்த, பத்மநாபன் திரும்பினார்.

"வா... மோகன். எப்டி இருக்கே.? மனைவி குழந்தைங்களை கூட்டிட்டு வரலியா...?"

"தனியா தான் வந்திருக்கேன். ஸ்கூல் லீவில வாரோம்பா. இப்போ நான் புதுசா வீடுமாறியிருக்கேன். அதான் கடுதாசி கிடைக்கலை. எனக்கு தெரிஞ்ச தபால்கார்தான் லட்டர் வந்த விஷயத்தை சொன்னாரு. அம்மா, எப்டி இருக்காப்பா...? மருந்து மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறாளா...? அம்மாவை பார்த்திட்டு, உடனே நான் கிளம்பணும்ப்பா..."

வீட்டிற்குள் நுழைந்தவன், பஞ்சவர்ணத்தை தேடினான்.

"அம்மாவை காணோமே....? அப்பா..."

"உள்ளேதான் இருக்காடா..." உள்ளே நுழைந்தார், பத்மநாபன்.

"மோகன்... அம்மா இங்கேதான் இருக்கா. எப்டி இருக்கான்னு பாருடா..."

பார்த்தவன்,

அதிர்ந்தான்.

சுவற்றில் மாட்டிய போட்டோவில், செம்பருத்திப் பூவின் இதழ்களால் ஆன, சரத்தின் நடுவே, சிரிக்க மறந்த நிலையில் தெரிந்தாள், பஞ்சவர்ணம்.

"அ... அப்பா... அம்... அம்மா, எப்டியப்பா....?"

"என் பஞ்சவர்ணம் செத்து ஒருமாசமாகுது. அவ இறந்த அன்னிக்கு, உனக்கு தந்தி கொடுத்தேன். அடுத்த வாரமே தந்தி திரும்ப வந்திடிச்சு. ஆனா... நீ வரலை. அவளை தூக்கி சுமந்து, சுடுகாடு வரை கொண்டுபோக, உனக்கு கொடுத்து வைக்கல. அந்த பாக்கியம் இன்னொரு புள்ளைக்கு கிடைச்சிருக்கு...."

"என்னப்பா சொல்றீங்க...? உங்களுக்கு நான் மட்டும்தானே மகனா இருக்கேன்..."

பத்மநாபன், சற்று கோபத்தோடு பார்த்தார்.

"பஞ்சவர்ணத்திற்கு தாலி கட்டின மறுநாள், வீட்டில இரண்டு தென்னம்பிள்ளைய நட்டு வையுங்கன்னு சொன்னா. அவ, ஆசைக்காக நட்டு வெச்சேன். அடுத்த வருஷத்திலே நீயும் பொறந்தே. அடுத்த குழந்தை வேண்டாங்க. மூணு பிள்ளைங்க நமக்கு இருக்காங்கன்னு, தென்னம்பிள்ளையையும் சேர்த்தே சொல்லுவா...."

கண்ணீரை துடைத்துக் கொண்டே, மீண்டும் பேச ஆரம்பித்தார், பத்மநாபன்.

"பஞ்சவர்ணம் தென்னம்பிள்ளையை எதற்காக வளர்க்கச் சொன்னான்னு, நான் புரிஞ்சிக்கிட்டேன். அவளை சுமந்த தென்னம்ஓலை, அடுத்ததா... என்னையும் அதுதான் சுமக்கும்...."

"என்னப்பா, பேசுறீங்க. நான் உங்கபிள்ளை இல்லையா...?"

"மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நீ, ஐநூறு ரூபாய் எங்களுக்கு தந்திட்டு, நிறைய கணக்கு கேட்குறே. ஆறுமாசமா, இந்த பணமும் தரதில்லை. கடுதாசி போட்டா, பதிலும் அனுப்புறதில்லை. இந்த தென்னம்பிள்ளையும், கீரைத்தோட்டமும், ரேசன் அரிசியும் தான் எங்க வயித்தை கழுவுது. நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இரு, மோகன். என்னைப்பற்றி கவலைபடாதே. ஏன்னா, உனக்கு எங்களைப்பற்றி சிந்திக்க நேரமே இல்லையே...."

அதேநேரத்தில்...

"தாத்தா...."

குரல்கேட்டு திரும்பினார், பத்மநாபன்.

"வாம்மா.... காயத்திரி..."

"தாத்தா... கடுதாசி எழுதிட்டேன். விலாசம் சரியான்னு பார்த்துக்குங்க..."

காயத்திரியிடம் இருந்து கடுதாசியை வாங்கினார்.

"இத்தனை நாளா, எழுதின கடுதாசி சரிதான். ஆனா விலாசம் தப்பும்மா. இனி, சரியான விலாசம் கிடைச்சதும், நாம கடுதாசி எழுதினா போதும், காயத்திரி...."

கையிலிருந்த கடுதாசியை,

இரண்டாய்....

நான்காய்....

எட்டாய்....

கிழித்தார், பத்மநாபன்.


கோபால்



 



Post a Comment

Previous Post Next Post