ஒலிம்பிக் 2024: தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்ற இந்தியா -பாகிஸ்தான் தாய்மார்கள்

ஒலிம்பிக் 2024: தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்ற இந்தியா -பாகிஸ்தான் தாய்மார்கள்


பாண்டவர்களில் சகாதேவன் வான சாஸ்திரத்தில் கைதேர்ந்தவன்.பாண்டவர்களின் எதிரிகள் கெளரவர்கள்.

இரு தரப்புக்கும் போர் நடைபெறும் என்று உறுதியாகி விட்டது .

இரு தரப்பும் பங்காளிகள்தான்.பகையாக இருந்தாலும் பேசிக் கொள்வார்கள்.

கௌரவர்களின் அரசன் துரியோதனன் சகாதேவனைத் தேடி வந்து ..." தம்பி சகாதேவா .. எந்த நாளில் போர் ஆரம்பித்தால் நான் வெற்றி பெறுவேன் என்பதை ஆராய்ந்து நாள் குறித்துக்கொடு அந்த நாளிலேயே நான் போரை ஆரம்பம் செய்கிறேன் " என்பான்.

சகாதேவன் ஞானியைப் போன்றவன்.நல்லது கெட்டது எதுவும் அவனை பாதிக்காது . நண்பன் பகைவன் என்ற பேதங்களும் அவனுக்குக் கிடையாது .அதனால் துரியோதன்னுக்கு நாள் குறித்துக் கொடுப்பான்.

இது ...
மகாபாரதத்தின் ஒரு காட்சி.

ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் 2020 ல் தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா; பல பதக்கங்களை வென்றிருக்கின்ற இந்தியாவின் தங்க மகன்.இந்திய ராணுவத்தில் பொறுப்பான பதவியில் இருக்கின்ற இவர், நல்ல வசதி வாய்ப்புகள் உள்ள இளைஞர்.

தமது சகோதர நாடு பாகிஸ்தான்.அந்த நாட்டின் ஈட்டி எறியும் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் அர்ஷத் நதீம். கட்டிடக் கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.மிகவும் ஏழ்மையானவர்.ஈட்டி எறிந்து பயிற்சி பெறுவதற்குக்கூட வசதி இல்லாமல் இருந்தவர்.

நீரஜும் நதீமும் வேறு வேறு நாட்டவர்களாக இருந்தாலும் நல்ல நண்பர்கள்.நண்பனின் வறுமை நிலையறிந்து அவருக்கு உதவி செய்யும்படி சமூக வலை தளத்தில் ஒரு பதிவு போட்டார் நீரஜ்.

அதைப் பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நதீமுக்கு உதவிக்கரம் நீட்டியது. அவரது கிராமத்து மக்களும் உதவி செய்தார்கள் . கிட்டத்தட்ட லட்ச ரூபாய் மதிப்புள்ள ஈட்டியை வாங்கி நதீம் பயிற்சியில் ஈடுபட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜை விட அதிக தூரம் ஈட்டி எறிந்து, தங்கப் பதக்கம் பெற்றார் அர்ஷாத் நதீம்.

நீரஜுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததைவிட நண்பன் நதீமுக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததில் அகமகிழ்ந்து போனார் நீரஜ்.

நல்ல நண்பனை இன்றைய நாளில் அடையாளம் காட்ட வேண்டுமென்றால் நீரஜைத்தான் கூற வேண்டும்.

தன்னுடைய மகன் வெள்ளி பதக்கம் வென்றிருப்பது குறித்து பேசிய  நீரஜின் தாயார் சரோஜ்தேவி," எங்களுக்கு வெள்ளியும் தங்கமும் ஒன்றுதான். தங்கம் வென்ற நதீமும் என் மகன் தான். அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்"என்று கூறித் தனது தாய்மையின் வாய்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நதீமின் தாயார் ரஷியா பர்வீன் ..." நீரஜும் என் மகனைப் போன்றவன்தான்.நீரஜும் நதீமும் சகோதரர்கள்.நீரஜ் நிறைய பதங்களை வெல்ல நான் இறைவனிடம் பிரார்திக்கிறேன்" என்கின்றார்.

இந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போது மனசுக்குள் குற்றால அருவி கொட்டுவதுபோல் சந்தோஷம் ஏற்படுகிறது!

whatsapp



 



Post a Comment

Previous Post Next Post