Ticker

6/recent/ticker-posts

செய்யாத குற்றத்திற்கு 38 ஆண்டு சிறைவாசம் - நிரபராதி என்று நீதிபதி அறிவித்தும் விடுதலை ஆகாதது ஏன்?


மஹராஜ் தனது 85ஆம் வயதில் சிறை மருத்துவமனையில் உயிரிழந்தார்

"நான் ஒரு அப்பாவி."

பிரிட்டன் குடிமகனான கிருஷ்ண மஹராஜ் 38 ஆண்டுகளாக இந்த வார்த்தைகளை நீதிமன்றத்திலும், ஊடகங்களிலும், வழக்கறிஞர்களிடமும் கூறி வந்தார்.

அமெரிக்காவின் மயாமியில் 1986இல், இரண்டு பேரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் புளோரிடா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரத்தைக் கூட ஒரு நீதிபதி ஏற்றுக்கொண்டார் (பாப்லோ எஸ்கோபர் தலைமையிலான ‘மெடலின் கார்டெல்’ குழு உறுப்பினர்களால் அந்தக் கொலைகள் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது).

ஆனால் மஹராஜால், ஒருபோதும் சிறையில் இருந்து விடுதலை பெற முடியவில்லை.

ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, தனது 85ஆம் வயதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஹராஜ், சிறை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

‘மஹராஜ் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்கள்’

“நீதிமன்றம் எனக்கு மரண தண்டனை விதித்த போது, அதைக் கேட்டவுடன், நான் அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டேன். செய்யாத ஒரு குற்றத்திற்காக நான் தண்டிக்கப்பட்டுள்ளேன் என்பதை என்னால் அப்போது நம்ப முடியவில்லை" என்று மஹராஜ் 2019இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மஹராஜின் வழக்கறிஞர் கிளைவ் ஸ்டாஃபோர்ட் ஸ்மித்தின் முயற்சியால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இறுதியாக, மஹராஜுக்கும் அந்த இரட்டைக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், மஹராஜை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை.

"மஹராஜ் குற்றமற்றவர் என்பதைக் காட்ட ஆதாரங்கள் இருந்தாலும், அவரை விடுவிக்க அது போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கூறியது" என்று வழக்கறிஞர் ஸ்டாஃபோர்ட் பிரிட்டன் செய்தித்தாள் ‘தி கார்டியனிடம்’ கூறினார்.

இப்போது மஹராஜின் மனைவி மரிட்டாவும் ஸ்டாஃபோர்ட்டும் அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

மயாமியில் இரட்டைக்கொலை

அக்டோபர் 16, 1986 அன்று, ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டெரிக் மூ யங் மற்றும் அவரது மகன் டுயேன் ஆகியோர் மயாமியில் உள்ள ‘டுபோன்ட் பிளாசா’ ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் இறந்து கிடந்தனர்.

இருவரது உடல்களிலும் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருந்தன. விசாரணை விரைவில் தொடங்கியது. கிருஷ்ண மஹராஜ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான மஹராஜ், வாழைப்பழ இறக்குமதி வணிகம் மூலம் கோடீஸ்வரரானவர். டெரிக் மூ யங்குடன் அவருக்கு வணிகம் தொடர்பான தகராறு இருந்தது.

"ஹோட்டல் அறை ஒன்றில் டெரிக் மூ யங்கை சந்திக்க மஹராஜ் முடிவு செய்திருந்தார். ஒரே ஒருவர் அளித்த சாட்சியத்தின்படி, ஹோட்டல் அறைக்குள் இருந்த மூ யங் மற்றும் அவரது மகனை மஹராஜ் சுட்டுக் கொன்றார்." என்று காவல்துறை கூறியது.

டிரினிடாட் தீவில் உள்ள மஹராஜின் உறவினர்கள் சிலரிடம் டெரிக் மூ யங் பண மோசடி செய்ததாகவும், அதை திரும்பப் பெறுவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கொலைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது.

மஹராஜ் கைது செய்யப்பட்டார், அவர் மீது இரட்டை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு வருடத்தில் இரட்டைக் கொலைக்காக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

"நான் அந்த ஹோட்டல் அறையில் இருக்கவில்லை. அன்றைய தினம் நான் ஹோட்டலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக குறைந்தது ஆறு பேர் சாட்சி சொன்னார்கள். என்னை குற்றவாளி என்று சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை," என்று மஹராஜ் 2019இல் பிபிசியிடம் கூறினார்.

"நான் ஒரு நிரபராதி," என்று அவர் மீண்டும்மீண்டும் கூறினார்.

ஆறு ஆண்டுகளாக, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், மரண தண்டனையைத் தவிர்க்கவும் அவர் முயற்சித்த போதிலும், 1993 வரை எதுவும் மாறவில்லை. பின்னர் மனித உரிமை வழக்கறிஞராகப் பணியாற்றிய ஸ்டாஃபோர்ட், இந்த வழக்கை எடுக்க முடிவு செய்தார்.

‘கொலைகளுக்கு உத்தரவிட்ட பாப்லோ எஸ்கோபர்’

ஸ்டாஃபோர்ட் செய்த முதல் விஷயம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார், 2002இல் அவர் அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அவர், மஹராஜ் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதில் கவனம் செலுத்தினார்.

இந்த இரட்டைக் கொலை நடந்தது 1980களில், அப்போது மயாமியில் போதைப்பொருள் கடத்தல் உச்சக்கட்டத்தில் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, யார் அங்கு ஆதிக்கம் செலுத்துவது என்று கொலம்பிய கார்டெல்களுக்கும் கியூபா போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் டெரிக் மூ யங்குக்கும் தொடர்பு இருந்தது என்பதற்கும், அவரது கொலை மெடலின் கார்டெல் உறுப்பினர்களால் நடத்தப்பட்டிருக்கும் என்பதற்கும் போதுமான ஆதாரங்களை ஸ்டாஃபோர்ட் கண்டறிந்தார்.

“இந்த கொலைகளைச் செய்ய உத்தரவிட்டது பாப்லோ எஸ்கோபர். அதைச் செய்தது அவரது உதவியாளர்கள்.”

"நான் மெடலின் நகருக்குச் சென்று, உயிருடன் இருக்கும் கார்டெல்லின் முன்னாள் உறுப்பினர்களை சந்தித்தேன். ‘மஹராஜுக்கும் இந்தக் குற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்ற உண்மையைக் கூறுமாறு கோரிக்கை வைத்தேன்" என்று ஸ்டாஃபோர்ட் பிபிசியிடம் கூறினார்.

டெரிக் மூ யங்கைக் கொலை செய்வதற்கான நோக்கம் பிறருக்கும் இருந்தது தொடர்பான ஆதாரங்கள், மஹராஜ் சம்பவ இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தார் என்பதற்கான 6 சாட்சியங்கள் உட்பட தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் மஹராஜூக்காக ஒரு புதிய விசாரணையைத் தொடங்க பல ஆண்டுகளாக முயற்சி செய்தார் ஸ்டாஃபோர்ட்.

ஆனால், ஒவ்வொரு தண்டனைக் குறைப்பிற்கான கோரிக்கைக்கும் மேல்முறையீட்டு முயற்சிக்கும் ​​எதிர்மறையான பதிலே வந்தது.

"ஓர் அப்பாவி மனிதனை விடுவிப்பதற்கான ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும், அவரை விடுவிக்கவும் அமெரிக்க அரசு தயாராக இல்லை என்பது பரிதாபத்திற்குரியது" என்று ஸ்டாஃபோர்ட் பிபிசியிடம் கூறினார்.

முன்னாள் டிஇஏ ஏஜென்ட் அளித்த சாட்சியம்

நவம்பர் 2017இல், முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் முகவர் ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், ‘இரட்டைக் கொலைகள் நடந்த நாளில் பாப்லோ எஸ்கோபருடன் தொடர்புடையவர்கள் டுபோன்ட் பிளாசா எனும் அந்த ஹோட்டலின் அறை ஒன்றில் தங்கியிருந்ததாகக்’ கூறினார்.

அந்த முன்னாள் ஏஜென்டின் வாக்குமூலத்தின்படி, டெரிக் மூ யங்கை கொலை செய்ய எஸ்கோபார் உத்தரவிட்டார். ஏனெனில் டெரிக் மூ யங் கார்டலுக்குச் சொந்தமான பணத்தை வைத்திருந்தார் மற்றும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க அவர் கார்டலுக்கு உதவியுள்ளார்.

23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து ஆகஸ்ட் 2014இல் விடுதலை செய்யப்பட்ட பாப்பாய் (Popeye) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட ‘ஜான் ஜைரோ வெலாஸ்குவேஸிடமிருந்து’ இந்த தகவல் பெறப்பட்டது என்றும் அந்த ஏஜென்ட் கூறினார்.

இந்த பாப்பாய், எஸ்கோபாரின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தார்.

முன்னாள் ஏஜென்டின் சாட்சியத்தின்படி, அமெரிக்க சட்டத்தின் பிடியில் கார்டெல் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக, இந்த வழக்கில் மஹராஜ் பெயர் சேர்க்கப்பட்டது.

இந்த புதிய ஆதாரத்தின் மூலம் உற்சாகமடைந்தார் வழக்கறிஞர் ஸ்டாஃபோர்ட். 2019இல், அதாவது குற்றம் நடந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மஹராஜ் வழக்கை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்வதை அவர் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மஹராஜ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், அவர் விடுதலைப் பெறவும் உதவ முடியும்.

அதே ஆண்டில், இரண்டு முரண்பாடான நிகழ்வுகள் அரங்கேறின. முதலில், அமெரிக்காவின் 11வது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி, மஹராஜ் குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வகையான செயல்முறைக்கான உச்ச நீதிமன்றமான ‘ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம்’ இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்ட போது, ​​"நீதிபதியின் முடிவு மஹராஜை விடுவிக்க போதுமானதாக இல்லை" என்று தீர்மானித்தது.

38 ஆண்டுகளாக மஹராஜை சந்திப்பதை நிறுத்தாத அவரது மனைவி மரிதா மஹராஜ், தனது கணவர் பிரிட்டன் சிறைக்கு மாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே குடியேறினார்.

ஆனால் ஆகஸ்ட் 5ஆம் தேதி, பல உடல்நலக் கோளாறுகளுக்குப் பிறகு, சிறை மருத்துவமனையில் மஹராஜின் உயிர் பிரிந்தது.

"எனது மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக இதை பார்க்கிறேன்," என்று தி கார்டியன் நாளிதழ் நேர்காணலில் ஸ்டாஃபோர்ட் கூறினார்.

"அவரால் இறுதி வரை சிறையில் இருந்து விடுதலை அடைய முடியவில்லை என்ற உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்று ஸ்டாஃபோர்ட் கூறினார்.

bbc


 Ai SONGS

 



Post a Comment

0 Comments