Ticker

6/recent/ticker-posts

1303 நாட்கள் 15 வருடங்கள்.. பாகிஸ்தான் சொந்த மண்ணில் அவமான சாதனை.. வங்கதேசம் வரலாறு காணாத வெற்றி


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது. 

அந்த நிலையில் 2வது போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவில்பிண்டி மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூட் 57, சாய்ம் ஆயுப் 58, ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகதி ஹசன் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு கேப்டன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகர் ரஹீம் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 26-6 எனத் தடுமாறிய அந்த அணி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த லிட்டன் தாஸ் சதமடித்து 138, மெஹதி ஹசன் 78 ரன்கள் எடுத்தனர். அதனால் தப்பிய வங்கதேசம் 262 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குர்ராம் சேஷாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் முன்பை விட மோசமாக விளையாடி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43, ஆகா சல்மான் 47* ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்முட் 5, நஹிட் ராணா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 185 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு ஜாகிர் ஹசன் அதிரடியாக 40 (39), சத்மன் இஸ்லாம் 24, கேப்டன் சாண்டோ 38, மோனிமுல் ஹைக் 34, முஸ்பிக்கர் ரஹீம் 22*, ஷாகிப் அல் ஹசன் 21* ரன்கள் எடுத்தனர். 

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் 2 – 0 (2) என்ற கணக்கில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து ஒய்ட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வென்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது. அது போக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சரித்திரம் படைத்தது.

மேலும் 2009க்குப்பின் (வெஸ்ட் இண்டீஸ்) 15 வருடங்கள் கழித்து வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 1303 நாட்களாக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் பாகிஸ்தான் தலைகுனிந்துள்ளது. மேலும் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரில் தோற்று பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்துள்ளது.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

0 Comments