அன்று அவர்கள் ஐஸ்கிறீம் தின்றார்கள்!,அதுவும் வறுத்த ஐஸ்கிறீம்!
இர்வின் ஐஸ்கிறீம் ரோல் இரண்டு தட்டிற்கு ஒடர் பண்ணிவிட்டு, இருவரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்!
தூய வெண்ணிற மேலாடை அணிந்திருந்த பணியாள் ஒருவன், தலையில் உயரமான வெள்ளைத் தொப்பி அணிந்திருந்தான். பாத்திரங்களிலிருந்த பதார்த்தங்களை தனக்கு முன்னிருந்த கிடாயில் அள்ளிப் போட்டபடியே அவன் கரண்டிகளால் மாறி மாறிப் பிசைந்து சுருலாக்கி அதன் மேல் கலர் கலராக சில பல பதர்த்தங்களைத் தூவினான்!
ஐஸ்கிறீம் தட்டுக்களை எடுத்து வந்த பணிப்பெண் அவற்றை மேசை மேல் வைத்துவிட்டுச் செல்லும் வரை, பணியாளன் ஐஸ்கிறீமை வறுக்க ஆரம்பித்ததிலிருந்து அதனை சுருலாக்கி தட்டுக்களில் அடுக்குவதை செரோக்கி வைத்த கண் வாங்காமல் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
தட்டுக்களின் இரண்டு புறங்களிலும் கத்தி, முட்கரண்டி, பட்டுக்காகிதம் ஆகியவற்றை நேர்த்தியாக வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பணிப்பெண்!
செரோக்கி கண்டிராத ஒன்றை இப்போது காண்கின்றான்! இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் வாழ்கையில் சுவைத்திராத ஒன்றை சுவைக்கப் போகின்றான்!
ஐஸ்கிறீம்... அதுவும் வறுத்த ஐஸ்கிறீம்! அதிக குளிராகக் காணப்பட்டதால் அவற்றிலிருந்து ஆவி இலேசாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. செரோக்கியின் நாவில் ஜலம் உறியதை இர்வின் கடைக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டான்!
அப்போது இர்வினை வெறித்தனமாக உற்றுப் பார்த்தான் செரோக்கி! சாப்பிடும்படி விழிமொழி பேசினான் இர்வின்.
நண்பன் இர்வின் எப்படித் தன் கைகள் இரண்டிலும் கத்தியையும், முட்கரண்டியையும் பிடித்தானோ, அப்படியே செரோக்கியும் தன் முன்னிருந்த தட்டின் இரு மருங்கிலும் வைக்கப்பட்டிருந்த கத்தியையும், முட்கரண்டியையும் எடுத்துப் பிடித்தான்.
ஆளுக்கு ஐந்து ஐஸ்கிறீம் ரோல்கள் அவரவர் தட்டுக்களில் வைக்கப்பட்டிருந்தன. செரோக்கியின் தட்டில் சுருள் சுருலாக வைக்கப்பட்டிருந்த ஐந்து ரோல்களில் ஒன்றை முட்கரண்டியால் நகர்த்திப் பிடித்தவாறே துண்டாக வெட்டி வேறாக்கிக் குத்தி எடுத்து, இர்வின் எப்படி செய்கின்றா னோ அப்படியே செரோக்கியும் தன் வாய்க்குள் விட்டான்!
ஆஹா..... என்ன சுவை? குளிர் கலந்த அமிர்தமாக இருந்தது அது அவனுக்கு!
வெளி உலகத்தார் எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்று தனக்குள் தோன்றிய உணர்வைத் தன் மனதுக்குள்ளேயே பூட்டி மறைத்துக் கொண்டான்!
இவ்வாறான இன்பங்களை வனவசிகளால் அனுபவித்துக் கொள்ள இயலாமால் போய்விட்டதை நினைத்து அவன் வருந்தினான்.
அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும்! அவர்கள் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்! மனதுக்குள் மறுபடி மறுபடியும் ஆழமாக தன் ஆதங்கத்தை உள்வாங்கி வைத்துக் கொண்டான்!
சிறிது நேரத்தில் இருவர் தட்டுக்களும் காலியாயின. அருகிலிருந்த பட்டுக் காகிதத்தால் நாவைத் துடைத்துக் கொண்டிருந்த இர்வினைப் பார்த்து அவனும் துடைத்துக் கொண்டான்.
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments