Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-38


அழைப்பிதழை தனது  பைக்குள்  பத்திரப் படுத்தி வைத்துக் கொண்ட செரோக்கி,  ஜாகை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, அவனுக்குள்  ஒன்றன் பின் ஒன்றாகப் பல கேள்விகள்  வந்து கொண்டிருந்தன. 

தான் எந்த உடையில் மனாஸ் நகர்  செல்வது? ரெங்க்மாவுக்கு எப்படியான உடையை அணிவிப்பது? அதற்கும் மேலாக ரெங்க்மாவை அவளது ஜாகையிலிருந்து எப்படி எவரும் அறியாமல் வெளிக் கொணர்வது? 

மண்டைக்குள் அரித்துக் கொண்டிருந்த இவ்வாறான  கேள்விகளின் தாக்கம், அவனது நடையில் தளர்வை ஏற்படுத்தி, சிந்தனைக்கு வேலை கொடுத்தது!

நண்பன் நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த இர்வின் - தனது உந்துருளியை  அன்பளிப்பாகக் கொடுப்பதே சாலப்பொருத்தமானது அதுவே தன் நண்பனை  சந்தோசப்படுத்தும்  என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்!

தனது பிறந்த நாளுக்கு இம்முறை சக்தியூர்தி வாங்கித் தருவதாக அவனது தந்தை உறுதியளித்துள்ளார். அதனால் உந்துருளியின்  தேவை அவனுக்கு இருக்க மாட்டாது என்பதால், அதனை செரோக்கிக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவதெனத் தீர்மானித்துக் கொண்டான்! 

ஆனால் புரோகோனிஷ் கிராமத்துக்குள் செரோக்கி உந்துருளி  பாவிப்பதை அந்த மக்கள் அங்கீகரிக்க வாய்ப்பில்லையே? இது எங்கிருந்து, எப்படி வந்தது? என்று துருவ ஆரம்பித்து விடுவார்களே!  செரோக்கியின் வெளியுலகத் தொடர்பானது பழங்குடி மக்களது பழக்க வழக்கங்களிலிருந்தும் அவனை வேறாக்கிவிடும் நிலை ஏற்பட்டுவிடுவதால் நகர்வுகளை சமயோசிதமாகச் செய்ய வேண்டிய நிலைக்கு இர்வின் தள்ளப்பட்டான்!

நேற்றைய தினம் இர்வின் ஒப்புக் கொண்டபடி செரோக்கிக்கு பகுதிநேர வேலை ஒன்றைத் தேடிக் கொடுத்தால், தினமும் அவன் நகருக்குள் வரவேண்டி வரும். தனது இனத்தவர்கள் அறியாமல் இதனைத் தொடர்வதெப்படி? சரியான தீர்வுத் திட்டமொன்றை நெறிப்படுத்தி செரோக்கிக்கு உதவ நினைத்தான் இர்வின்!

வழமைபோல் செரோக்கி அந்த வேரடிக்கு வந்ததும், இர்வினும்  நற்செய்தி ஒன்றை ஏந்தியவனாக  அங்கு வந்தான்! செரோக்கிக்கு தொழில் ஏற்பாடு பண்ணியிருக்கும் அந்த செய்தியை அவனிடம் கூறியபோது - செரோக்கியின்  சந்தோசத்தித்கு அளவே இல்லாமற் போய்விட்டது. இர்வினை ஆரத்தழுவிக் கொண்டான்.

உந்துருளியில் செரோக்கியை ஏற்றிக்கொண்டு   மனாஸ் நகர் நோக்கி விரைந்தான் இர்வின்! குறிப்பிட்டதோர் இடத்திற்கு வந்ததும் வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கிக் கொண்டனர். ஒரு மூலையில் வண்டியை கால் பதித்துவிட்டு, சுயமாகத் திறந்து கொள்ளும் கண்ணாடிக் கதவைத்  தள்ளிக்  கொண்டு உள்ளே சென்றான் இர்வின். 

செரோக்கியும் அவனைத் தொடர்ந்தான்! அலுவலகத்திற்குள் நுழைந்த  இருவரும் முகாமையாளருக்கு வந்தனம் கூறி, அங்கிருந்த நாட்காளிகளில் அமர்ந்து கொண்டனர். 

அலுவலக அறைக்குப் பின்னால் இராட்சத யந்திரங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அதன் சத்தம் செரோக்கியின் காதுகளைத் துவம்சம் செய்தது. சில மனிதர்கள் காகிதக் கட்டுக்களைத் தூக்குவதும் வைப்பதுமாக இருந்தனர்.

முகாமையாளரின் இருக்கைக்கு மேலாக தொங்க வைக்கப்பட்டிருந்த  தாள்கள் காற்றின் வேகத்தில் படபடத்தன, அவை ஒருசேர்வதும் விரிவதுமாக இருந்தன.

அதில் பென்னாம் பெரிய  இலக்கங்கள் செரோக்கியின் கண்களில் பட்டன. 1990 என அச்சிடப்பட்டிருந்த பெரிய எழுத்துக்களைத் தொடர்ந்து அடுக்கடுக்காக இருந்த இலக்கங்களை செரோக்கியால் இனங்கண்டு வாசித்துக் கொள்ள முடியுமாகவிருந்தாலும் -  அதுதான் வெளியுலகத்தார் பாவிக்கின்ற “நாட்காட்டி” என்பது அவனுக்குத் தெரிய  வாய்ப்பில்லை!

முகாமையாளரின் மேசைக்கருகில் வைக்கப்பட்டிருந்த நீள்சதுர பெட்டி ஒன்றில் சில மனிதர்கள்  கைகளை வீசியபடி நிதானமாகவும் சிலபோது கடுமையாகவும் புரியாத மொழிகளில்  பேசுவதை செரோக்கி வியப்பாகப் பார்த்தான்.

பென்னாம் பெரிய கட்டடங்களுக்கு மேலாக இனம் புரியாதவைகள் சில  தாறுமாறாக மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருப்பதையும், மக்களது ஓலங்களையும் அவன் வியப்புகலந்த பயத்துடன் பார்த்தான். 

அவனுக்கு எதுவுமே புரியவில்லை! அவன் வனத்துக் குள்ளிருக்கின்றபோது சிலவேளை  இவ்வாறானவைகள் ஆகாயத்தில் பறப்பதைப் பார்த்ததுண்டு.

அதுவே சிறியதொரு பெட்டிக்குள்... பயங்கரமாகத் தெரிந்தன.  செரோக்கி உட்பட வனவாசிகள் இவற்றை 
ஆகாயத்தில் காண்கின்றபோது பயந்து நடுங்கி, ஜாகைக்குள் ஓடி ஒளிந்துகொள்வர்!

(தொடரும்)

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments