ஈராக் நாடு குவைத் நாட்டை ஆக்கிரமித்துள்ள செய்தி தான் அந்த நீள்சதுரப்பெட்டியில் சலனப்படங்களாக வந்து கொண்டிருப்பதும், அதுதான் “தொலைக்காட்சி” என்பதும் வனவாசியான செரோக்கிக்குத் தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் போகப்போக அவன் புரிந்துகொள்வான்.
அவனது கவனம் இப்பொழுது முற்று முழுதாகத் தன் தொழிலை நோக்கியதாக இருந்தது! தான் வந்துள்ள இடம் எப்படிப்பட்டது? அங்கே தனக்கான வேலை என்னவாகவிருக்கும்?
இர்வினும்,முகாமையாளரும் எதைஎதையோ மாறிமாறிப் பேசிக்கொண்டனர். பிறகு செரோக்கியின் பக்கம் திரும்பிய இர்வின், அருகிலிருந்த சஞ்சிகை ஒன்றை எடுத்து விரித்துக் காட்டியபடி,
“இதுதான் இங்கு தயாராகின்றது. இதற்கான யந்திரங்கள்தான் உள்ளே இயங்கிக் கொண்டிருக் கின்றன. இந்த இடத்தை அச்சகம் என்று அழைப்பர்” என்று செரோக்கியிடம் கூறினான்!
எல்லாவற்றிற்கும் செரோக்கியால் தலையை மட்டும்தான் ஆட்ட முடிந்தது!
அலுவலக மேசை மீது அடுக்கடுக்காக சில காகிதங்கள் காணப்பட்டன. இளம்பச்சை நிறத்தில் சதுரமான கூம்பு வடிவில் சற்று உயர்ந்து சாய்வாகக் காணப்பட்ட திண்மப் பெட்டகத்தில் வட்டமும் வட்டத்தைச் சுற்றி சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அதுதான் “தொலைபேசி” என்பது செரோக்கிக்கு அப்போதைக்குத் தெரிய வாய்ப்பில்லை!
இவர்களுக்கு முன்பாக, மேசைக்கு மறு பக்கமாக அமர்ந்திருந்த நபர், அவர்தான் இந்த நிறுவனத்தின் முகாமையாளர், இர்வினோடு மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இளம்பச்சை நிறப்பெட்டகத்தின் மீதிந்த வளைவைத் தனது வலது கரத்தால் தூக்கியெடுத்து அதன் இரு முனைகளையும் காதுக்கும் வாய்க்கும் வைத்தபடி வட்டைத்தைச் சுற்றியிருந்த இலக்கங்களைத் தனது விரலொன்றினால் சுழற்றினார்.
அவர் சுழற்றும் ஒவ்வொரு தடவையும் ”ட் ரீ ங் ங் ங்....” என்ற இதமான ஒலி வெளிப்பட்டதை செரோக்கி அவதானித்தான்.
பின்னர் அவர் நீண்ட நேரமாக எதையோ பேசினார். சிறிது நேரத்தின்பின் அந்த வளைவை சதுரத்தின் மேல் ”ஞங் ” என்று வைத்துவிட்டு, “பொஸ் வேலை வழங்க ஒப்புக் கொண்டார்.
தினமும் இதே நேரத்திற்கு வேலைக்கு வந்து இரவு 10 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு செல்லலாம்” என்றார்.
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்று குறிப்பிட்ட அவர் - சம்பளத்தை தினமும் வேலை முடிந்து செல்லும் போது பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஒவ்வொரு நாளும் பணம் அவனது கைக்கு வருவதை நினைத்தபோது செரோக்கி சந்தோசப் பட்டான். உடனே வேலைக்கு வர ஒப்புக் கொண்டான். செரோக்கியை உள்ளே அழைத்துச் சென்ற முகாமையாளர், அச்சியந்திரங்களையும் அங்கு பணியாட்கள் வேலை செய்கின்ற முறைகளையும் அவனுக்குக் காட்டினார்.
ஒருவர் நீள்சதுர தட்டின்மேல் சிறிய எழுத்துக்களை அங்கிருந்த பெட்டகத்திலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு இயந்திரத்தை இன்னொருவர் மிதித்தபடி காகிதங்களைப் போடுவதும் தூக்கி எடுப்பதுமாக இருந்தார்.
இன்னொரு இயந்திரத்தில் காகிதக் கட்டிலிருந்து தனித்தனியாக அசுர வேகத்தில் வெளியான காகிதங்கள் அடுத்த முனையில் வந்து விழுந்து கொண்டிருந்தன.
இந்த இயந்திரத்தில்தான் செரோக்கி உதவியாளனாக வேலை செய்ய வேண்டுமென்று முகாமையாளர் தெரித்தார். அவனது வேலை பற்றிய விபரத்தை அவர் விளக்கமாகக் கூறினார். விசேடமாக காகிதங்கள் வந்து விழுகின்றபோது வளைவு நெளிவுகள் ஏற்பட்டால் அவற்றை முறைப் படுத்தி இயந்திரத்தைத் தொடராக வேலை செய்யவிட வேண்டிய பொறுப்பு அவனுக்குண்டு என்பதை அவர் குறிப்பிட்டார்.
முகாமையாளருடன் விடை பெற்றுக் கொண்ட இருவரும் அலுவலகத்திற்கு வெளியில் வந்து உந்துருளியில் ஏறி வேரடி நோக்கிச் சென்றனர். வேரடியிலிருந்து அவர்கள் வழமைபோல் இருவேறு பக்கங்களாகப் பிரிந்து போயினர்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments