Ticker

6/recent/ticker-posts

அல்-குர்ஆன் கையெழுத்தின் முதல் மூலப்பிரதியின் பாகம் கண்டுபிடிப்பு!


இதுவரைகால இஸ்லாமிய வரலாற்றில் அல்- குர்ஆன்  மனனமிடப்பட்டு, வாய்மூலமாகவே பகிரப்பட்டதாக நம்பிவந்த நிலையில், பிரித்தானியப்  பல்கலைக்கழக நூல
மொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய அல் குர்ஆன் பாகமொன்று, அல்-குர்ஆன் கையெழுத்தின் மூலப்பிரதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்; அத்துடன், இதனை அவர்கள் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பாகவும்  கருதுகின்றனர்.

இங்கிலாந்தின் பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமான, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டின் ஆரம்பப் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த அல்-குர்ஆன் பாகம், இறைதூதரின் நெருங்கிய தோழரான அபூபக்கர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று ஐக்கிய அரபு இராஜிய அரசினால்  நடாத்தப்படும் கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனரும், அதன் முன்னணி நிபுணர்களில் ஒருவருமான ஜமால் இபுனு ஹுவரைப் குறிப்பிட்டுள்ளார்

ஜமால் இபுனு ஹுவரைப் பி.பி.சியிடம் குறிப்பிடும்போது, “இது முஸ்லிம் உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இது அபூ பக்கர்(ரழி) அவர்களின் குர்ஆன் என்று நான் நம்புகிறேன். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்துப் பிரதி, இஸ்லாத்தின் வேராகக் கருதப்படும், அல்குர்ஆனின் வரலாற்றைப் பரைசாற்றுகின்றது. இஸ்லாமிய கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேறு குர்ஆன் பாகங்களுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த அல்குர்ஆன் பாகம் , 1317 ஆண்டுகள் பழைமையானது என்று  கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்புச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு (Radiocarbon dating) என்பது, இயற்கையில் காணப்படும், கரிமம்-14 எனும் கரிமத்தின் ஓரிடத்தானைப் பயன்படுத்தி, கரிமம் (Carbon)) கலந்த பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறை ஆகும்.
பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய துறைகளின் பேராசிரியரான டேவிட் தோமஸ் (Professor David Thomas MA (Oxon), MA (Cantab), PhD., Lanc.) கண்டுபிடிக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் கையெழுத்துப்பிரதி பற்றிக் குறிப்பிடும்போது, “இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டின் கடைசியில் மற்றும் ஏழாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையுடன் பிணைந்தது. இந்த கையெழுத்துப் பிரதியை பார்க்கும்போது, இது இறைதூதர் மரணித்த குறுகிய காலத்தில் எழுதியதாக இருக்க வேண்டும். எழுதியவர் பெரும்பாலும், இறைதூதரின் போதனைகளைக் கேட்டவராக இருந்திருக்கலாம்” எனக் குறிப்பிடுகின்றார்.

இறைதூதரின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் முதலாவது தலைவரான கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒரு நூலாக அமைப்பதற்கு,  குர்ஆன் பாகங்களைச் சேகரிக்க உத்தரவிட்டார். எனினும் அதிகாரபூர்வமாக எழுதப்பட்ட அல்-குர்ஆன் கி.பி. 650ம் ஆண்டு மூன்றாவது தலைவரான கலீபா உஸ்மானின் காலம் வரை பூர்த்தியாகவில்லை.

எழுதப் பயன்படுத்தியிருக்கும் மிருகத்தோல், எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்ததாக இருக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடு உள்ளது. இந்தக் குர்ஆன் பாகத்தின் உண்மையான வரலாறு உறுதி செய்யப்படாத நிலையிலும் கூட,  இது வரலாற்றில் முக்கியமான ஒன்று என நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments