Ticker

6/recent/ticker-posts

கூகுள், மைக்ரோசாப்ட் மீது இன்று முதல் தாக்குதல்.. அமெரிக்கா மீது பேரிடியை இறக்கிய ஈரான்


அமெரிக்க முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை மீது இன்று முதல் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து 5ஆவது வாரமாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. உலகளாவிய பிரச்சினையாக இது மாறியுள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன.

இதனிடையே, ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர்- பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள இந்தக் கிடங்கு, அந்நாட்டு ராணுவம் மற்றும் அணுத்திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் அதனை அழித்தொழிக்கும் முயற்சியாக அமெரிக்கா இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேற்காசிய நாடுகள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள நிலையில், குவைத் பகுதியில் சுற்றித் திரிந்த ஈரான் நாட்டு ட்ரோனை பொதுமக்கள் சுட்டுவீழ்த்த முயற்சித்ததாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.அதேபோல, துபாயில் சில வீடுகள் மீது ஏவுகணைத் தடுப்பு சிதல்கள் விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் இருவர், இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக முக்கிய தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அதில், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஜெட் எரிபொருள்கள் கிடைக்காத நாடுகள் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லையென்றால், ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று ஈரானுடன் போரிட்டு உங்களுக்குத் தேவையான எண்ணெய்யை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். போரில் தங்களுக்கு உதவி செய்யாத பிரிட்டன் போன்ற நாடுகள் தனியாகப் போரிட கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் புரட்சிகர காவல் படையும் களத்தில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே இனி தங்களது இலக்கு என தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட 18 நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களில் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக ஈரான் கருதுகிறது. அதன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments