Ticker

6/recent/ticker-posts

வாந்தியால் வேட்டையாடுபவர்களை தாக்கும் பறவை... எது தெரியுமா?


ஆபத்து வந்தால், தன் வாந்தியை ஆயுதமாகப் பயன்படுத்தி, பெரிய வேட்டையாடும் பறவைகளையும் தூரத்தில் ஒதுக்கி விடுகிறது. சாதாரணமாகத் தோன்றினாலும், இந்த திறனின் காரணமாக இது கடல் வானத்தின் பாதுகாவலன் எனக் கூறப்படுகிறது. அந்த பறவையை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இயற்கையில் இருக்கும் பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும் தனித்திறன்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு பறவை தன்னைப் பாதுகாப்பதற்காக ஒரு விசித்திரமான முறையைப் பயன்படுத்துகிறது. ஆபத்து வந்தால், தன் வாந்தியை ஆயுதமாகப் பயன்படுத்தி, பெரிய வேட்டையாடும் பறவைகளையும் தூரத்தில் ஒதுக்கி விடுகிறது. சாதாரணமாகத் தோன்றினாலும், இந்த திறனின் காரணமாக இது கடல் வானத்தின் பாதுகாவலன் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பறவை கடலுக்கு அருகிலான குளிர்ந்த பகுதிகளில் வாழ்கிறது. வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. அங்குள்ள குளிர்ந்த காற்றிலும் ஆழமான கடல் நீரிலும், இது சோர்வடையாமல் நீண்ட தூரம் பறக்க முடியும். காற்றில் மிதந்து, கடல் மட்டத்திற்கு மேலே வட்டமிட்டு உணவைத் தேடுகிறது.

இந்தப் பறவை தோற்றத்தில் மற்ற கடற்பறவைகளைப் போலவே இருக்கும். ஆனால் அதன் உடலமைப்பிலும் நடையில் சில வேறுபாடுகள் உள்ளன. இதற்கு “வடக்கு ஃபுல்மார்” என்று பெயர். இதன் அலகு வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறது. அதனால் கடலில் இருக்கும் உணவுகளை எளிதாகப் பிடிக்க முடிகிறது. இதன் மூக்கு மிகவும் கூர்மையாக இருப்பதால், தொலைவில் இருக்கும் உணவின் வாசனையைக் கூட இதனால் உணர முடிகிறது.

இந்தக் கூர்மையான மூக்கின் உதவியால், இது உயரத்தில் பறந்தபடியே தொலைவில் இருக்கும் உணவைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதிகமாக இறக்கை அடிக்காமல், காற்றின் உதவியால் நீண்ட நேரம் பறந்து கொண்டே இருக்கும். கடலில் இருக்கும் சில குப்பைகளைத் தின்று, கடலை சற்றே தூய்மையாக வைப்பதிலும் இது உதவுகிறது. அதனால் இதை சிலர் “கடல் தூய்மையாக்கி” என்றும் அழைக்கிறார்கள்.

இந்தக் கடற்பறவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. பறவைகளில் இது ஒரு நீண்ட ஆயுள் கொண்ட பறவையாக உள்ளது. இதன் மிக முக்கியமான சிறப்பு, இதன் தற்காப்பு முறைதான். வேட்டையாடும் பறவை ஒன்று இதைத் தாக்க வரும்போது, இது தன் உடலில் இருந்து பிசுபிசுப்பான, கெட்ட நாற்றமுள்ள எண்ணெய் போன்ற வாந்தியை வெளியிடுகிறது. இதனால் இது வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கிறது.

கழுகு அல்லது பிணந்தின்னிக் கழுகு போன்ற பெரிய பறவை இதைத் தாக்க முயன்றால், வடக்கு ஃபுல்மார் வாந்தியைத் தூக்கி எறிகிறது. அந்த வாந்தி எண்ணெய் மாதிரி பிசுபிசுப்பாக இருக்கும். அது வேட்டையாடும் பறவையின் இறகுகளில் ஒட்டிக்கொள்கிறது. அந்த எண்ணெய் காரணமாக அவற்றின் இறகுகள் கனமாகி, சரியாகப் பறக்க முடியாமல் போகிறது. பல நேரங்களில் அவை சமநிலையை இழந்து கடலில் விழுந்துவிடும். இவ்வாறு, வடக்கு ஃபுல்மார் தன் புத்திசாலித்தனத்தாலும் தனித்துவமான தற்காப்பு முறையாலும் தன் உயிரை காத்துக்கொள்கிறது.

news18


 


Post a Comment

0 Comments