
Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் லேட்டஸ்ட் செய்திகள்: கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் தாக்குதல், இன்று வரை நீடிக்கிறது.
ஈரான் மீது தரைவழி தாக்குதல்...?
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர், வான்வழித் தாக்குதலாகவே நடைபெற்று வருகிறது. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இன்னும் தங்களின் படை வீரர்களை ஈரானுக்குள் இறக்கவில்லை. தரைவழியான தாக்குதல் என்பது ஈரானில் வேலைக்கு ஆகாது என வல்லுநர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஈரானின் புவியியல் அமைப்பு அவர்களுக்கு இயற்கை காவலனாக இருப்பதாக கூறப்படுகிறது. தரை வழி தாக்குதலை நம்பி ஈரானில் களமிறங்குவது கன்னி வெடியில் கால் வைப்பதற்கு சமம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், தரைவழி தாக்குதல் இன்றி அமெரிக்கா தொடங்கிவைத்த இந்த போர், அமெரிக்காவுக்கு எவ்வித முழுமையான பலனையும் தராது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வியூகம் வகுக்கும் அமெரிக்கா
இது ஒருபுறம் இருக்க, அமைதி பேச்சுவார்த்தை காரணமாக, அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை வரும் ஏப்ரல் 6ஆம் தேதிவரை தள்ளிவைத்திருக்கிறது. முதலில் மார்ச் 24ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஈரானும் விடாப்பிடியாக பதில் தாக்குதல் நடத்தி வருவது மட்டுமின்றி, எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானின் பிடியில் இருந்து பிடுங்குவதற்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
கார்க் தீவை கைப்பற்ற...
அந்த வகையில், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றுவதற்கும், ஹார்முஸ் ஜலசந்தியைக்கு அருகில் இருக்கும் ஈரானின் கடலோர ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அமெரிக்க ராணுவம் தரை வழியான தாக்குதலுக்கு திட்டம்தீட்டி வருவதாக The Washington Post ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுகளை மேற்கொள்காட்டி The Washington Post இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் காலாட்படைப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த திட்டங்களுக்கு இன்னும் அதிபர் டிரம்ப்பின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
படைகளை இறக்குகிறதா அமெரிக்கா?
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக மற்றும் போர் கப்பல்களை குறிவைக்கக்கூடிய ஈரானின் ஆயுதங்களை கண்டுபிடித்து அழிப்பதற்காக, கார்க் தீவை கைப்பற்றவும், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பிற கடலோர பகுதிகளில் இருந்து திடீர் தாக்குதல் நடத்துவது குறஇத்தும் டிரம்ப் நிர்வாகம் விவாதித்து வருவதாக The Washington Post செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவம், ஒரு மாதம் வரை இழுக்காமல் சில வாரங்களிலேயே முடித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கார்க் தீவைக் கைபற்றவும், அங்குள்ள ஈரானின் ஆயுதங்களை தகர்க்கவும் சுமார் 2 மாதங்கள் வரை எடுக்கலாம் என்றும் The Washington Post ஊடகம் தெரிவிக்கிறது.
கார்க் தீவை கைப்பற்றுவது கடினம் அல்ல...
மேலும், இதுகுறித்து அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்க் தீவை கைப்பற்றுவதும், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள கடலோர பகுதிகளை கைப்பற்றுவதும், வணிக மற்றும் போர் கப்பல்களை தாக்கும் ஆயுதங்களை அழிப்பதும் ஈரானின் தலைமைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையின் போது இது அமெரிக்காவின் பேர வலிமையை அதிகரிக்கச் செய்யும் என்றார்.
மேலும் இது கடைசி நிமிடத் திட்டமிடல் ஏதும் இல்லை என்றும் இந்த நடவடிக்கைகள் என்பது முன்கூட்டியே ஒத்திகை பார்த்து, நன்கு ஆலோசிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில், "கார்க் தீவை கைப்பற்றுவது கடினம் அல்ல. அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதான் கடினமான பணியாகும். அமெரிக்க படைகள் அங்கு சென்றடைந்ததும் அவர்களை பாதுகாப்பது கடினம்" என அந்த அதிகாரி தகவல் தெரிவித்திருக்கிறார்.
வீரர்களுக்கு பறந்த உத்தரவு
சமீபத்திய அமெரிக்காவின் நகர்வுகளும் இந்த செய்தியை ஓரளவு வலுப்படுத்துகின்றன எனலாம். மார்ச் 26ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று அமெரிக்க மரைன் கார்ப்ஸ் ரிசர்வஸ் படையின் தளபதியிடம் இருந்து வெளியாகி உள்ளது. அதில் கடற்படை வீரர்கள் போர் ஏற்படும் சூழலுக்கு தயாராக இருக்குமாறு வலியுறுத்தி உள்ளது. அதாவது, எப்போது போர் வெடித்தாலும் அதற்கு தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அணிதிரட்டப்பட வாய்ப்புள்ளது என்பதால் வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தங்களை தயார்படுத்திக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆயுதங்கள், உபகரணங்களை சரிபார்த்து வைத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் USS Tripoli
USS Tripoli என்ற விமானம் தாங்கி போர் கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்குள் கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று நுழைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் 3,500 கடற்படை வீரர்களையும், மாலுமிகளையும் ஏற்றிச் செல்லும் திறன்கொண்டது. அதுமட்டுமின்றி 2,500 நீர்மூழ்கி கப்பல்கள், Seahawk ஹெலிகாப்டர்கள், F-35 போர் விமானம், Osprey tilt-rotor aircraft எனும் ஹெலிகாப்டர் போன்ற போர் விமானம் ஆகியவை உடன் USS Tripoli கப்பல் வருகை தந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் அமெரிக்காவின் படைகளுக்கு இது வலுசேர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் போர் நிறைவடையும் நிலையில் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு ஈரான் எவ்வாறு தயாராகி வருகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments