Ticker

6/recent/ticker-posts

100 ஆண்டுகளில் இல்லாத அளவு நிலநடுக்கம்... வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 188 ஆக அதிகரிப்பு! | Venezuela


venezuela earthquake | வெனிசுலாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிற்கு அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து 30 முறை நில அதிர்வு உணரப்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பயங்கரமான இந்த நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளன.

தலைநகர் கராகஸ், லா குவைரா ஆகிய பகுதிகள் பேரழிவு மண்டலங்களாக மாறியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும், வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக மாறியுள்ளது. ஏராளமான மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் சாலைகளில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன.

வீடு, உடமைகளை இழந்த மக்கள் சாலையோரத்தில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் மொபைல் சிக்னல்கள் இன்றி தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்க, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி வைத்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நகரின் முக்கிய பகுதிகளில் மீட்பு குழுவினர், தன்னார்வலர்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி உயிருக்குப் போராடுபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லா குவைரா நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் ஒருவர் தனது மகனை சல்லடை போட்டுத் தேடிய காட்சி வெளியாகி கண்கலங்க வைத்தது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய செல்லப்பிராணிக்கு மீட்பு குழு வீரர் ஒருவர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின் அதனை பாதுகாப்பாக மீட்டது நெகிழ்ச்சியடைய வைத்தது.

நிலநடுக்கத்தால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தின் தீவிரம் கருதி அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். கூகுள் தொழில்நுட்பத்தின் உதவியால் வெனிசுலா மக்களுக்கு நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அடுத்த சில நொடிகளிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலேயே சேதம் அதிகளவில் இருப்பதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை, ஆயிரத்தை கடக்கக் கூடும் என்று புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வெனிசுலாவில் இருந்து வரும் ஆரம்பக்கட்டத் தகவல்கள் நல்லதாக இல்லை என்றும் அந்நாட்டுக்கு உடனடியாக உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments